மனைவியின் இறுதி கிரியைக்கு வந்த ஈழ அரசியல் கைதி!

மனைவியின் இறுதி கிரியைக்கு வந்த ஈழ அரசியல் கைதி!

மனைவியின் இறுதி கிரியைக்கு வந்த ஈழ அரசியல் கைதி!

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இனப்படுகொலைக் குற்றவாளியான இலங்கை அரசு மீதான தீர்மானம் இன்று விவாதிக்கப்படவுள்ள நிலையில், புலம்பெயர்ந்துள்ள ஈழத் தமிழர்களை எல்லாம் நெஞ்சுருகவைக்கும் சோகச் சம்பவம் வன்னியில் நடந்துள்ளது.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்


உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா?


முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை முடிவுற்று பத்தாவது ஆண்டு ஆகியும், இலங்கையின் தமிழ் ஈழப் பகுதிகளில் இன்னும் சகஜ நிலைமை திரும்பவில்லை. இறுதி யுத்தம் நடத்தப்பட்ட வடக்கு மாகாணத்தின் நான்கு மாவட்டங்களிலும் தமிழ் மக்களின் நிலம், ஆயிரக்கணக்கான ஏக்கரில் ராணுவத்தின் ஆக்கிரமிப்பிலேயே இருக்கிறது. விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், ஈடுபடாதவர்கள் என காணாமல் ஆக்கப்பட்டவர்களைப் பற்றிய எந்தத் தகவலையும் அரசாங்கம் இதுவரை வெளியிடாமல் இருந்து வருகிறது. நடப்பு ஐ.நா மனித உரிமைப் பேரவைக் கூட்டத் தொடரின் தொடக்கத்தில் பேரவையின் ஆணையாளர், இதைப்பற்றி விமர்சனம் செய்ததை அடுத்து, இலங்கை அரசதிபர் மைத்திரிபால சிறீசேனா உடனடியாக ஒரு குழுவை அறிவித்தார்.

பத்து ஆண்டுகளுக்கும் மேலாக சிறை வைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதிகளின் நிலைமையிலும் முன்னேற்றம் இல்லை. குடும்பம் மற்றும் உறவுகளிடமிருந்து பிரித்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பாக, நாடாளுமன்ற தமிழ்க் கட்சி உறுப்பினர்கள் பேசி வந்தாலும், அதற்கு அரசுத் தரப்பில் உரிய பதில் கூறப்படுவதில்லை.

இந்நிலையில், வன்னியைச் சேர்ந்த ஆனந்த சுதாகரன் எனும் அரசியல் கைதியின் மனைவி இறந்துவிட்டார். ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர், கொழும்பு மேகசின் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், உடல்நலம் குன்றியிருந்த யோகராணி, கடந்த 15-ம் தேதி உயிரிழந்தார். மனைவியின் இறுதிச்சடங்கில் பங்கேற்க ஆனந்த சுகாதரனுக்கு 3 மணி நேரம் மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது. ஆயுதம் தாங்கிய காவலர்களுடன் கிளிநொச்சியில் உள்ள மருதநகருக்கு ஆனந்த சுதாகரன் அழைத்துவரப்பட்டார்.

காவல் துறையின் வாகனத்திலிருந்து இறங்கியதுமே ஆனந்த சுதாகரனின் உறவினர்கள், பலத்த அழுகையோடு உணர்வுவயப்பட்ட காட்சி, அங்கிருந்தோரை துயரப்படுத்தியது. யோகராணியின் இறுதிச் சடங்கில் பங்கேற்ற ஆனந்த சுதாகரனின் அருகில், அவர்களின் 10 வயது மகள், சோகம் அப்பிய முகத்தோடும் கனத்த மௌனத்தோடும் காணப்பட்டாள். 3 மணி நேரமே ஆனந்த சுதாகரனுக்கு அளிக்கப்பட்டிருந்ததால், யோகராணியின் இறுதி ஊர்வலம் முடியும் வரை அவரால் பங்கேற்க முடியவில்லை.

அவரின் மகன் தாய்க்கான இறுதிச்சடங்கைச் செய்ய, ஆனந்த சுதாகரன் சிறைக்குத் திரும்ப காவல் துறையின் வேனுக்குள் ஏறினார். அப்போது, யாரும் எதிர்பாராதவண்ணம் அவரின் மகளான சிறுமியும் தந்தையுடன் வேனுக்குள் ஏறினாள். அந்தச் சிறுமியை சிங்கள காவல் துறையினர் கீழிறக்கிவிட்டும், தந்தையிடம், ”நாளை மறுநாள் மீண்டும் வருவீங்களா அப்பா” என அவள் ஏக்கத்தோடு கேட்க, அங்கிருந்த காவலர்கள் உட்பட அனைவரையும் கணநேரம் அந்தக் காட்சி மனம் உருகச் செய்து விட்டது.

இந்த ஆனந்த சுதாகரன், 2007-ல் கொழும்பில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு தொடர்பாக சந்தேக நபராகக் கைது செய்யப்பட்டு, நீண்ட காலம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இரு பிள்ளைகளின் தந்தையான இவர் கைது செய்யப்படுகையில் 27 வயதாக இருந்தார். கொழும்பின் நிழல் உலக மர்ம இடமான நான்காம் மாடியில் கடுமையான சித்திரவதைகளுக்கு ஆட்படுத்தப்பட்டு, ஒப்புதல் வாக்கு மூலத்தில் கையெழுத்திட வைக்கப்பட்டார் என்று மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

‘கொன்றுவிட்டு, தற்கொலை செய்து கொண்டதாக வழக்கை முடித்துவிடுவோம்’ என மிரட்டியே, சிங்களர்களான பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவு காவல் துறையினர் அவரை ஒப்புதல் வாக்கு மூலத்தில் கையெழுத்திட வைத்தனர்; அவரின் கையெழுத்தே அவருக்கு தண்டனையை வாங்கித் தந்தது என்றும் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆனந்த சுதாகரனின் வழக்குக்காகவே சொத்துகளை விற்று அவரின் தாயார் சுமதி வழக்கை நடத்தினார். அதன் பிறகும் அவரை விடுவிக்க முடியவில்லை. ஏற்கெனவே இளைப்பு நோயால் பாதிக்கப்பட்டிருந்த ஆனந்த சுதாகரனின் மனைவி யோகராணி, கடந்த நவம்பரில் கணவனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பின்னர், அதைத் தாங்க முடியாமல் மன உளைச்சலுக்கு ஆளானார். தீவிர மன அழுத்தத்தால், 37 வயதே ஆன அவரின் உடல்நிலை மேலும் மோசமாகி, கடந்த 15-ம் தேதி இறந்து போனார்.

இறுதிச் சடங்கில், தாயாரின் சடலத்துக்கு இறுதிக் காரியம் செய்யும் மகன் இடுகாட்டுக்குச் செல்ல, அப்போது அருகிலிருக்கவும் வாய்க்காமல், காவல் துறையின் வேனுக்குள் ஏறிய தந்தையுடன் 10 வயது மகளும் திடீரென ஏற, அந்தச் சிறுமியை காவல் துறையினர் வலிந்து கீழிறங்கச்செய்ய… விவரிக்க முடியாத இந்தத் துயரத்தை, இன்னும் எத்தனை எத்தனை ஈழத்தமிழர் அரசியல் கைதிகள் எதிர்கொள்ள வேண்டுமோ?

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: