இலங்கையின் வடக்கு மாகாணத்திலுள்ள ராணுவ முகாம்கள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அகற்றப்படாது என இலங்கையின் பாதுகாப்பு செயலாளரான ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவிக்கின்றார்.
மக்களுக்கு தேவையான உதவிகளை செய்யும் வகையிலேயே தமிழீழ விடுதலைப் புலிகளை தாம் வெற்றிக் கொண்டதாகவும், அதன்படி, மக்களுக்கு தாம் உதவிகளை வழங்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டின் தேசிய பாதுகாப்பு அத்தியாவசியம் என்பதை தாங்கள் அறிந்துள்ள நிலையில், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தேவைக்கு அதிகமாக நிலை நிறுத்தப்பட்டுள்ள ராணுவத்தையே அகற்ற வேண்டும் என தாங்கள் கோரியதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவிக்கின்றது.
அதைவிடுத்து, ராணுவத்தை முழுமையாக அகற்ற வேண்டும் என ஒருபோதும் கூறவில்லை என கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.
இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் 2009ஆம் ஆண்டு நிறைவடைந்ததன் பின்னர், யுத்தம் இடம்பெற்ற பகுதிகளில் தொடர்ந்து ராணுவம் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
மீண்டுமொரு யுத்த சூழ்நிலை ஏற்படுவதை தவிர்க்கும் வகையிலும், மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையிலும் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக கடந்த கால அரசாங்கங்கள் தெரிவித்து வந்தன.
இலங்கையிலுள்ள ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிடுகையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அதிகளவிலான ராணுவம் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக தமிழ் அரசியல்வாதிகள் குற்றம் சுமத்தியிருந்தனர்.
இந்த நிலையிலேயே வடக்கு பகுதிகளிலுள்ள ராணுவ முகாம்களை அகற்ற போவதில்லை என பாதுகாப்பு செயலாளர் தெரிவித்திருந்தார்.
அதனால் சில தரப்பினர் கூறுகின்ற காரணங்களை அடிப்படையாக மாத்திரம் கொண்டு, நாட்டின் தேசிய பாதுகாப்பை கருத்திற் கொள்ளாது செயற்பட முடியாது என அவர் தெரிவிக்கின்றார்.
ராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளமையினால் பொதுமக்களுக்கு எந்த விதத்திலும் ஆபத்து ஏற்படாது என கூறிய கமல் குணரத்ன, ராணுவ முகாம்களினால் மக்களுக்கு சேவைகளே கிடைப்பதாகவும் குறிப்பிட்டார்.
யுத்தக் காலத்திலும், அதற்கு பின்னரான காலப் பகுதிகளிலும் வடக்கு பகுதிகளிலுள்ள மக்களின் வாழ்வாதாரத்தை மேன்படுத்துவதற்காக இலங்கை ராணுவம் பாரிய ஒத்துழைப்புகளை வழங்கியதாக கமல் குணரத்ன தெரிவிக்கிறார்.