தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தில் தமது இன்னுயிர்களை ஈய்ந்த மாவீரர்களையும், பொதுமக்களையும் நினைவுகூரும் நிகழ்வுகள் தமிழர் தாயகப் பகுதிகள் எங்கும் நேற்று ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 27) உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டன. சுமார் ஏழு ஆண்டுகளுக்குப் பின் பொதுமக்கள் தமது உள்ளக் குமுறல்களை மாவீரர் துயிலும் இல்லங்களை நோக்கி வந்து கொட்டித் தீர்த்தனர். அஞ்சலி செலுத்தி அழுது புரண்டனர். இறந்தவர்களை நினைவுகூர்வதும், அவர்களுக்காக பெரும் குரலெடுத்து அழுது தீர்ப்பதும் மனிதனின் அடிப்படை உரிமை. அதனை, தொடர்ச்சியாக இலங்கை அரசு தடுத்து வந்திருக்கின்றன. அவ்வாறு இல்லையெனில் பாதுகாப்புக் கெடுபிடிகளை ஏற்படுத்தி மக்களை அச்சுறுத்தி வந்திருந்தன. இந்நிலையில், நேற்றைய மாவீரர் தின நிகழ்வுகள் மக்களின் பெரும் பங்களிப்போடு முன்னெடுக்கப்பட்டது. குறிப்பாக, இறுதி போருக்குப் பின்னராக கடந்த காலத்தில் மாவீரர்களை மாத்திரமல்ல, போரில் கொல்லப்பட்ட பொதுமக்களைக் கூட நினைவு கூறுவதற்கு தடை விதிக்கப்பட்டது. புலனாய்வாளர்களும், இராணுவமும் வீடுகள் வரை வந்து அச்சுறுத்தல் விடுத்துச் சென்ற வரலாறுகளும் உண்டு.
இந்நிலையில், தமிழர் தாயகப் பகுதிகளில் ஒருவிதமான மன அழுத்தம் நீடித்து வந்தது. அது, போருக்குப் பின்னரான சமூகம் ஒன்று எதிர்கொள்வதுதான். ஆனால், அழுவதற்கும் அஞ்சலி செலுத்துவதற்கும் கூட தடை விதிப்பது என்பது பெருமளவான மக்களை நடைப்பிணங்களாக மாற்றிவிட்டிருந்தது. அந்த நிலையில், மாவீரர்களை நினைவு கூறுவதற்காக நேற்று கடைப்பிடிக்கப்பட்ட நிகழ்வு முக்கியமானது. அதனை, இலங்கை அரசும் அதன் இயந்திரமும் வேண்டாவெறுப்பாக அனுமதித்திருக்கின்றது. அதற்கு, சர்வதேச அழுத்தமும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் எதிர்வரும் மார்ச் மாத அமர்வுகளும் காரணமாக இருக்கலாம். ஆனால், வேண்டாவெறுப்பாக அனுமதித்தாலும், அது தமிழ் மக்களின் அடிப்படை உரிமையாகும். அதனைப் பெற்றுக் கொள்வதற்காக போராடி பெற்றுக் கொண்டிருக்கின்றார்கள். நீண்ட நாட்களின் பின்னர் பெரும் வேகத்தோடு உறவுகளுக்காக அஞ்சலி செலுத்தியிருக்கின்றார்கள்.
போருக்குப் பின்னரான மஹிந்த ராஜபக்ஷவின் ஐந்து ஆண்டுகால ஆட்சி வடக்கு- கிழக்கில் குறிப்பாக தமிழர்கள் வாழும் பகுதிகளில் எவ்வளவு அச்சுறுத்தல்களை வழங்கியது என்பதை அறிவோம். அந்த அழுத்தங்களை விலக்கி சிறிய இடைவெளியொன்றின் தேவையை தமிழ் மக்கள் பெருவாரியாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். அதனை, கடந்த அதிபர் தேர்தலில் கிடைத்த வாய்ப்பின் ஊடாக பயன்படுத்திக் கொண்டார்கள். அந்த முடிவு, மனதிலுள்ள அழுகையை ஓங்கி ஒப்பாரியாக கொட்டுவதற்கானதும் ஆனது. அதனை நிராகரித்தலும், அதனை அடக்கி ஒடுக்கி வைத்துக் கொண்டிருப்பதும் எம் மக்களை மனநோயோடும், அடுத்த கட்டங்கள் குறித்து சிந்திப்பதையும் தடுத்து ஒரேயிடத்தில் தங்கியிருக்க வைக்கும். அது, காயங்களை குணப்படுத்தி புதிய பயணத்தை ஆரம்பிப்பதைத் தடுத்து, சீழ் பிடித்த காயங்களோடு சிரமப்படுவதற்க்கு ஒப்பானது.
தமிழ் மக்கள் எப்போதுமே தமது விடுதலைப் போராட்டம் குறித்து பெரும் நம்பிக்கையோடும், அர்ப்பணிப்போடும் இருக்கின்றார்கள். அதுவும், தாயகத்திலிருக்கின்ற மக்களின் ஓர்மம் அபரிமிதமானது. அதனை சரியான வழியில் கொண்டு செல்வதுதான் இப்போதுள்ள தேவை. அதை, மாவீரர் தின நிகழ்வுகள் உலகத்துக்கு வெளிச்சம் போட்டு காட்டியிருக்கின்றன.
இலங்கை அரசும், அதன் பாதுகாப்புத் தரப்பும் கண்கொத்திப் பாம்புகளாக பார்த்துக் கொண்டிருக்க அலை அலையாக மக்கள் தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக மாவீரர் துயிலும் இல்லங்கள், பொது இடங்கள், பல்கலைக்கழகங்கள், கோயில்கள், தேவாலயங்கள் என்று ஒருங்கிணைந்தார்கள். அது, அரசியல் வேற்றுமைகளுக்கு அப்பாலானது. அதனை, தனிப்பட்ட அரசியலுக்காக யார் பாவித்தாலும் அது அற்பமானது. அது, பிணங்களை விற்றுப் பிழைப்பதற்கு ஒப்பானது.
ஆனால், இந்த இடத்தில் ஒரு விடயத்தினைச் சுட்டிக்காட்ட வேண்டியிருக்கின்றது. மாவீரர்களை பகிரங்கமாக நினைவுகூர்வதற்கு அனுமதிக்கப்பட்ட விடயம் தென்னிலங்கையிலுள்ள இனவாதத் தரப்புக்களுக்கும், தமிழ் மக்களுக்குள் உள்ள சில குழுக்களுக்கும் பெரும் எரிச்சலை ஊட்டியிருக்கின்றது. தென்னிலங்கையின் இனவாதக் குழுக்களுக்கு புலிகள் மீதான வெறும்பும், தமிழ் மக்களினை அடக்கி ஆளவேண்டும் என்கிற மனநிலையின் சார்பில் அது எழுந்திருக்கின்றது. ஆனால், தமிழ் மக்களுக்குள் இருக்கின்ற சிறு குழுக்களுக்கு தனிப்பட்ட அரசியல் மற்றும் தனிமனித விரோதங்கள் சார்ந்து எழுந்திருக்கின்றது.
ஒவ்வொரு மாற்றத்திற்குப் பின்னாலும் அரசியல் உண்டு என்பது யதார்த்தம். எமது உரிமைகளையும் அரசியல் சதிராட்டத்தில் வென்றே அடைய வேண்டியிருக்கின்றது. அதன்போக்கில், மாவீரர் தினத்தினை ஏழு ஆண்டுகளுக்குப் பின்னர் பகிரங்கமாக கடைபிடிக்கப்பட்ட வெளியும் நாம் போராடிப் பெற்றது. அதன்பின்னால், வேறு தரப்புக்களும் பல்வேறு அரசியல் இருக்கலாம். அதனையெல்லாம் தாண்டி நாம் பெற்றது, எமது உறவுகளை நினைவு கூருவதற்கான கூட்டுரிமை. அது, எமது அடிப்படை உரிமைகளில் ஒன்று. அதனை யாருமே நிராகரிக்க முடியாதது.
