தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகள்,இந்து மத ஆன்மீக அமைப்புகள்,ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுத்து வரும் சிவில் அமைப்புக்கள்

தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகள்,இந்து மத ஆன்மீக அமைப்புகள்,ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுத்து வரும் சிவில் அமைப்புக்கள்

மற்றும்

தமிழக மக்கள் அனைவரினதும் மேலான கவனத்திற்கு…..

இந்தியாவில் நேற்று முன்தினம் மஹிந்த ராஜபக்ஷ திருப்பதியில் வந்து வழிபாடு செய்கின்றார். அதே சமகாலத்தில் நேற்று முன்தினம் இலங்கைத் தீவின் தமிழர் தாயகப்பகுதியான திருகோணமலை மாவட்டத்தில் சிறீலங்கா அரசு இந்துக் கோவில்களை அழித்து பெளத்த விகாரைகளை நிறுவுதல் என்ற தொலை நோக்கிய திட்டத்தின் கீழ் மூதூர் பகுதியில் அமைந்துள்ள பிள்ளையார் ஆலயத்தை
பெளத்த துறவிகள் ஆக்கிரமித்து, அந்த இடத்தில் புத்தர் சிலையை சிறீலங்கா இராணுவம் மற்றும் காவல் துறையின் துணையுடன் வைத்துள்ளார்கள்.

சிங்கள பேரினவாதிகளின் இந்த நடவடிக்கையை கண்டித்து அங்குள்ள எமது மக்களும் , இந்து மத குருமார்களும் ஒன்றுதிரண்டு அறவழியில் போராடும் போது இந்து குருமார்கள் சிங்களப் பேரினவாதிகளைப் பார்த்து எங்களை வாழவிடுங்கள், எங்கள் ஆலயங்களை ஏன் அழிக்கிறீர்கள் எங்களை நீங்கள் கொன்றுவிடுங்கள் என்றும்
எங்கள் உயிரில் மூச்சு உள்ளவரை போராடுவோம், தர்மத்தை போதிப்பதாக கூறும் பௌத்த துறவிகளே நீங்கள் எங்களை அச்சுறுத்துவது சரியா? என
வேதனையுடன் கூறியது ஒட்டுமொத்த ஈழத் தமிழர்களையும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது. இது தான் இலங்கைத் தீவில் தமிழர்களுக்கும், தமிழர்கள் வணங்கும் தெய்வங்களுக்கும் ஏற்பட்டுள்ள நிலைமை.

சிறீலங்காவில் பாணந்துறை என்ற இடத்தில் இந்து ஆலயத்தில் வைத்து இந்துமத குருமார் ஒருவரை சிங்கள பேரினவாதிகள் உயிரோடு எரித்து கொளுத்தியது தொடக்கம் இந்து ஆலயத்திற்குள் வைத்து தமிழ் மக்களை படுகொலை செய்தது என சிறீலங்கா பெளத்த பேரினவாத அரசின் கொடூரமான பக்கங்களின் பட்டியல் இன்று வரை நீண்கொண்டே செல்கிறது.

இதுவரை ஈழத்தில் இந்து ஆலயங்களை சிறீலங்கா அரசு தொடர்ச்சியாக அழித்து வந்துள்ளது. இனவழிப்பு நோக்கில் இலங்கையில் 367 இந்து ஆலயங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக இண்டர்நேசனல் பாலிசி டைஜெஸ்ட் இதழ் தெரிவித்துள்ளது.

சிறிலங்கா பேரினவாத அரசு தொடர்ந்து இந்து கோயில்களை இடித்து தள்ளிய போதிலும் தமிழர்கள் இராணுவ ரீதியான எழுச்சி பெற்றதால் தமிழர்களுக்கு மட்டுமல்ல தமிழர்கள் வணங்கிய கடவுள்களுக்கும் 2009 வரை ஓரளவேனும் பாதுகாப்பான சூழல் உருவானது. .

2009 முள்ளிவாக்காலுக்கு பின்னர் தமிழர்கள் இராணுவ ரீதியாக பலமிழந்துள்ள நிலையில் ஈழத்தில் மீண்டும் இந்துக்கோயில்களை ஆக்கிரமிக்கும் நடவடிக்கைகளை சிறீலங்கா ஆட்சியாளர்கள் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றார்கள். குருமார்களுக்கு எதிராக அவர்கள் எந்த எல்லைக்கும் செல்வார்கள் என்பதற்கு சாட்சியாக 2019 இல் திருகோணமலையில் இந்துக் கோயில் ஆக்கிரமிப்பிற்கு எதிராக நீதி வேண்டி போராடிய அகத்திய அடிகளார் மீது சிங்களப் பேரினவாதிகள் சுடுநீரை ஊற்றிய சாட்சியே போதுமானது.

ஒருபக்கம் இந்துக் கோயில்களை அகற்றிவிட்டு புத்தர் சிலைகளை வைப்பதில் ராஜபக்சவினர் தீவிரம் காட்டி வரும் அதேவேளை ராஜபக்சவினரும், பெளத்த துறவிகளும் தொடர்ந்து இந்தியாவிற்கு வந்து இந்து மதத்தின் ஒரு பிரிவு தான் பெளத்தம் என்று இந்திய மக்ளுக்கும், ஆட்சியாளர்களுக்கும் மூளைச்சலவை செய்துவிட்டு சிறிலங்கா அரச தலைவர்கள் திருப்பதி தேவஸ்தானத்தில் தலையை முட்டி மோதுவதும், கங்கையில் மூழ்குவதும் என்று இவர்கள் அரங்கேற்றும் நாடகத்திற்கு பின்னால் உள்ள தந்திரத்தை இந்திய தேசம் புரிந்துகொள்ள வேண்டும்.

இன்றைய உலக ஒழுங்கில் தேசங்களில் முதன்மையான ஆயுதங்களில் ஒன்றாக ராஜதந்திரமும் காணப்படுகின்ற சூழலில் இந்தியா, சீனா,அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் பூகோள நலன் சார்ந்த முரண்பாடுகளை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு இந்தியாவில் இந்து மதத்தை அரவணைத்துக்
கொண்டு ஈழத்தில் இந்துக் கோயில்களையும், தமிழர்களையும் அழிக்கும் சிறீலங்கா அரசின் நுட்பமான சதுரங்க ஆட்டத்தை இந்திய அளவிலான தேசிய கட்சிகளும், ஈழத்தமிழர்களின் உரிமைக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளும், சிவில் சமூக அமைப்புக்களும் சிறீலங்கா பேரினவாத அரசின் இந்த நடவடிக்கைகள் தொடர்பில் விரைந்து கவனம் செலுத்த வேண்டும்.

நன்றி

சண் மாஸ்டர்

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:

?>