இலங்கையில் மனித புதைகுழியென சந்தேகிக்கப்படும் இடத்தில் அகழ்வுப் பணிகள்!

இலங்கையில் மனித புதைகுழியென சந்தேகிக்கப்படும் இடத்தில் அகழ்வுப் பணிகள்!

இலங்கையில் மனித புதைகுழியென சந்தேகிக்கப்படும் இடத்தில் அகழ்வுப் பணிகள்!

இலங்கையின் வடக்கு மாகாணம் மன்னார் பிரதேசத்தில் மனித புதைகுழியென சந்தேகிக்கப்படும் இடத்தில் இன்று 43-ஆவது தடவையாக அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

மன்னார், பழைய ”சதொச” கட்டடம் இருந்த இடத்தில் மனித புதைகுழியொன்று இருப்பதாக சந்தேகத்தின் பேரில் இந்த இடத்தில் அகழ்வு பணிகள் நடந்து வருகின்றன.

இரண்டு மனித எச்சங்களைச் சூழ்ந்திருந்த களிமண்கள் அகற்றப்பட்டு, முதிர்ந்த மனித எச்சமும், அதன் அருகே சிறிய எலும்புகளைக் கொண்ட மனித எச்சமும் மீட்கப்பட்டன. இந்த எலும்புக் கூடுகள் ஒரு தாயினதும், பச்சிளம் குழந்தையினதுமாக இருக்கலாம் என்ற சந்தேகங்கள் வலுத்துள்ள போதிலும், அதனை உடனடியாக உறுதிப்படுத்த முடியாது என விசாரணைகளை நடத்தி வரும் சிறப்பு நீதிமன்ற சட்ட மருத்துவ அதிகாரி எஸ்.ராஜபக்ச தெரிவித்தார்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்

உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா?

மன்னார் மனித புதை குழியென கருதப்படும் இந்த இடத்தில் இருந்து இது வரை 60 மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன.

கடந்த மார்ச் 26-ஆம் தேதி இந்த இடத்தில் இருந்த கட்டடம் இடித்து அகற்றப்பட்டது. இதன் போதுதான் புதைக்கப்பட்டிருந்த மனித எச்சங்கள் சில கண்டுபிடிக்கப்பட்டன.

இதன் பின்னர் நீதிமன்ற உத்தரவின் பேரில் குறித்த இடத்தில் அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. இதுவரை மீட்கப்பட்ட மனித எலும்புக் கூடுகளில் 40 மண்டையோடுகள் வெவ்வேறாக பிரிக்கப்பட்டுள்ளதாக அகழ்வுப் பணிகளில் உள்ள நிபுணர்கள் தெரிவித்தனர்.

இதுவரை மீட்கப்பட்ட மனித எச்சங்களை உடற்கூற்றுப் பரிசோதனைக்காக அமெரிக்காவிலுள்ள புளோரிடாவுக்கு அனுப்பி வைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதற்காக நீதியமைச்சின் அனுமதியை கோரியுள்ளதாக சட்டமருத்துவ அதிகாரி எஸ்.ராஜபக்ச குறிப்பிட்டார்.

இந்த விசாரணைகளின் இரண்டாவது கட்டமாக, தற்போது தோண்டப்படும் பகுதிக்கு அருகிலுள்ள மற்றுமொரு இடத்திலும் புலன் விசாரணைகளை நடத்த அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.

தொல்பொருளியல் அதிகாரிகள், அரச ரசாயனப் பகுப்பாய்வு அதிகாரிகள், நீதிமன்ற சட்டமருத்துவ அதிகாரி ஆகியோரின் மேற்பார்வையில் இந்த விசாரணைகளும், அகழ்வுப் பணிகளும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மன்னாரில் குறித்த இடத்தில் கிடைத்துள்ள மனித எச்சங்கள் எக்காலத்திற்குரியவை என்பது குறித்து இன்னமும் ஒரு முடிவுக்கு வரவில்லையென அகழ்வுப் பணிகளில் ஈடுபட்டுள்ள களனி பல்கலைக்கழகத்தின் தொல்பொருளியல் பிரிவின் பேராசிரியர் ராஜ் சோமதேவ தெரிவித்தார்.

மீட்கப்பட்டுள்ள மனித எச்சங்களில் ஒரு பகுதி சீராக புதைக்கப்பட்டுள்ளதை அவதானிக்க முடிந்த அதேவேளை, மற்றைய பகுதி ஒழுங்கற்ற விதத்தில் புதைக்கப்பட்டுள்ளதாக பேராசிரியர் மேலும் தெரிவித்தார்.

இலங்கையில் 88 – 89 காலப்பகுதியில் இளைஞர்களின் கிளர்ச்சி, போர் ஆகியவற்றுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மனித புதைகள் வடக்கிலும், தெற்கிலும் பல இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டிருந்தன.

தெற்கில் சூரியகந்த, வனவாசல, மாத்தளை ஆகிய பிரதேசங்களிலும் வடக்கில் செம்மணி, மிருசுவில், யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கு, மன்னார் ஆகிய பிரதேசங்களிலும் மனித புதைகள் கண்டெடுக்கப்பட்ட இடங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

மனித புதைகுழி ஒன்றையும், சுடுகாடு ஒன்றையும் எவ்வாறு வேறுபடுத்தி அடையாளப்படுத்துவது என்பது குறித்து பேராசிரியர் ராஜ் சோமதேவ விளக்கமளித்தார்.

”சமூகத்தில் சட்டரீதியான, சம்பிரதாயபூர்வமான சுடுகாட்டில் மனித உடலை புதைக்கும் முறையொன்று இருக்கிறது. அந்தந்த சமய, கலாசாரங்களின் அடையாளங்களுடன் அவை புதைக்கப்படுகின்றன. உடல்களைப் புதைக்கும் போது செய்யப்படும் சடங்குகள், புதைக்கப்படும் திசைகள் என பல விடயங்கள் இருக்கின்றன. மனித புதைகுழி என்றால் இந்த அடையாளங்களைக் காண முடியாது. சடங்குகள் பின்பற்றப்படாது புதைக்கப்பட்ட இடங்களில் ஒழுங்கற்ற தன்மை இருக்கும்” என்று பேராசிரியர் விளக்கமளித்தார்.

இதற்கு முன்னர் மன்னார் திருக்கேஸ்வரம் கோயிலுக்குச் செல்லும் வீதியில், நீர்குழாய் அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்ட போது சுமார் 85 மனித எலும்புக்கூடுகளின் எச்சங்கள் மீட்கப்பட்டன.

இந்த எலும்புக்கூடுகள் குறித்தும், அந்த இடம் குறித்தும், அந்நாளில் அநுராதபுரம் மருத்துவமனையின் விசேட நீதிமன்ற சட்டமருத்துவ அதிகாரியாக பணியாற்றிய டி.எல்.வைத்தியாரத்ன விசாரணைகளை முன்னெடுத்திருந்தார். ”முன்னொரு காலத்தில் குறித்த இடம் சுடுகாடாக இருந்துள்ளது என மேலதிக விசாரணைகளில் தெரிய வந்ததாக” சட்ட மருத்துவ அதிகாரி நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:

?>