இறுதி யுத்தத்தில் எனது மகன் இறந்தபோது அவனது முகத்தைக்கூட பார்க்க முடியாத நிலையில் மிகவும் கனத்த இதயத்தோடு தவித்த எனக்கு இன்றைய தினம் அவனது படத்தை வைத்து அவனது உறவுகளுடன் கூடி அஞ்சலித்தமை மனதிற்கு ஓர் திருப்தியாகவுள்ளதாக ந.அற்புதாம்பாள் என்னும் மூதாட்டி தெரிவித்தார். மாவீரர் தினத்தினை முன்னிட்டு நேற்று முன்தினம் முழங்காவில் துயலுமில்லத்தில் விளக்கேற்றிய யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மூதாட்டியே இவ்வாறு தெரிவித்தார்.
இது குறித்து அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில் ;
இறுதி யுத்தத்தில் நான் வவுனியாவில் இருந்தேன் எனது மகன்கள் வன்னியில் இருந்தனர். இதன்போதே ஒரு மகன் வன்னியில் இறந்தபோது அவனது முகத்தைக்கூட பார்க்க முடியவில்லை. அவன் இறந்த்தான செய்தி மட்டுமே எனக்கு கிடைத்தது. இந்த நிலையில் எனது கணவரும் இறந்தார். இவற்றினால் நான் மிகவும் கனத்த இதயத்தோடு தவித்த எனக்கு போராளிகளாக இருந்து மரணித்த மாவீர்ர்களிற்கு செய்யும் பல தினங்களை பார்த்தமகயினால் அவனது இறுதி ஆசையின் பிரகாரம் எனது மகனுக்கும் செய்யவேண்டும் அதுவும் நான் உயிரோடு இருக்கும்போதே இது நடக்குமா? இராணுவ அடக்குமுறையுடன் அணைத்து துயிலுமில்லமும் இடித்தழிக்கப்பட்ட நிலையில் எனது பிள்ளையை எண்ணி மனம் வெதும்புவேன். இந்நிலையிலேயே எனது மற்றுமோர் மகன் காலையில் தெரிவித்தார் இன்று துயிலுமில்லத்திற்குப் போகலாம் புறப்படுமாறு தினம் அழுது புலம்பும் எனக்கு வழமையாக கூறும் பொய் என்றே முதலில் எண்ணினேன். இருப்பினும் பலர் வருவதாக கூறவே நானும் இந்த வயதிலும் புறப்பட்டேன். இங்கு வந்தபோது கூழுமி நின்ற உறவுகளைபார்க்க என்னால் நம்ப முடியிவில்லை. இருப்பினும் இந்த முழங்காவில் துயலுமில்லத்தில் இன்றைய தினம் அவனைப் புதைக்காது விட்டாலும். அவனைப்போல உள்ளவர்கள் இடத்தில் மகனின் படத்தை வைத்து அவனது உறவுகளுடன் கூடி அஞ்சலித்தமை மனதிற்கு ஓர் நின்மதியாகவுள்ளதுடன் இன்னும் 10 வருடம் வாழுவன்போன்ற ஆரோக்கியமும் தெரிகின்றது.
இருப்பினும் அடுத்த ஆண்டிலாவது எனது மகனைப் புதைத்த இடத்தில் அந்த மண்ணை அனைத்து கட்டியழுதால் எனது உயிர் பிரந்தாலும் மகிழ்ச்சியாகச் செல்வேன் என்றார்.
உறவுகளின் கண்ணீரால் குளிப்பாட்டப்பட்ட துயிலுமில்லங்கள்- ந.லோகதயாளன் என்பவர் கூறுகையில்;
தமிழீழ மாவீர்ர் நாள் இந்த ஆண்டு அத்தெய்வங்களின் ஆலயங்களில் நடப்பதற்கான ஏற்படுகள் மூன்று தினங்களின் முன்பு கனகபுரம் துயிலுமில்ல புனரமைப்புடன் ஆவலைய் தூண்டுகின்றது. கனகபுரத்தின் பெயரை உச்சரித்த வாய்கள் , ஓய்வதற்கில் முழங்காவில் , வன்னிவிளாங்குளம் , தாளையடி , என நீண்ட பட்டியல் பண்டிவிரிச்சான் , ஆட்காட்டிவெளி, சாட்டியெனப் பட்டியலிடப்பட்டது. இதனையறிந்த மாவீர குடும்ப உறவுகள் உணர்வாளர்களின் வாய்களும் முனுமுனுத்தன. இருப்பினும் போவதற்கு அச்சம் இல்லாமலும் இல்லை. ஏனெனில் எந்த துயிலுமில்லமும் எம் மண்ணில் இன்னமும் குந்தியிருக்கும் படையினரின் முகாமில் இருந்து அதிக தூரமும் இல்லை. இவற்றையும் தாண்டி வடக்கின் மற்ற மாவட்டத்தில் இருந்தும் அதிகளவானோர் புறப்படத் தயாராகின்றனர். இவ்விடத்தில் எனக்கும் அவர்கள் போல் ஓர் உணர்வு , எனது பணி என்பவற்றிற்கும்மேலாக உடன் பிறப்பிற்கான கடனும் தேசியப் பணியும் வா வா எனக் கூவியழைத்தது. இத்தினத்தில் எனக்கான பணியாக பிறிதொருகடமையை அலுவலகத்தில் இட்டிருந்தபோதும் எனது தேசிய பணியின் முக்கியத்துவத்தினை நேரில் சென்று தெரிவித்து இப்படியில் இனைய சென்றிருந்தேன்.
கிளிநொச்சி மாவட்டம் முழங்காவில் துயிலுமில்லத்தில் இடம்பெறும் அவ்வரலாற்று காவிய நாயகர்களின் உறக்க மையங்களை நோக்கி மாலையில் நகர ஆரம்பித்தேன். செல்லும்போதே மனக்கண் முன்னே கூடப்படித்த , பழகிய மாவீர்ர்கள் முதல் உடன்பிறந்த , உடன்பிறவா சகோதரங்களின் எண்ணங்கள் பழைய நினைவுகளைத் தட்ட முழங்காவிலில் ஓர் ஆயிரம் உறவுகளாவது கூடுமே என்ற மன வைராக்கியத்துடன் பூநகரியை தாண்டி 5 மணியளவில் பயணிக்கின்றேன். முழங்காவிலை நெருங்கும் வேளையில் எனக்கே சந்தேகத்தை ஏற்படுத்தியது நான் எங்கு நிற்கின்றேன்.
எவ்வாறு இந்த மக்களுக்கு இந்த துணிவு கிட்டியது. அவ்வாறானால் நாம் தான் தாமதமாக எண்ணியவாறு துயிலுமில்லத்தினை அடைகின்றேன். அங்கே சுமார் ஆயிரம் பேர் கூடியிருந்தபோதும் சிவப்பு , மஞ்சள் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டு தேசியப் பாடல்கள் ஒலிக்கவிடப்பட்டிருந்தன.
