லைகா நிறுவனத்தின் ஞானம் அறக்கட்டளையின் சார்பில் இலங்கையின் வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 150 புதிய வீடுகளை தமிழ் மக்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்து கொண்டு, வீடுகளை மக்களிடம் வழங்குகிறார். வவுனியாவின் சின்ன டம்பன் கிராமம் மற்றும் புளியங்குளம் பகுதியில் உள்ள ஞானம் நகர் ஆகிய இடங்களில் 150 வீடுகளை, அப்பகுதியில் உள்ள வீடற்ற தமிழ் மக்களுக்கு இலவசமாகக் கட்டித் தருகிறது லைகா நிறுவனத்தின் ஞானம் அறக்கட்டளை. லைகா அதிபர் சுபாஷ்கரன் அல்லிராஜாவின் தாயார் ஞானாம்பிகை அல்லிராஜா அம்மாள் பெயரில் அமைக்கப்பட்டுள்ள அறக்கட்டளை இது.
ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்.
இந்த வீடுகளை மக்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி வரும் ஏப்ரல் மாதம் 9, 10 தேதிகளில் இலங்கையில் யாழ்ப்பாணம் நகரில் நடக்கிறது. இது தொடர்பாக லைகா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இலங்கைத் தமிழர்களுக்காக அங்கே நேரில் வந்து நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ள வேண்டும் என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களிடம் கேட்ட போது, உடனே மகிழ்ச்சியுடன் வரச் சம்மதித்தார். விழாவில் தனது கரங்களால், தமிழ் மக்களுக்கு இந்த புதிய வீடுகளை வழங்குகிறார் ரஜினிகாந்த். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இலங்கைக்கு வருகை தருவது இதுவே முதல் முறையாகும். இந்த நிகழ்ச்சியில் இலங்கையின் வடக்கு மாநில முதல் அமைச்சர் திரு. சி.வி விக்னேஸ்வரன், இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் திரு ஆர் சம்பந்தன், மலேசிய செனட் தலைவர் திரு எஸ். விக்னேஸ்வரன், பிரிட்டன் அனைத்துக் கட்சி தமிழ் பாராளுமன்ற குழுத் தலைவர் திரு ஜேம்ஸ் பெர்ரி ஆகியோர் பங்கேற்க உள்ளனர். அனைவரும் வருக!,” என்று கூறப்பட்டுள்ளது.