உலகின் எந்த மூலையில் அகதியாக சென்றாலும் தமிழர்க்கு வாழ்வு உண்டு. ஆனால் அன்னை தமிழகம் என்ற இந்தியாவின் அடிமை தேசத்திற்கு சென்றால்…..வாழவும் முடியாத சாகவும் முடியாத கொடிய அவல வாழ்வு மட்டுமே பரிசாகும். இந்தியாவில் அண்மையில் அடைக்கலம் வந்த ரொஹிங்யா அகதிகள் உரிமைகள் கூட மதிக்கப்படுகின்றன. ஆனால் 35 ஆண்டுகளாக அகதி வாழ்வு வாழும் ஈழ தமிழர்களின் உரிமைகள் மதிக்கப்படுவதில்லை.
ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்
ஆஸ்திரேலியா பாராளுமன்றத்தில் உரையாற்றிக் கொண்டிருப்பவர் ஒரு ஈழத் தமிழர். அவர் பெயர் சமந்தா ரட்ணம். இவருடைய குடும்பம் அகதியாக ஆஸ்திரேலியா சென்றது. அங்கு அவர் குடியுரிமை பெற்றார், கல்வி கற்றார். தற்போது ஒரு கட்சியின் தலைவியாக உள்ளார்.
அகதியாக சென்றவர் கவுன்சிலராக, மேயராக இருந்து தற்போது பாராளுமன்ற உறுப்பினராகி (MP) உள்ளார்.
நளினியின் மகள் அரித்ரா, இந்திய தாய்க்கு, இந்திய சிறையில் பிறந்தவர். சட்டப்படி அவருக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இந்திய குடியுரிமை மட்டுமல்ல அவர் சிறையில் இருக்கும் தன் தாய் தந்தையரைப் பார்ப்பதற்கு இந்திய விசா கூட மறுக்கப்படுகிறது.
லண்டனில் தற்போது இருக்கும் அரித்ராவுக்கு பிரித்தானியக் குடியுரிமை வழங்கப்பட்டிருப்பதுடன் அவர் மருத்துவக் கல்வி பெறுவதற்குரிய வாய்ப்பும் வழங்கப்பட்டது.
அரித்ராவின் தாய் தந்தையர் ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறை வைக்கப்பட்டிருப்பதால்தான் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது என சிலர் நினைக்கக்கூடும். அப்படி நினைப்பவர்களுக்கு இன்னொரு தகவலையும் தெரியப்படுத்த விரும்புகிறேன்.
தமிழக அகதி முகாமில் இருக்கும் நந்தினி என்று ஒரு அகதி மாணவி மருத்துவக் கல்விக்குத் தேவையான புள்ளிகள் எடுத்திருந்தும் அவர் அகதி என்பதால் அவருக்கு மருத்துவக்கல்வி வாய்ப்பு மறுக்கப்பட்டது.
இந்த மாணவியோ அல்லது இவரின் தாய் தந்தையரோ எந்த குற்றமும் செய்யவில்லை. எந்த வழக்கும் இவர்கள் மீது இல்லை. இருப்பினும் அகதி என்பதால் இவருக்கான மருத்துவ கல்வி வாய்ப்பு இந்திய அரசால் மறுக்கப்பட்டது. இவர் தனக்கு நீதிகோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால் “ஈழத்தாய்” ஜெயா அம்மையார் இரக்கம் காட்டவேயில்லை.
ஒரு ஈழ அகதிப்பெண் ஆஸ்திரேலியா சென்றதால் அங்கு உயர் கல்வி கற்று MPயாகிறார்.
இன்னொரு பெண் சிறையில் பிறந்திருந்தாலும் லண்டன் சென்றதால் அங்கு கல்வி பெற்று தற்போது டாக்டராக இருக்கிறார்.
ஆனால் இன்னொரு மாணவி இந்தியா சென்றதால் தேவையான புள்ளிகள் எடுத்திருந்தும் அகதி என்று கூறி கல்வி வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளார்.
லண்டன், ஆஸ்திரேலியா நாடுகள் அகதியாக வந்த தமிழர்களுக்கு கல்வி, வேலை மட்டுமல்ல குடியுரிமையும் வழங்குகின்றன. ஆனால் தொப்புள்கொடி உறவுநாடு என்று நம்பிச் சென்ற இந்தியாவோ குடியுரிமை மட்டுமன்றி கல்வியைக் கூட தர மறுக்கிறது.
சுகாதாரமற்ற வாழ்விடங்கள், சுதந்திரமாக நடமாட அனுமதிக்காத தடைகள், உயர் கல்வி கற்றோ, வேலைக்கு சென்றோ குடும்ப பொருளாதாரத்தை கட்டி எழுப்ப முடியாத சூழல், சமூக உளவியல் தாக்கங்களால் நிகழும் தற்கொலைகள், பாலியல் துன்புறுத்தல்கள் என்பன தமிழ்நாட்டில் 1983 தொடக்கம் வாழும் ஒரு இலட்சம் வரையான ஈழத்தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் எண்ணிலடங்காதவை..
தமிழ்நாட்டு அகதி முகாம்களில் வாழும் ஈழத்தமிழ் அகதிகளில் 40 சதவீதமானவர்கள் 18 வயதிற்குக் குறைவானவர்களாக உள்ளதாக அறிக்கைகள் உறுதிப்படுத்துகின்றன. இவர்களின் எதிர்காலம் இருள்மயமாக உள்ளது.
இவர்களில் 28,500 பேர் வரை நாடற்றவர்கள் எனும் நிலையில் வாழ்கின்றனர்.
தமிழ்நாட்டின் 107 முகாம்களில் வாழும் 62,000 வரையான ஈழத்தமிழ் அகதிகள் இந்திய மத்திய அரசாங்கம் மற்றும் மாநில அரசாங்கத்திடமிருந்து பல்வேறு நிவாரணங்களைப் பெற்றாலும் அவை அவர்கள் வாழ்வாதாரத்திற்கு போதுமாக இல்லை என்பதோடு அவர்கள் வேலைக்கு செல்லவும் அனுமதிக்காததால் அடிமை நிலையிலேயே வாழ்கிறார்கள்.
உலகில் மற்றைய நாடுகள் ஈழ அகதிகளுக்கு காட்டும் கருணையில் துளியும் இந்தியா காட்டாத கொடுமையானது பாரிய மனித உரிமை மிதிப்பாகும். என்று விடிவு வரும் தமிழகத்தில் உள்ள ஈழ அகதிகள் வாழ்வில் என இன்று வரை தெரியவவில்லை.
இத்தனைக்குப் பிறகும் இந்தியா ஈழத் தமிழ் மக்களுக்கு உதவும் என்று கூறிக்கொண்டு திரிபவர்களை என்னவென்று அழைப்பது?