விடுதலை புலிகளுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த அமைச்சர் விஜயகலா மீது நடவடிக்கை!

விடுதலை புலிகளுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த அமைச்சர் விஜயகலா மீது நடவடிக்கை!

விடுதலை புலிகளுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த அமைச்சர் விஜயகலா மீது நடவடிக்கை!

தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பாக கருத்து தெரிவித்த இலங்கையின் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சரும், ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்தவருமான விஜயகலா மகேஸ்வரனை இராஜாங்க அமைச்சர் பதவியிலிருந்து விசாரணைகள் முடியும் வரை விலக்கி வைக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கைவிடுத்துள்ளார்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்

உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா?

இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் திங்கள்கிழமையன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்ச்சியொன்றில், இன்றைய சூழலில் தமிழீழ விடுதலை புலிகளை உருவாக்க வேண்டும் என்பதே எங்களுடைய முக்கிய நோக்கம் என கருத்து தெரிவித்திருந்தார்.

இவரின் கருத்து இலங்கை அரசியல் அரங்கில் பலத்த சர்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை இலங்கை நாடாளுமன்றம் கூடிய போது விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்தினால் பெரும் அமளி ஏற்பட்டது. அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கையும் கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்டது.

இதன் காரணமாக சபையில் அமைதியின்மை ஏற்பட்டது. இதனால் தொடர்ந்து நாடாளுமன்ற அமர்வுகளை நடத்திச் செல்வதற்கு தடை ஏற்பட்டதால் நாளை காலை வரை அவையை ஒத்திவைப்பதாக சபாநாயகர் அறிவித்தார்.

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் இராஜாங்க அமைச்சர் ஒருவர், நாட்டில் தடை செய்யப்பட்ட இயக்கம் ஒன்று மீள உருவாக்கப்பட வேண்டும் என கருத்து வெளியிட முடியாது எனவும், இது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனக்கு அறிவுறுத்தியதாக சபாநாயகர் கரு ஜயசூரியா தெரவித்தார்.

இதேவேளை இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக இலங்கை காவல் துறையின் தலைமையகத்தில் முறைப்பாடொன்றை முன்வைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக சிங்கள ராவய அமைப்பினர் தெரிவித்துள்ள்ளனர்.

தமிழீழ விடுதலை புலிகளுக்கு ஆதரவாகவும், பயங்கரவாதத்தை தூண்டும் வகையிலும் அவரது கருத்துக்கள் அமைந்துள்ளது என கூறியே இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக சிங்கள ராவய அமைப்பினர் காவல் துறையின் தலைமையகத்தில் முறைப்பாடொன்றினை முன்வைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதேவேளை “விடுதலை புலிகளின் இயக்கம் மீண்டும் தோற்றம் பெற வேண்டும் என விஜயகலா மகேஸ்வரன் குறிப்பிட்டமையை ஐக்கிய தேசிய கட்சி வன்மையாக கண்டிக்கிறது. அத்துடன் இப்பிரசாரம் தொடர்பில் அவரே உத்தியோகப்பூர்வ விளக்கத்தினை விஜயகலா மகேஸ்வரன் வழங்குவார்” என ஐக்கிய தேசிய கட்சியின் அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

“தமிழ் மக்கள் சுதந்திரமாக வாழ வேண்டுமாயின் விடுதலைப் புலிகளின் இயக்கம் மீண்டும் தலைதூக்க வேண்டும் என்று விஜயகலா மகேஷ்வரன் குறிப்பிட்டுள்ளமையானது தற்போது நாட்டில் மாறுப்பட்ட கருத்துக்களை ஏற்படுத்தியுள்ளது. எவ்வாறு இருப்பினும் இவரது கருத்துக்களை ஐ.தே.க. வன்மையாக கண்டிக்கின்றது. “தெற்கில் ஹிட்லரையும், வடக்கில் பிரபாகரனையும் உருவாக்கும் நோக்கம் நல்லாட்சி அரசாங்கத்திற்கு ஒருபோதும் கிடையாது” என்றார் ஹரின் பெர்னாண்டோ.

”இராஜாங்க அமைச்சர் பதவியிலிருந்து விசாரணைகள் முடியும் வரை விலக்கி வைக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுத்தமை தொடர்பில் இதுவரை தனக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. உடனடியாக இராஜாங்க அமைச்சர் பதவியிலிருந்து விலகுவதாக நான் சம்பந்தப்பட்டவர்களுக்கு இன்று மதியமே அறிவித்துவிட்டேன். நான் யாழ்ப்பாணத்தில் இருந்ததால் இன்று நாடாளுமன்றம் செல்லவில்லை. நாளைய தினம் நாடாளுமன்றத்தில் இவ்விடயம் தொடர்பில் கருத்து தெரிவிப்பேன். எனவே ஊடகங்களுக்கு எந்தவித கருத்துக்களையும் தெரிவிக்க விரும்பவில்லை” என இலங்கையின் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: