ஐக்கிய அமெரிக்க இராஜாங்க திணைக்களம் வருடா வருடம் மனித உரிமை, நீதி, சமாதானம் மற்றும் பால்நிலை சமத்துவம் என்பவற்றுக்காக செயற்படும் பெண்களுக்கு அங்கீகாரம் அளித்து வருகின்றது.
அந்த வகையில், குறித்த விருதிற்காக ஊடகவியலாளர் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொட தெரிவாகியுள்ளார் என அண்மையில் செய்திகள் வெளியிடப்பட்டிருந்தன. இந்த நிலையில் இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் இது தொடர்பில் இன்றைய தினம் பின்வருமாறு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
சந்தியா எக்னெலிகொட மனோதிடமான சர்வதேச பெண்மணி என்ற இந்த விருதைப் பெற்றுக் கொள்வதற்காக உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 12 பெண்களுடன் இணைந்துள்ளார். அமெரிக்காவின் முதல் பெண்மனி மெலனியா ட்ரம்பினால் சந்தியாவுக்கு இந்த விருது இன்றைய தினம் வழங்கி வைக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விருதினை அவர் பெற்றுக் கொள்வார் என்றும் அவருக்கு தாம் வாழ்த்து தெரிவிப்பதாகவும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அதுல் கேசாப் கூறியுள்ளார்.
எக்னெலிகொட, தனது கணவனுக்காகவும், இலங்கையில் பல்வேறு இன சமூகங்களில் காணாமல் போனவர்களின் குடும்பத்திற்காகவும் தொடர்ந்து செயற்பட்டுள்ளார். எனவே அவருக்கு இந்த விருது வழங்கி வைக்கப்படும் என்றும், இலங்கை வாழ் அனைவருக்கும் உண்மையான, நிலையான சமாதானம் நிறைந்த பிரகாசமான எதிர்காலத்தை நோக்கி பயணிப்பவர்களுக்கு அமெரிக்க மக்கள் தொடர்ந்தும் ஆதரவளிப்பார்கள் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அதுல் கேசாப் குறிப்பிட்டுள்ளார்.
ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்.
2010ஆம் ஆண்டு எக்னெலிகொட காணாமல் போனதில் இருந்து தமது கேள்விகளுக்கு விடை தேடுவதற்காக சந்தியா, 90இற்கும் மேற்பட்ட தடவைகள் நீதிமன்றில் ஆஜராகி இருந்தார். யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள குடும்பங்களுக்கு உதவுவதற்காகவும் அதிக முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.
உண்மையை தேடுவது ஒரு குற்றச்செயல் அல்ல தீங்கிழைத்தவர்களை பாதுகாப்பது தான் குற்றம் என கருதும் சந்தியா எக்னெலிகொட தான் முகங்கொடுத்த பிரச்சினைகள் தொடர்பில் அமெரிக்காவில் உள்ள பல நகரங்களுக்குச் சென்று கலந்துரையாடல்களை மேற்கொள்வார் என அதுல் கேசாப் தெரிவித்துள்ளார்.