இலங்கை நாடாளுமன்றத்திலுள்ள முஸ்லிம் அமைச்சர்கள், ராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் தமது பதவிகளை உடன் அமுலுக்கு வரும் வகையில் ராஜினாமா செய்துள்ளனர்.
அலரிமாளிகையில் முஸ்லிம் நாடாளுமன்ற பிரதிநிதிகளினால் நடத்தப்பட்ட விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த விடயத்தை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கம் தெரிவித்தார்.
பிற்பகல் 4 மணிக்கு அறிவிக்கப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பு சுமார் 6 மணியளவிலேயே ஆரம்பமாகியது. இந்த ஊடகவியலாளர் சந்திப்பு ஆரம்பமாவதற்கு முன்னர், ஊடகவியலாளர்களிடம் கோரிக்கையொன்று முன்வைக்கப்பட்டது.
இந்த ஊடக சந்திப்பில் தாம் மாத்திரமே கருத்து தெரிவிப்பதாகவும், ஊடகவியலாளர்களுக்கு கேள்விகளை எழுப்புவதற்கான சந்தர்ப்பம் மறுக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்ட நிலையிலேயே இந்த ஊடக சந்திப்பு ஆரம்பிக்கப்பட்டது.
இதன்போது, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் கருத்துக்களை வெளியிட்டார்.
தமது இராஜினாமா விடயம் குறித்து, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் இடம்பெற்ற சந்திப்பினாலேயே, ஊடக சந்திப்பை ஆரம்பிப்பதற்கு தாமதம் ஏற்பட்டதாக அவர் குறிப்பிட்டார். தமது இராஜினாமா விடயத்தை பிரதமர் ரணில் விக்ரமசிங்க இறுதியில் ஏற்றுக் கொண்டதாகவும் ரவூப் ஹக்கீம் கூறினார்.
நாட்டின் நற்பெயரை காப்பாற்றுவதற்காகவும், அப்பாவி பொதுமக்களை பாதுகாப்பதற்காகவுமே இந்த தீர்மானத்தை தாம் எட்டியதாக அவர் குறிப்பிட்டார். ஏப்ரல் 21ஆம் தேதி நடாத்தப்பட்ட தற்கொலை தாக்குதல் சம்பவத்தை தாம் வன்மையாக கண்டிப்பதாகவும் அவர் கூறினார்.
முஸ்லிம் பெயர்களை வைத்துக்கொண்டு, அந்த பாதகத்தைச் செய்திருப்பதால், பாதுகாப்பு படையினருக்கு ஒத்துழைப்புக்களை வழங்கி, இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்களை முற்றாக ஒழிக்கும் படி தாம் வலியுறுத்தியுள்ளதாகவும் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். இந்த நிலையில், இலங்கை வாழ் முஸ்லிம் மக்கள் மீது கட்டவிழ்த்துப்பட்டுள்ள வன்முறைகளை தடுப்பதற்கு அரசாங்கம் தவறியுள்ளதாகவும், தற்போதைய சூழ்நிலையிலும் வெறுப்பு பேச்சுகளை கக்குவோர் வன்முறைகளை தூண்டி விட்டுக் கொண்டிருப்பதாகவும் அவர் கவலை வெளியிட்டார்.
நாட்டில் தற்போது காணப்படுகின்ற நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர தவறும் பட்சத்தில், எதிர்காலத்தில் பாரிய வன்முறை சம்பவங்களும், பாரிய உயிரிழப்புக்கள் மற்றும் சொத்து சேதங்களும் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார். அத்துடன், இந்த பதவி விலகலின் ஊடாக, தாம் அரசாங்கத்திற்கு வழங்கிய ஆதரவை விளக்கிக் கொள்வதாக கருதக்கூடாது எனவும் ரவூப் ஹக்கீம் கூறியுள்ளார்.
எதிர்வரும் காலங்களில் தாம் நாடாளுமன்றத்தின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களாக செயற்பட்டு, அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
நாட்டு மக்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க அரசாங்கம் முன்வர வேண்டும் எனவும் இதன்போது கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனாலேயே தாம் வகித்த பதவிகளை இராஜினாமா செய்ய தீர்மானித்ததாகவும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டார்.
இதேவேளை, இலங்கை மீது நடாத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற தெரிவுக்குழு மீது தாம் நம்பிக்கையிழந்துள்ளதாக கூறிய ரவூப் ஹக்கீம், இந்த சம்பவம் தொடர்பில் தாம் குற்றப் புலனாய்வு பிரிவினர் மீதே நம்பிக்கை கொண்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் விரைவில் அடையாளம் காணப்பட்டு, சட்டத்திற்கு முன்நிறுத்தி, முஸ்லிம் மக்களின் இருப்பை உறுதிப்படுத்த வேண்டும் என நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டாக, அரசாங்கத்திடம் இன்று கோரிக்கை விடுத்தனர்.
ராஜிநாமா செய்தோர் பெயர்களும், அவர்களது அமைச்சகமும் :
ரஊப் ஹக்கீம் – நகர அபிவிருத்தி, நீர்வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சு
ரிசாத் பதியூதீன் – கைத்தொழில், வாணிப அலுவல்கள், நீண்ட காலம் இடம்பெயர்ந்துள்ளவர்களின் மீள்குடியேற்றம், கூட்டுறவு அபிவிருத்தி, தொழிற்பயிற்சி மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சர்.
எம்.எச்.எம். ஹலீம் – அஞ்சல் அலுவல்கள், முஸ்லிம் விவகார அமைச்சு
கபீர் ஹாசிம் – நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி மற்றும் பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சர்
ராஜாங்க அமைச்சர்கள் :
எச்.எம்.எம். ஹரீஸ் – உள்ளுராட்சி, மாகாண சபைகள் அமைச்சு
பைசால் காசிம் – சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சு
எம்.எஸ்.எஸ். அமீர் அலி – கமத்தொழில், நீர்ப்பாசனம் மற்றும் கிராமியப் பொருளாதார அமைச்சு
அலிசாஹிர் மௌலானா – சமூக வலு வூட்டல் அமைச்சு
பிரதியமைச்சர்கள் :
அப்துல்லா மஹ்றூப் – துறைமுகங்கங்கள், கப்பல்துறை அமைச்சு