இலங்கையில் தேசிய புலனாய்வு அதிகாரியாக புதிய தலைவர் நியமனம்!

இலங்கையில் தேசிய புலனாய்வு அதிகாரியாக புதிய தலைவர் நியமனம்!

தேசிய புலனாய்வு சேவை அதிகாரியாக மேஜர் ஜெனரல் ருவன் குலதுங்க நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜுன் மாதம் முதலாம் தேதி முதல் இந்த நியமனம் அமலுக்கு வரும்.

தேசிய புலனாய்வு சேவை அதிகாரியாக கடமையாற்றிய முன்னாள் பிரதி போலீஸ் மா அதிபர் சிசிர மெண்டீஸ், தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார்.

ஈஸ்டர் பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் சிசிர மெண்டீஸ், கடந்த சில தினங்களுக்கு முன்னர் நாடாளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சி வழங்கியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து, பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தும் நாடாளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் எந்தவொரு பாதுகாப்பு அதிகாரிகளும் சாட்சியமளிக்க மாட்டார்கள் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்தார்.

அவ்வாறு சாட்சியமளிக்கும் பாதுகாப்பு அதிகாரிகள், பாதுகாப்பு சேவையிலிருந்து விலகியவர்களாக இருப்பார்கள் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில், ஜனாதிபதியினால் இந்த கருத்து வெளியிடப்பட்டு அடுத்த தினம், சிசிர மெண்டீஸ், தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார்.

நாடாளுமன்ற தெரிவுக்குழு விசாரணைகள் ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான விடயம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த 7ஆம் தேதி கூறியிருந்தார். கடந்த 7ஆம் தேதி அவசரமாக அமைச்சரவை கூட்டத்தை கூட்டிய ஜனாதிபதி, அமைச்சரவையில் இந்த கருத்தை வெளியிட்டிருந்தார்.

நாடாளுமன்ற தெரிவுக்குழு விசாரணைகள் தொடர்பில் உரிய தீர்மானமொன்று எடுக்கப்படாத பட்சத்தில், தான் அமைச்சரவை கூட்டத்தை கூட்டப் போவதில்லை என ஜனாதிபதி அன்றைய தினம் கூறியிருந்தார். இதன்படி, அமைச்சரவை கூட்டம் இந்த வாரம் நடைபெறாத நிலையில், அது குறித்து பாரிய விமர்சனங்கள் நாட்டில் எழுந்திருந்தன.

அமைச்சரவை கூட்டத்தை ஜனாதிபதி கூட்டாதது, நாட்டின் அரசியலமைப்பை மீண்டும் மீறும் செயற்பாட்டில் அவர் ஈடுபட்டு வருவதாக பல்வேறு தரப்பினர் குற்றம் சுமத்தியிருந்தனர். இதன்படி, 104 அமைச்சரவை பத்திரங்கள் நிலுவையிலுள்ள நிலையில், அரச இயந்திரம் செயலற்று போவதாக அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க நேற்றைய தினம் கூறியிருந்தார்.

இந்நிலையில், இந்த வாரம் அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 18 ஆம் தேதி அமைச்சரவை கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: