யாழில் மாபெரும் மருத்துவக் கண்காட்சி!

யாழில் மாபெரும் மருத்துவக் கண்காட்சி!

யாழில் மாபெரும் மருத்துவக் கண்காட்சி!

யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் 40 வது வருட பூர்த்தியை முன்னிட்டு மாபெரும் மருத்துவக் கண்காட்சி ஒன்று நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதுகுறித்து யாழ்.மருத்துவ பீட பீடாதிபதி மருத்துவர் சுரேந்திரகுமார் தலைமையில் இன்று பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்று நடைபெற்றுள்ளது.

குறித்த கண்காட்சி தொடர்பில் மேலும் தெரிவிக்கப்படுவது, வடமாகாண சுகாதார அமைச்சுடன் இணைந்து, உள்நாட்டு, வெளிநாட்டு யாழ் மருத்துவபீட பழைய மாணவர் சங்கங்கள் மற்றும் இவலூஷன் பிறைவட் லிமிட்டடின் பங்களிப்போடு நடத்தப்படவுள்ளது.

இந்த கண்காட்சி நாளை 4ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்டு, எதிர்வரும் 5ம், 6ம் மற்றும் 7ம் தேதிகளில் யாழ் மருத்துவபீட வளாகத்தில் நடைபெறவுள்ளது.

கடந்த 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்த கண்காட்சி ஐந்து வருடத்திற்கு ஒரு முறை நடத்தப்படும். இக்கண்காட்சியின் முதன்மை நோக்கமாக மருத்துவபீட மருத்துவதுறையின் நவீன வளர்ச்சிகள், சிறந்த நடைமுறைகள் மற்றும் ஆய்வு முடிவுகள் பற்றிய விழிப்புணர்வுகளை மக்களுக்கு வழங்கல், முறையான பழக்கவழக்கங்கள், வாழ்க்கைமுறை மேம்படுத்தல் பற்றிய முக்கிய சுகாதார தகவல்கள் மற்றும் பிரதான தொற்று நோய்களான நீரிழிவு நோய், உயர்குருதியமுக்கம், பாரிசவாதம், இருதய நோய்கள், நாட்பட்ட சுவாசநோய், புற்றுநோய்கள் மற்றும் ஏனைய முக்கிய நோய்கள் பற்றிய விழிப்புணர்வை வழங்கவும் வட மாகாண மக்களுக்கு இலங்கையில் கிடைக்கக்கூடிய சுகாதார சேவைகள் பற்றி விளக்கவும், பாடசாலை மாணவர்களுக்கு சுகாதார விஞ்ஞானம் சார்ந்த அறிவையும், ஆற்றலையும் மேம்படுத்தவும், இளைஞர்களுக்கு சுகாதார துறைசார் தொழில் வாய்ப்புக்களை தேர்ந்தெடுப்பதற்கான வழிகாட்டல்களை வழங்கவும் இந்த மருத்துவ கண்காட்சி ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

கண்காட்சியில் முக்கியமாக, மக்களின் வாழ்க்கைத்தரமும் சுகாதார நிலையையும் உயர்த்தப்படுத்தல், உணவுப்போசாக்கின் தரம் உயர்த்தப்படுத்தல், நோய்நிலைமைகளையும் அவற்றை தடுத்தல் சம்மந்தமான அறிவு மேம்படுத்தப்படல், தொற்றா நோய்களின் அதிகரிப்பு குறைக்கப்படுதல், பாடசாலை மாணவர்களின் உயிரியல் மற்றும் விஞ்ஞானம் தொடர்பான அறிவு மேம்படுத்தப்படல், சுகாதார துறை சார்ந்த அறிவூட்டல் மூலம் சுகாதார துறைக்கு பொருத்தமானவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுதல் என்பன எதிர்பார்க்கப்படுகின்றன.

மேற்படி கண்காட்சியானது அடிப்படை உயிரியல் விஞ்ஞானம், நடைமுறை சவால்கள், நவீன மருத்துவ தொழில்நுட்பம், துறை வழிகாட்டல், குழந்தை, இளமைப்பருவ, வளர்ந்தோர், மற்றும் வயோதிப உடல், உள, ஆரோக்கியமும் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் எனும் பிரதான தலைப்புகளிலும் அதன் முலமாக பல உபதலைப்புகளிலும் காட்சிபடுத்த உள்ளனர்.

அத்துடன், மருத்துவம் சார்ந்து நின்றுவிடாது கண்காட்சியை முன்னிட்டு புகைப்படப்போட்டி, பாடசாலை மாணவர்களுக்கான வினா விடை போட்டியும் அவற்றிற்கு பெறுமதியான பரிசில்களும் வழங்கப்படவுள்ளன.

வயது எல்லைகளின்றி அனைவரும் வருகை தந்து பயன்பெறக்கூடிய வகையில் கண்காட்சியானது வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் காட்சிப்படுத்தல்கள், விழிப்புணர்வுகள், விளக்கவுரைகளோடு மட்டும் நின்றுவிடாமல் இலவச அடிப்படை மருத்துவ பரிசோதனைகள் அதனூடாக விளக்கங்களும் தேவைப்படின் மேலதிக பரிசோதனைகள் பெற்றுக் கொள்ளக்கூடிய இடங்களும் இங்கு விளங்கப்படுத்தப்படவுள்ளன. எனவே மிகுந்த பொருட்செலவுடனும், நேரச்செலவுடனும் சமுதாய நலன்கருதி நடத்தப்படும் இம்மாபெரும் மருத்துவக்கண்காட்சியில் கலந்துகொண்டு பயன் பெருமாறும் யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்கள் அனைத்து தரப்பினரிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:

?>