இலங்கை இறுதிப் போரில் மாயமானோரின் உறவினர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்!

இலங்கையில் முல்லைத்தீவு மாயமானோரது உறவுகளின் சங்கத்தினர் தொடர் போராட்டம் தொடங்கி மூன்று வருடங்கள் முடிந்திருக்கின்றன. இந்நிலையில், அவர்கள் இன்று (08-03-2020) கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர். முல்லைத்தீவு – பரந்தன் வீதியில் தொடங்கி ஊர்வலமாக செல்வபுரம் வீதி வழியாக முல்லைத்தீவு மாவட்டச் செயலகம் வரை சென்று இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், தமது உறவுகள் மீண்டும் தங்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் எனவும், இலங்கை அரசை சர்வதேச விசாரணைக்கு உட்படுத்த வேண்டும், ஓ.எம்.பி என்று சொல்லப்படுற மாயமானோருக்கான அலுவலகம் வேண்டாம் உள்ளிட்ட கோஷங்களை எழுப்பினர். மேலும், மாயமான தங்களது உறவினர்கள் தொடர்பான பதாதைகள் மற்றும் புகைப்படங்களுடன் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

மேலும், இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் இலங்கையின் வட, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த மாயமானோர் சங்கத்தின் சார்பில் ஐ.நா மனிதஉரிமை ஆணையருக்கு கோரிக்கைக் கடிதம் ஒன்றும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதில், வன்னி மாவட்ட முன்னாள் நாடளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்கந்தராசா, வட மாகாண சபை முன்னாள் உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், கந்தையா சிவநேசன், பிரதேச சபை உறுப்பினர்கள் என அரசியல் பிரமுகர்கள் கலந்துகொண்டனர், மேலும், இலங்கையில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மாயமானோரின் உறவினர்கள் என பலரும் கவன ஈரப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

  • விஜயரத்தினம் சரவணன்
Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: