கடந்த பல வருடங்களாக, எமது மக்களின் விடுதலைக்காக போராடிக் கொண்டு இருக்கிறோம். அத்துடன் எமது மக்களின் சுய நிர்ணய உரிமைக்காகவும் போராடிக் கொண்டு இருக்கிறோம். ஆனால், நாம் இங்கு ஓர் உண்மையை விளங்கி கொள்ள முயற்சிக்க வேண்டும். எமது மக்களென நாம் “தமிழ் பேசும் மக்களை மாத்திரம்” கருத்தில் கொண்டு செயற்படுதல், ஒரு போதும் பூரண விடுதலைக்கு வழி வகுக்காது. சகல மொழி பேசும், சகல இன மக்களும், சகல வலி உணர்வுள்ள உயிர்களும், எமது சக உயிர்களே. ஆக சகல உயிர்களின் பூரண விடுதலையை வென்றெடுப்பதற்காக போராடுவதே, உண்மையான விடுதலை போராட்டமாக இருக்கும். இப்பாடத்தினை தான், தமிழீழத்திற்கான எமது கடந்த பல வருடமாக நடைபெற்று வரும், வலி மிகுந்த போராட்டம், உணர்த்தியது மட்டும் அல்லாமல், கற்றும் தந்தது.
ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்
நாம் கட்டியெழுப்பப் போகும் தமிழீழத்தில் இருந்து இக்கட்டுரையை வரைகிறேன் என்பது மனதை மகிழ்விக்கின்றது. நாம் கட்டியெழுப்பும் தமிழீழத்தில் எல்லைகள் கிடையாது. எவ்வுயிரும், எமது தமிழீழத்தில், எங்கும், எப்போதும், பூரண சுதந்திரத்துடன் வாழ முடியும். எமது தமிழீழத்தில் ஒருவரை ஒருவர் ஆள முடியாது. ஆனால், ஒருவருடன் ஒருவர், அன்புடன் வாழ முடியும். ஏன் சொல்லப் போனால், தமிழீழத்தை நிர்வகிப்பதற்கு என அரசு கூட கிடையாது. ஏனெனில் இங்கு வாழும், வாழப் போகும் மக்கள், தமது பொறுப்பினை உணர்ந்து, அனைவரும் இணைந்து, தமக்கு அவசியமானவற்றை, தாமே கட்டியமைத்து கொள்வர்; கட்டியமைத்துக் கொள்வதற்கான பூரண சுதந்திரத்துடன் வாழ்வர். “இன்ன இன்ன உரிமைகள் உண்டு” என்பது பற்றி, பேச வேண்டிய அவசியம் கிடையாது; ஏனெனில், எந்த உயிரினதும் உரிமைகளும் மறுக்கப்படாத வகையில், சொல்லப் போனால், “உரிமை” என்பதனை என்னவென்று அறியாமலே மக்களும், சகல உயிர்களும் அன்புடன் வாழக் கூடிய தமிழீழத்தினை நாம் கட்டியெழுப்பி வருகிறோம்.
ஆகவே, அன்பான எமது மக்களே, ஒரு செய்தியினை, நாம் தெளிவாக உணர்ந்து கொள்ள கடமைப்பட்டுள்ளோம். நாமோ, ஏனையவர்களோ, ஒரு போதும், தோற்றதும் இல்லை; தோற்கடிக்கப்பட்டதும் இல்லை. “தோல்வி” பற்றி பேசப்படும் இடங்களில், “மனிதமும், அன்பும் மாத்திரமே, உண்மையில் தோற்றுவிட்டது; தோற்கடிக்கப்பட்டது” என்பதனை நாம் தெள்ளத் தெளிவாக உணர்ந்து கொள்ள வேண்டும். “பூரணமாக விடுதலை பெற்ற தமிழீழத்தில்”, வாழ விரும்பும், ஒவ்வொருவரும், இவ்வுலகின் ஒவ்வொரு பகுதினையும், தமிழீழமாகவே காண்பர். இவ்வுலகில், சகல உயிர்களுக்கும், நடைபெறும் அநியாயத்தினை, தனக்கு நடக்கும் அநியாயமாகவே கண்டு செயற்பட்டு, அநியாயத்தினை முற்றிலுமாக ஒழிக்க முயல்வர். இவ்வுலகில் வாழும் ஏனைய உயிர்களை, தன்னுடன் வாழும் சக உயிர்களாக மதித்து வாழ விரும்புவர்; வாழ்வார்கள்.
ஆக, மேற்கூறப்பட்டது போன்ற, பூரண விடுதலை பெற்ற தமிழீழத்தினையே, நாம் கட்டியெழுப்பி வருவதுடன், அங்கு ஏனைய உயிர்களையும், பூரணமாக விடுதலை பெற்று வாழ வைப்பதற்கான அன்பு வழி போராட்டத்தில், எம்மை இணைத்துக் கொண்டு போராடி வருகிறோம். அப்போராட்டங்களில் உங்களையும் இணைத்து கொள்ள வேண்டி நிற்கிறோம். அத்துடன் தமிழீழத்தில் வாழும் ஏனைய மொழி பேசும் மக்களுடனும், உயிர்களுடனும், அன்புடன் உறவாடி, அவர்களுடன் இணைந்து, சகல உயிர்களினதும், பூரண விடுதலையை வென்றெடுப்பதற்கான அன்பு வழி போராட்டத்தினை முன்னெடுங்கள். அனைவரும் இணைந்து, ஏனைய உயிர்களுக்கு அவசியமான “உணவு, உடை, உறையுள்” ஆகியன, அவசியமாக கிடைப்பதற்கு உரிய செயற்பாடுகளை முன்னெடுங்கள். அத்துடன், எமது நல் “உணவு, உடை, கலாச்சார, பழக்க வழக்க” முறைகளை, வெறுமனே, அழிகின்றது என மட்டும் கூறிவிடுவதுடன் மட்டும் நிற்காது, அவற்றினை இயன்ற வரை தொடர்வதுடன், அவற்றினை, எமது சக மக்களுக்கும், எடுத்து கூற முற்பட வேண்டும். அத்துடன் சக மக்களிடம் இருந்து, இயலுமானவரை, நல்லனவற்றை கற்று தெளிவதுடன், நாம் வாழும், அழகிய தமிழீழமான இவ்வுலகினை, மீண்டும் அன்பு மிக்க பூவுலகமாக கட்டியெழுப்ப முன் வர வேண்டுகிறோம்.
நன்றி
தமிழீழத்தின் குடிமக்கள்
(ஒரு ஈழத் தமிழனின் ஆதங்கம்)