வாசலில் நின்றவாறு வீதியின் இருமருங்கும் தேடுகின்றேன் . கண்ணுக்கு எட்டியதூரம் வரையிலும் ஓரு இராணுவச் சிப்பாயோ அல்லது போலிசாரையோ கானவில்லை, அனைவரும் சிவில் உடையிலேயே தமது படிகளில் மிகவேகமாக கைகளில் பூ மாலைகள் , கற்பூரம் , சாம்பிராணி சகிதம் ஓட்டமும் நடையுமாக வந்து நிதானமாக துயிலுமில்லத்தில் குவிகின்றனர்.
நானும் அம்மக்களுடன் உள்ளே நுழைகின்றேன். உள்ளே சென்றதும் எம்மை துயிலுமில்லம் மீண்டும் 2009ற்கே இட்டுச் சென்றது.
அங்கே தேசியப்பாடல்கள் ஒலித்தவண்ணம் இருக்க என் கண்ணில் முதலில் பட்டவர் ஓர் 75 வயது மூதாட்டி நிமிர்ந்து நடக்க முதுகில் தெம்பு இல்லாத போதும். மனதில் இருந்த தெம்பின் காரணமாக 1999ல் மரணித்த தனது மகனிற்கு இறப்பதற்கு முன்பு ஒரு தடவையாவது விளக்கேற்றி
அந்த இடத்தில் கதறி அழவேண்டும் என்றே எனது உயிரை இவ்வளவு நாளும் இறுகப் பிடித்திருந்தேன்.
இன்றைக்கு அந்த சந்தர்ப்பம் எனக்கு கிடைத்ததடா என கதறி அழும் தாயாரைத் தாண்டி சென்று கொண்டிருந்தேன். அப்போது அங்கே தமது தந்தை இரு சிறிவர்கள் ஓர் சமாதி இருந்த தடத்தின்மேல் புகைப்படத்தினை வைத்து கண்ணீர்மல்க தமது சமய முறைப்படி மன்றாடியபோது ஒரு கனம் நெஞ்சே வெடித்ந்து. இறைவா நாம் சிறுவர்களாயினும் இந்த நாட்டில் சப்பாத்து அடிமைகளிடம் சிக்கி சீரழியக்கூடாது என் தந்தையும் அவர் நண்பர்களும் வேண்டி இங்கு நடத்திய புனிதப் போரிலே வீரச்சாவடைந்த ஆயிரம் ஆயிரம் பேருடன் எம் தந்தையையும் இணைத்துக்கொண்டீர். அவரின் முகமறியாது வாழும் எமற்கு நீரே ஆறுதல் இந்த நித்தியவாழ்வில் பரிதவிக்கும் எமற்கும் இந்த கோர யுத்தத்தினையே பரிசலிக்காது எம்சந்த்தியை நிம்மதியாக வாழவிடும். இதனை இச்சிறுவர்களிற்கு யார் சொல்லியனுப்பினரோ அல்லது அவர்களின் என்னமோ நான் அறியேன்.
இதற்கிடையில் அங்கே ஒலிபரப்பாகும் பாடல்களிற்கிடையே ஒழுங்கு நடைமுறைகள் தொடர்பான அறிவிற்புக்கள் மற்றும் நேரம் என்பன அடிக்கடி செய்யப்பட்ட வண்ணமும் இருந்த்து. நேரம் 5.45ஐ தொட்டது. தற்போது துயிலுமில்ல வளாகமே மக்கள் வெள்ளம் ஆயிரம் கூடுவார்களா என்ற அச்சம் தாண்டி சிறுவர் , சிறுமியர் முதயவர. இளையோர் என சுமார் 5 ஆயிரத்தையும் தாண்டி மக்கள் வெள்ளம் வருகை தந்த வண்ணமேயிருந்த்து. அங்கே சமாதிகள் நடுகற்கள் இருந்த பிரதேசங்கள் மட்டுமன்றி ஏனைய இடங்களிலும் விளக்கேற்றும் வசதி ஏற்படித்தப்பட்டிருந்த்து. நானும் என் உறவிற்காக ஓர் இடத்தினை ஒதுக்கியவனாக என் பணியையும் தொடர்ந்தேன். நேரம் செல்ல செல்ல எல்லோர் இதயமும் கனத்தது. அந்த 5.50 நிமிடம் உலகமே எதிர்பார்க்கும் எம் தலைவனின் உரைவருமே இம்முறையும் அதுவராதா என என் காதுகளை கூர்மையாக்கினேன்.
நேரம் அதனை தான்டிச் செல்லச் செல்ல கண்கள் கண்ணீர் துளிகளையே சொரிந்த்து. இறுதிவரை உரை கேட்கவேயில்லை. அதனை அடுத்து 6.03 நிதிடத்திற்கு மணியோசை ஒலித்தது அங்கே ஓர் நிசப்த அமைதி நிலவியது. தற்போது 6.04 அகவணக்கமும் செலுத்தப்படுகின்றது. 6.05ற்கு பிரதான ஈகைச் சுடரினை யாழ். மாவட்டப்பாராளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை.சோ.சேனாதிராஜா ஏற்றிவைக்க அதனைத் தொடர்ந்து கூடிய உறவுகள் தமது உறவுகளிற்கான விளக்கினை ஏற்றுகின்றனர். நானும் என் சகோதரனுக்கான விளக்கினை ஏற்றியபடி என் பணியையும் தொடர்கின்றேன். ஆம் அந்த துயிலுமில்லத்திற்கே உரித்தான அந்த தேசிய வரிகள் அணைவரின் நெஞ்சையும் பிளக்கின்றது.
பாடலை செவிமடுக்க என் நெச்சிலேயே உறுதி இன்றி கை கால்கள் படபடக்க கதறி அழுதவாறே நகரந்து பணியில் ஈடுபடலானேன்
எங்கே …எங்கே .. ஒரு தரம் விழிகளை இங்கே..திறவுங்கள் …
ஒரு தரம் உங்களின் திரு முகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்
என்கின்ற 11 நிமிட அந்தப் பாடல் ஒலித்த வண்ணமே இருந்த்து.
அப்போது என்னருகில் ஓர் தாய் இரு சிறுவர்கள் கதறி அழுத வண்ணமிருக்க இரு சிறுவர்களும் முழங்காலில் நின்றவாறு கதற நெஞ்சுள்ளவர்கள் பொறுக்கும் நிலையில் இல்லை அக் கோரக் காட்சிகள். அதனையும் தாண்டி செல்கின்றேன். ஓர் தாய் கதறுகிறாள் தான் பெற்ற மகனுக்கு எந்த மார்பில் இருந்து பாலை ஊட்டினாலோ அந்த மார்பிலே அடித்து கதறினால். நீ மடியும்போதும் நான் அருகில் இல்லையடா நீ தூங்கும் இடத்திற்கும் எம்மை இதுவரை விடவில்லையே என்று நான் ஏறாத கோயில் இல்லை இன்று வந்தும் நீ நின்மதியாய் படுத்திருந்த இடத்தையும் இடித்தழித்த நிலையில் நான் பாக்கவேனும் . இந்தக் கொடுமைக்காட நான் இன்னும் உயிரோடு இருந்தேன். உன்னைத் தாட்ட இடம்மென உன் உறவுகள்தானேடா எனக்கு இந்த இடத்தையும் அடையாளம் காட்டினர் என கதறினாள். இவை அனைத்தையும் தாண்டி அங்கே எஞ்சியுள்ள எங்கள் முத்துக்களின் எஞ்சங்களை மட்டும் தரிசித்து விடைபெறத் தயாரானேன். அப்போதே எமது பழைய உறவுகளும் மன்னார் , வவுனியா திசையில் இருந்து வந்த ஓர் அணி இனம் கண்டு உரையாடுகின்றனர். அனைவரிடம் இருந்தும் விடைபெற்று பிரிய மனம் இன்றி வீடுநோக்கிப் பயணித்தேன்.