`மனநோயாளிகள்; ஹெச்.ஐ.வி; காசநோய்!’ – புழல் சிறையில் இலங்கை கைதிக்கு நடந்த கொடுமை!

`மனநோயாளிகள்; ஹெச்.ஐ.வி; காசநோய்!'  - புழல் சிறையில் இலங்கை கைதிக்கு நடந்த கொடுமை!

`மனநோயாளிகள்; ஹெச்.ஐ.வி; காசநோய்!’ – புழல் சிறையில் இலங்கை கைதிக்கு நடந்த கொடுமை!

புழல் சிறையில் நடக்கும் மனித உரிமை மீறல்களை ஆய்வு செய்ய இருக்கிறார் சென்னை மாவட்ட நீதிபதி ஜெயந்தி. `கைதிகள் மீது கொடும் சித்ரவதைகள் அரங்கேறுகின்றன. தங்களுக்கு ஒத்துவராத கைதிகளை காசநோய், எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ள கைதிகளின் செல்களில் அடைக்கின்றனர்’ எனக் கொந்தளிக்கின்றனர் கைதிகளின் உறவினர்கள்.

தமிழக சிறைகளில் கைதிகள் சிலர் உல்லாச வாழ்க்கை நடத்துவது தொடர்பான படங்கள் வெளியானதையடுத்து, தொடர் ரெய்டுகள் நடந்தன. இதனையடுத்து, பல்வேறு சிறைகளுக்கு அதிகாரிகள் மாற்றப்பட்டனர். அந்தவகையில் கோவை சிறையில் இருந்து புழல் சிறைக்கு மாற்றலாகி வந்தார் எஸ்.பி செந்தில்குமார். இவர் வந்த நாளில் இருந்தே கைதிகள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகத் தகவல் வெளியானது. இதுகுறித்து இலங்கையைச் சேர்ந்த அசோக்குமார் என்ற கைதி எழுதிய கடிதம், மனித உரிமை ஆர்வலர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. சென்னை உயர் நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்ட அந்தக் கடிதத்தில், ` தனியறையில் மனநலம் பாதிக்கப்பட்ட சிறைவாசிகளுடன் என்னை அடைத்து வைத்துள்ளனர். அந்த செல்லில் `ஏ’ வகுப்பு சிறைவாசியை அடைக்க வேண்டிய அவசியம் இல்லை. இது துன்புறுத்தும் நடவடிக்கையாகும். கடந்த இரண்டு நாள்களுக்கு முன்னர் கண்காணிப்பாளர் செந்தில்குமார் என்னிடம், `இலங்கை சிறைவாசிதானே நீ. எதாவது செல்போனில் பேசுகிறாயா?’ என்றார். ` இல்லை.. நான் இன்னும் 3 மாதங்களில் விடுதலையாக உள்ளேன். வாரம் இரண்டு முறை என் மனைவியை நேர்காணலில் சந்திக்கிறேன். எந்தத் தவறான செயலிலும் ஈடுபடவில்லை’ என்று கூறினேன்.

இருப்பினும், திடீரெனப் பழிவாங்கும்விதமாக மனநலம் பாதிக்கப்பட்ட சிறைவாசிகள் அறையில் என்னை அடைத்துவிட்டார். இதனால், மனநிம்மதியின்றி, பாதுகாப்பற்ற சூழலில் உள்ளேன்’ எனக் குறிப்பிட்டிருந்தார். இதேபோல், கைதிகள் அறைகளில் `திடீர்’ சோதனை என்ற பெயரில் பொருள்களை அடித்து நொறுக்குவதும், சிறையில் இருக்கும் 200 வாழை மரங்களை வெட்டி வீழ்த்தியது என புழல் கண்காணிப்பாளரின் செயல்கள் எல்லை மீறிச் சென்று கொண்டிருப்பதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில், `இலங்கை சிறைவாசி அசோக்குமாரை தனியறையில் இருந்து உயர் பாதுகாப்பு செல்லுக்கு மாற்ற வேண்டும்’ என்ற கோரிக்கையோடு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார் அவரது மனைவி ஹனி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). நீதியரசர் சி.டி.செல்வம் முன்னிலையில் கடந்த வாரம் நடந்த இந்த வழக்கின் விசாரணையில், `தற்காப்புக்காகத்தான் வேறு செல்லுக்கு அவரை மாற்றியுள்ளனர்’ எனத் தெரிவித்திருக்கிறார் அரசுத் தரப்பு வழக்கறிஞர்.

இதற்குப் பதில் அளித்த நீதியரசர், `கைதிகள் எதாவது தவறான செயலில் ஈடுபட்டால், கவுன்சலிங்தான் கொடுக்க வேண்டும். பெயில் இல்லாமல் நீண்டகாலமாகச் சிறையில் இருப்பவர்கள் எவ்வளவு கொடுமையான மனநிலையில் இருப்பார்கள். இதுபோன்ற செல்களில் அடைப்பதன் மூலம், அவர்களை மேலும் தவறு செய்யத்தான் தூண்டுகிறீர்கள். கைதிகள் செல்போன் வைத்திருப்பதாகச் சொல்கிறீர்கள். அப்படியானால், சிறையில் ஜாமர் கருவி எதற்காக இருக்கிறது?’ எனக் கேள்வி எழுப்ப, இதற்கு அரசுத் தரப்பு வழக்கறிஞர் எந்தப் பதிலும் பேசவில்லை. இந்த வழக்கில் பதில் மனுத்தாக்கல் செய்த சிறை அதிகாரி, `அது வழக்கமான செல் தான். மனநிலை பாதித்தவர்கள் என யாரும் கிடையாது’ எனக் கூற, உடனே, அசோக்குமார் அடைக்கப்பட்டுள்ள செல்லில் வசிக்கும் கைதிகளின் விவரத்தையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார் அவரது மனைவி ஹனி. அதில், மனநிலை பாதிப்பு, காசநோய், ஹெச்.ஐ.வி உள்ளிட்ட நோய்களுக்கு ஆளான 32 கைதிகளின் பெயர் பட்டியல் இருந்தது.

இதனைத் தொடர்ந்து இறுதியாக உத்தரவிட்ட நீதியரசர், `இவர்கள் (அதிகாரிகள்) பேசுவதை வைத்து முடிவு செய்ய முடியாது. அசோக்குமாரிடம் நேரடியாக ஆய்வு நடத்தினால் உண்மையைக் கண்டறிய முடியும்’ எனக் கூறி மாவட்ட நீதிபதி ஜெயந்தி தலைமையில் விசாரணை நடத்த உத்தரவிட்டார். வரும் திங்கள் கிழமை இதுகுறித்த அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும் அறிவுறுத்தினார். உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவு, புழல் சிறை அதிகாரிகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

  • விகடன்
Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:

?>