300 ஆவது நாளை எட்டியும் காணாமல் போனோரின் உறவினர்களின் போராட்டம், எந்தவொரு தீர்வும் இதுவரை கிடைத்தபாடில்லாமல் சென்று கொண்டிருப்பது வருத்தமளிப்பதாக உள்ளது.
ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்
வவுனியாவில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் போனோரின் உறவினர்கள் இன்று ஒரு கவனயீர்ப்புப் பேரணியொன்றை நடத்தினர். தமது உறவுகளுக்காக சுழற்சி முறையில் முன்னெடுக்கப்பட்டு வரும் உண்ணா நிலைப் போராட்டம், இன்றுடன் 300 நாட்களை எட்டியுள்ளது. இதனை வலியுறுத்தும் வகையிலேயே இந்தப் பேரணி முன்னெடுக்கப்பட்டது.
வவுனியா கந்தசுவாமி ஆலயத்தின் முன்பாக இன்று முற்பகல் வழிபாட்டில் ஈடுபட்ட பின்னர், வவுனியா கடை வீதி வழியாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் பேரணியாக சென்றனர். அதன் பின்னர், வவுனியா தபால் நிலையம் முன்பாக தமது போராட்டத்தைத் தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றனர்.
தமிழர் தாயகத்தில் படையினரிடம் கையளிக்கப்பட்ட நிலையிலும், அதற்குப் பின்னரும் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவினர்களின் உண்மை நிலையை வெளிப்படுத்தக் கோரி வடக்கு – கிழக்கின் பல பிரதேசங்களிலும் போராட்டங்கள் இடம் பெற்று வருகின்றன.
எனினும், இவை தொடர்பில் இலங்கை அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் “அரசாங்கத்தினை நம்பி ஏமாற்றப்பட்டுள்ளதாகவும், சர்வதேசம் தமக்கான தீர்வை பெற்றுத்தர வேண்டும்” எனவும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.