வடமாகாண சபையின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு மே 18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் நடைபெற உள்ளது. அத்துடன் இறுதி யுத்தத்தின் போது முள்ளிவாய்க்கால் மற்றும் அதன் அருகிலுள்ள பகுதிகளில் இறந்த பொது மக்கள் சிலரின் நினைவாக நினைவுக்கல் நடப்படவுள்ளது.
இறுதி யுத்தம் நடைபெற்ற இடத்தில் நினைவேந்தல் நிகழ்வு நடைபெறவுள்ள நிலையில் அந்த பகுதி மக்களுடன் இணைந்து நிகழ்வுக்கான ஏற்பாடுகள் செய்யும்பொருட்டு, சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், இந்த அஞ்சலி நிகழ்வில் மக்களை அழைத்து செல்வதற்கான இலவச போக்குவரத்து ஒழுங்குகளும் செய்யப்படவுள்ளன.
முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் இந்த நினைவுக் கல்லினை அமைப்பதற்கான வேலைகள் தற்போது இடம்பெற்று வருகின்றன. யுத்தத்தில் அகப்பட்டு மரணித்த பொதுமக்களின் நினைவாக குறித்த ஆலயத்தின் நிலப்பகுதியில் நினைவுக்கல் அமைக்கப்படவுள்ளது.
மேலும் இதன் முதல் கட்டமாக பொது மக்கள் சிலரின் நினைவாக நினைவுக் கற்களில் பெயர் பொறிக்கும் நடவடிக்கைகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
இறுதிக்கட்ட போரில் உயிரிழந்த போராளிகளை நினைவு கூரும் நிகழ்வுகள், மே மாதத்தில் தாயகம் முழுக்க உணர்வு பூர்வமாக நடைபெற்று வருகிறது. இதனிடையே முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை சிங்களம் குழப்ப திட்டமிட்டுள்ளனர் என தமிழ் உணர்வாளர்களுக்கு செய்திகள் வருகின்றன. இவ்வாறான உணர்வு பூர்வ நிகழ்வுகளை குழப்பும் வகையிலும், அதனை பயங்கரவாத நிகழ்வாக சித்தரிப்பதும், போரின் போது உயிரிழந்த தங்களது உறவுகளை நினைத்து தமிழ் மக்கள் அஞ்சலி செலுத்துகின்ற நிகழ்வினை தென்னிலங்கை சிங்கள ஊடகங்கள் இது போன்று செய்திகளை வெளியிட்டு, தெற்கு மக்களின் மனங்களில் தொடர்ந்தும் இனவாத சிந்தனைகளை வளர்த்தெடுத்துக் கொண்டிருக்கின்றன.
கடந்த 8 ஆண்டுகளாக முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வினை தமிழ் மக்கள் செயற்படுத்த முனைந்த போதெல்லாம் தடை ஏற்படுத்துவது போன்ற செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, தென்னிலங்கை ஊடகங்களின் கருத்துப் பரிமாற்றம் என்பது தமிழ் மக்களின் நினைவு கூறும் சுதந்திரத்தினையும் பறிக்கும் செயற்பாடாக அமைந்து விடுகிறது என பொது மக்கள் கவலைப்பட்டனர்.
பொதுவாக, ஒருவரை நினைவு கூறுவதென்பது, அடிப்படை மனிதவுரிமையாகும். ஆனால் இலங்கையில் அது பல ஆண்டுகளாக தமிழ் மக்களுக்கு மாத்திரம் மறுக்கப்பட்டு வருகின்றது. நல்லாட்சி மலர்ந்ததாக சொல்லும் இந்த காலகட்டத்திலும் கூட, மீண்டும் பொது மக்களின் நினைவு தினத்தினைக் கூட புலிகளை நினைவு கூறுவதாக காட்டுவதன் மூலம் அடிப்படை உரிமைகளையும் பறிக்கும் செயலாகவே பார்க்கப்படுகிறது. அத்துடன் சிங்கள தேசம் தமிழ் கைக்கூலிகளுடன் சேர்ந்து மே மாதத்தை களியாட்ட நிகழாவாக மாற்றப்பட்டு வருகிறது. இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு மக்கள் ஒத்துழைக்காது, ஈனச் செயல்களை புறக்கணிக்க வேண்டும் என்பது உலகத் தமிழர்களது கருத்தாக இருக்கும்.