இலங்கை பிரதமராக முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே பதவி ஏற்றுள்ளார். அதிபர் சிறிசேனா முன்னிலையில் அவர் பதவி பிரமாணம் எடுத்துக்கொண்டார்.
இலங்கை பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கே நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே அதிபர் சிறிசேனா முன்னிலையில் பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டுள்ளார். ஈழத் தமிழர்களை இனப்படுகொலை செய்த குற்றச்சாட்டுக்கு ஆளான மகிந்த ராஜபக்சே, ஜனவரி மாதம் வரை அரசியலிலிருந்தே ஒதுக்கப்பட்டிருந்த நிலையில்தான் இருந்தார். இதன் பின் பிப்ரவரி மாதம் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் தனிக் கட்சி ஆரம்பித்துப் போட்டியிட்ட ராஜபக்சே சுமார் 44 சதவிகித வாக்குகளுடன் பெரும்பான்மையான இடங்களைக் கைப்பற்றினார். அன்று முதலே தீவிர அரசியலில் மீண்டும் ஈடுபட்டார். உள்ளாட்சித் தேர்தலில் அதிக இடங்களைக் கைப்பற்றிய அடுத்த மாதமே ரணில் மீது இலங்கை நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானமும் கொண்டு வந்தார். இந்தநிலையில் தான் இன்று ராஜபக்சே பிரதமராக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே 2005-ம் ஆண்டு முதல் முறையாக இலங்கை அதிபரானார். இந்தக் காலகட்டங்களில்தான் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் தீவிரப்படுத்தப்பட்டது.
தொடர்ந்து 2010 தேர்தலில் போட்டியிட்டு இரண்டாவது முறையாக இலங்கை அதிபரானார். இலங்கையில் ஒருவர் இரண்டு முறை மட்டுமே அதிபராக முடியும். இதற்கிடையே, 2010-ம் ஆண்டு இந்தச் சட்டத்தை மாற்றிய ராஜபக்சே மூன்றாவது முறையாக 2015-ம் ஆண்டு அதிபர் பதவிக்கு போட்டியிட்டார். ஆனால், இந்த முறை அவருக்கு மக்கள் வாய்ப்பளிக்கவில்லை. அவர் தோல்வியடைந்ததை அடுத்து இலங்கையின் புதிய அதிபராக மைத்திரி பால சிறிசேனா பதவியேற்றார்.
அவர் பதவி ஏற்றதும், ராஜபக்சே கொண்டுவந்த சட்டத்தை மாற்றியமைத்தார். சிறிசேனா அமைச்சரவையில் பிரதமராக முன்னாள் அதிபர் ரணில் விக்கரமசிங்கே பதவி ஏற்றுச் செயல்பட்டு வந்தார். இந்நிலையில் இன்று திடீரென பிரதமராக இருந்த ரணில் விக்கரமசிங்கே அதிரடியாக நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக மகிந்த ராஜபக்சே பிரதமராகப் பதவி ஏற்றுள்ளார். அதிபர் அலுவலகத்தில் நடந்த விழாவில் ராஜ்பக்சேவுக்கு சிறிசேனா முன்னிலையில் பிரதமராக ராஜபக்சே பதவி ஏற்றுக்கொண்டார். இந்தத் திடீர் மாற்றத்துக்குக் கூட்டணி கட்சியில் ஏற்பட்ட பிளவே காரணம் எனக் கூறப்படுகிறது.
ரணில் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் அதிபர் மைத்திரிபால சிறிசேனாவின் இலங்கை சுதந்திர கட்சிகள் கூட்டணி அமைத்தே இலங்கையில் ஆட்சி நடத்தி வந்தன. இந்தக் கூட்டணியில் பிளவு ஏற்படவே, சுதந்திர கட்சியைச் சேர்ந்த மகிந்த ராஜபக்சே மீண்டும் பிரதமராக்கப்பட்டுள்ளார். முன்னதாக கடந்த மார்ச் மாதமே ரணிலை மாற்ற வேண்டும் என இலங்கை நாடாளுமன்றத்தில் ராஜபக்சே நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.