எழுக தமிழுக்கு முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் அழைப்பு!

எழுக தமிழுக்கு முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் அழைப்பு!

எழுக தமிழுக்கு முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் அழைப்பு!

எழுக தமிழ்!

என் அன்பார்ந்த தமிழ்ப் பேசும் சகோதர சகோதரிகளே!

அரசியல் யாப்பொன்றை எமக்குச் சாதகமாகத் தரப்போவதாக அறிவித்திருக்கும் அரசாங்கம் அதே நேரத்தில் எமது வடக்கு, கிழக்கு இருப்பையுந் தனித்துவத்தையும் பாதிக்கும் வண்ணம் பல நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றமை அரசாங்கத்தின் உள்நோக்கம் பற்றி சந்தேகங்களை எழுப்புகின்றன.

நாட்டில் எங்கும் புத்தர் சிலை எழுப்ப முடியும், அது எமது சுதந்திரம் என்று சில புத்த பிக்குமார் கூறித் திரிகின்றார்கள். நடைமுறையிலும் சிலைகளையும் விகாரைகளையும் எழுப்பி வருகின்றார்கள்.

நாடு பூராகவும் பரந்து வாழ்ந்த தமிழ்ப் பேசும் மக்களைத் தமது வாழ்விடங்களில் இருந்து 1958, 1961,1974, 1977, 1983 போன்ற வருடங்களில் ஏற்பட்ட கலவரங்களின் ஊடாகவும் வேறு விதங்களிலும் இடம்பெயர வைத்து அவர்களின் வசிப்பிடங்களையும் வணக்கஸ்தலங்களையும் கைவிட்டுச் செல்ல நடவடிக்கைகள் எடுத்து, முக்கிய நகரங்களை விட மற்ற இடங்களில் தமிழ்ப் பேசும் மக்களின் பரம்பலை ஏறத்தாழ இல்லாமல் ஆக்கி, பலரை வெளிநாடுகள் நோக்கிச் செல்ல தூண்டும் வகையில் வன்முறைகளில் ஈடுபட்டு பின் போர்க்காலத்தில் பலவிதமான கொடூரங்களில் ஈடுபட்டு போர்க் குற்றங்களில் ஈடுபட்டு எமது மக்களுள் பலரை நிர்மூலமாக்கி பலரை நாட்டைவிட்டு ஓடிப்போகச் செய்து, எமது ஆதனங்களைச் சிதைத்து சின்னா பின்னமாக்கி, வணக்கஸ்தலங்கள் பலவற்றை அழித்தொழித்து, வடக்கு கிழக்கு மாகாணங்களில் இராணுவத்தினரை யுத்தம் முடிந்து ஏழு வருடங்கள் ஆன பின்னரும் தொடர்ந்திருந்து எமது வாழ்விடங்களை விட்டகலாது வாழ்வாதாரங்களைச் சுரண்டுவதும், வடக்கு கிழக்கு மாகாண மண்ணை விட்டு, மேலும் மாகாணங்களின் கரையோர இடங்களை விட்டு நீங்காது, நாட்டில் எங்கும் புத்தர் சிலை எடுப்பதற்கு சுதந்திரம் இருப்பதாகக் கூறுவது பக்கத்து வீட்டுக்காரன் எமது காணிக்குள் அத்து மீறி வந்து, இது எமது நாடு நான் எங்கும் இருக்கலாம், எதனையும் கட்டலாம், எவ்வாறாகவும் நடந்து கொள்ளலாம் என்று கூறுவது போல் இருக்கின்றது!

பெரும்பான்மையின் ஊடுறுவல் பல விதங்களில் எமது பாரம்பரிய தமிழ்ப் பேசும் இடங்களில் பரவி வருவது கண்டிக்கப்பட வேண்டியதொன்று. தமிழ்ப் பேசும் மக்களின் அடையாளங்களையும் அவர்களின் தனித்துவத்தையும் பேணுவோம், அதற்கான அரசியல் யாப்பினைத் தவறாது தருவோம் என்று உள்ளுரிலும் வெளிநாடுகளிலும் கூறி வந்தவர்கள் பெரும்பான்மையின மக்களின் இராணுவத்தினரை வடக்குக் கிழக்கில் தொடர்ந்தும் பரந்து வாழ இடமளிப்பதும் புத்த விகாரைகளை அவர்கள் துணை கொண்டு எழுப்புவதும், நடந்து போன யுத்தக் குற்றங்களை முறையாக ஆராயாது அவற்றில் இருந்து விடுபட எத்தனிப்பதும், எல்லாவகையான ஏமாற்று வேலைகளைச் செய்யலாம் எனத் திட்டமிட்டு எமது வாழ்விடங்களை ஆக்கிரமித்து எமது இனத்தின், மொழியின், மதங்களின் அடையாளங்களைப் படிப்படியாக அழிக்கும் ஒரு அந்தரங்க செயல்ப்பாட்டின் அங்கமே என்பது கண்கூடு.

