பிரதமர் ரணில் ராஜினாமா! – இலங்கை அரசியலில் புதிய திருப்பம்!

பிரதமர் ரணில் ராஜினாமா! – இலங்கை அரசியலில் புதிய திருப்பம்!

இலங்கையில் சமீபத்தில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில், ஐக்கிய தேசியக் கட்சியின் சஜித் பிரேமதாசாவை 13 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் இலங்கை பொதுஜன பெரமுன கட்சியின் சார்பில் போட்டியிட்ட கோத்தபய ராஜபக்‌சே தோற்கடித்தார். இதைத் தொடர்ந்து இலங்கையின் ஏழாவது ஜனாதிபதியாக ராஜபக்‌சே பொறுப்பேற்றார். தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று சஜித் பிரேமதாசா அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் ராஜினாமா செய்தார்.

இதைத் தொடர்ந்து பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவும் தன்னுடைய பிரதமர் பதவியை ராஜினாமா செய்துள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. அதிபர் தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்றே, பிரதமர் பதவியை ரணில் விக்ரமசிங்கே ராஜினாமா செய்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. பிரதமரின் ராஜினாமா கடிதம் புதிய அதிபர் கோத்தபய ராஜபக்‌சேவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ரணிலின் ராஜினாமா கடிதத்தைப் புதிய அதிபர் ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அரசு கலையும். வேறு எந்தக் கட்சிக்கும் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை இல்லையென்பதால் நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு தேர்தல் நடத்தப்படுவது ஒன்றே வாய்ப்பு.

தற்போது உள்ள நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் 2021-ம் ஆண்டு வரை உள்ளது. 4.5 ஆண்டுகள் ஆட்சி முடிந்துவிட்டால் அதிபர், தன்னுடைய அதிகாரத்துக்கு உட்பட்டு நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு தேர்தலை அறிவிக்கலாம். ஆனால், தற்போதைய அரசு அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம்தான் 4.5 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. அதற்கு முன்னரே ரணில் விக்ரமசிங்கே ராஜினாமா செய்துவிட்டார். ரணிலின் ராஜினாமா கடிதம் ஏற்கப்பட்டால் தேர்தல் நடைபெறும் வரை இடைக்கால பிரதமர் அதிபரால் நியமிக்கப்பட வாய்ப்புண்டு. அது நடக்கவில்லை என்றால் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை மூலம் நாடாளுமன்றம் கலைக்கப்படலாம். அடுத்தகட்ட நகர்வு என்ன என்பது ராஜினாமா கடிதம் ஏற்கப்படுவதைப் பொறுத்துத் தெரியவரும்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: