இலங்கை தமிழர்களுக்கு ரேஷன் கடைகளில் விலையில்லாமல் அரிசி வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழக சட்டசபையில் விதி எண் 110ன் கீழ் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
இலங்கை தமிழ் அகதிகளின் குடும்பத்தினருக்கு விலையில்லா எரிவாயு அடுப்பு மற்றும் இணைப்பு வழங்கப்படும். முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கு பணக்கொடை வழங்கப்படுகிறது, இந்த பணக்கொடை உயர்த்தி வழங்கப்படும்.
இலங்கைத் தமிழர்களது முகாம்களில், மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ள 7 ஆயிரத்து 469 வீடுகள், 231 கோடியே 54 இலட்சம் ரூபாய் செலவில் புதிதாகக் கட்டித்தரப்படும். இதில் முதற்கட்டமாக 3 ஆயிரத்து 510 புதிய வீடுகள் கட்டுவதற்கு, நடப்பு நிதி ஆண்டில் 108 கோடியே 81 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
முகாம்களில் உள்ள மின் வசதி, கழிப்பிட வசதி மற்றும் குடிநீர் வசதி போன்ற இதர அடிப்படை வசதிகளை மேம்படுத்திட 30 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். இதைத் தவிர, ஆண்டுதோறும், இதுபோன்ற வசதிகளை செய்து தர ஏதுவாக, இலங்கைத் தமிழர் வாழ்க்கைத் தர மேம்பாட்டு நிதியாக 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். இந்த அடிப்படை வசதிகள் மட்டுமல்லாமல், அவர்களின் பிள்ளைகளின் கல்வி மேம்பட, வாழ்வு சிறக்க பின்வரும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
முகாம்களில் வசிக்கக்கூடிய இலங்கை அகதிகளுக்கும், வெளிப்பதிவில் உள்ள அகதிகளுக்கும் உரிய உதவிகளை வழங்கிடவும், அடிப்படை வசதிகளை மேம்படுத்திடவும், குடியுரிமை வழங்குதல் மற்றும் அவர்களில் இலங்கை திரும்பும் அகதிகளுக்கு தகுந்த ஏற்பாடுகள் செய்தல் போன்ற நீண்டகாலத் தீர்வினைக் கண்டறிய ஏதுவாகவும், மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத் துறை அமைச்சர், மாண்புமிகு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர் ஒருவர், பொதுத் துறை செயலாளர், மறுவாழ்வுத் துறை இயக்குநர் மற்றும் பிற அரசு உயர் அலுவலர்கள், அரசு சாரா உறுப்பினர்கள், முகாம்வாழ் இலங்கைத் தமிழர்களுடைய பிரதிநிதி மற்றும் வெளிப்பதிவில் வசிக்கக்கூடிய அகதிகளுக்கான பிரதிநிதி ஆகியோரை உள்ளடக்கிய ஒரு ஆலோசனைக் குழு நிச்சயமாக விரைவில் அமைக்கப்படும்
இலங்கை தமிழர்கள் உள்ளிட்ட வெளிநாட்டவர் மீது பதிவு செய்துள்ள வழக்குகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.வழக்குகள் நிறைவடைந்த பிறகு, இலங்கைக்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.
இலங்கை தமிழர்களுக்கு ரேஷன் கடைகளில் விலையில்லாமல் அரசி வழங்கப்படும்.இலங்கை தமிழர் குழந்தைகள் கல்வி மேம்பட முதல் 50 மாணவருக்கான கல்வி, விடுதி கட்டணத்தை அரசே ஏற்கும்.
இலங்கை வாழ் தமிழர்களுக்கு மேம்படுத்தப்பட்ட வாழ்க்கையை அமைத்து தருவதை அரசு உறுதி செய்யும் என கூறினார்.
நன்றி :தினத்தந்தி