உரிமைகளைக் கொடுப்போம் என்று சர்வதேசத்திற்கு ஒரு புறம் கூறிவிட்டு மறுபுறத்தில் எமது உரிமைகளைப் பறித்தெடுப்பதைத்தான் 13வது திருத்தச்சட்டம் வந்த போது அரசாங்கம் செய்தது. இந்திய அரசாங்கத்திடம் இணக்கம் தெரிவித்தவாறு இலங்கை அரசாங்கம் 13வது திருத்தச் சட்டத்தை எமக்கு இயைபாக ஆக்க முன்வரவில்லை. ஒரு கையால் கொடுப்பது போல் கொடுத்து மாகாணசபைகள் சட்டத்தால் மறுகையால் அதிகாரங்களைத் திருப்பி எடுக்கும் காரியத்தில் இறங்கியது.

அதனையே இப்பொழுதும் காண்கின்றோம். தருவது போல் தரணிக்குக் கூறிவிட்டு எமது தனித்துவத்தைத் தவிடுபொடியாக்கக் கங்கணம் கட்டிக் கொண்டு இருக்கின்றார்கள் என்று தெரிகின்றது. உடனேயே சட்டபூர்வமற்ற சகல பௌத்த விகாரைகளும் புத்த சிலைகளும் பௌத்த கோயில்களும் எமது மண்ணில் இருந்து அகற்றப்பட வேண்டும். சட்டப்படி உரியவாறு அனுமதி கேட்டு எமது மண்ணில் எந்த மதத் தலத்தைக் கட்டுவதை நாம் எதிர்க்கவில்லை. பலாத்காரமாக இவற்றைச் செய்வதையே நாம் கண்டிக்கின்றோம். இவ்வாறான பௌத்த மயமாக்கல் திட்டமிட்ட இன, மொழி, மதப் பரம்பலைப் பாதிக்கும் செயல்களே என்பது எமது ஏகோபித்த முடிவு.

அரசியல் யாப்பை அரசாங்கம் கொண்டுவர இருக்கின்றதே என்பதற்காக நாம் மௌனம் காத்தோமானால் யாப்பிலும் நாம் ஏமாற்றப்படுவோம். நாம் வாழும் வாழ்விடங்களிலும் ஏமாற்றப்படுவோம். எனவேதான் இந்த ‘எழுக தமிழ்’ பேரணி ஏற்றதொரு உபாயமாக எமக்குப்பட்டுள்ளது! வன்முறை நாடாமல், வசை பாடாமல், வஞ்சிக்கப்பட்டு வரும் எமது அண்மைய வரலாற்றை உலகறியச் செய்வதற்கே இந்தப் பேரணி!

என் இனிய தமிழ்ப் பேசும் சகோதர சகோதரிகளே! கட்சி பேதமின்றி, ஆண் பெண் வித்தியாசமின்றி, வயது பேதமின்றி, பிரதேச பேதங்கள் இன்றி, வர்க்க பேதம் இன்றி, சாதி பேதமின்றி யாவரும் சேர்ந்து பெரும்பான்மையினரால் நடத்துவிக்கப்பட்டு வரும் தவறான நடவடிக்கைகளைக் கண்டிப்போமாக! தமிழ் மக்களுக்கு உரித்தான சமஷ்டி அரசியல் அமைப்பின் தேவையை இத்தால் வலியுறுத்துவோமாக! எமது ஒற்றுமையை உலகறியச் செய்வோமாக! வாழ்க தமிழ்! எழுக தமிழ்!

நன்றி.
அன்புடன்
நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்
முதலமைச்சர்
வடமாகாணம்

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: