தஞ்சாவூரில் காவல்துறை உதவி ஆய்வாளராகப் பணிபுரியும் அனுராதா, தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்டு தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
தஞ்சாவூரில் உள்ள எஸ்.பி அலுவலகத்தில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புப் பிரிவில் காவல்துறை உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வருகிறார் அனுராதா. புதுக்கோட்டை மாவட்டம் நெம்மேலிபட்டி கிராமத்தைச் சேர்ந்த இவர், நேபாளம் தலைநகர் காத்மாண்டுவில் நடைபெறும் 13-வது தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் பளு தூக்கும் போட்டியில், இந்தியா சார்பில் கலந்துகொண்டு தங்கப்பதக்கம் வென்றுள்ளார். காவல்துறையைச் சேர்ந்தவர்கள், பொதுமக்கள் எனப் பலரும் அனுராதாவுக்கு பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.
தொடக்கம் முதல் தற்போது வரை அனுராதா கலந்துகொண்ட மகளிர் பிரிவு பளு தூக்கும் போட்டியில், தோல்வி என்பதே கண்டதில்லை. காவல் துறையில் உதவி ஆய்வாளராகப் பணி புரிந்துகொண்டே பளு தூக்கும் போட்டிகளில் கலந்து வந்தார். இதற்கு, காவல்துறை அதிகாரிகள் முழு ஒத்துழைப்பு கொடுத்து வருகின்றனர். கடந்த ஜூலை மாதம் நடந்த காமன்வெல்த் போட்டியில் கலந்துகொண்டு, மகளிருக்கான 83 கிலோ எடை பிரிவில் தங்கம் வென்றார்.
இதையடுத்து, தற்போது நடைபெற்று வரும் தெற்காசியப் போட்டியில், பளு தூக்கும் போட்டியில் விளையாட இந்திய அணி சார்பில் கலந்துகொண்டார். பெண்களுக்கான பளு தூக்கும் போட்டியில், 87 கிலோ எடைப்பிரிவில் வெற்றிபெற்று தங்கப்பதக்கம் வென்றுள்ளார். இது எங்களுக்கு பெரும் மகிழ்ச்சியைத் தந்தது. இதன்மூலம், தமிழ்நாட்டிற்கும் இந்தியாவிற்கும் அனுராதா பெருமை சேர்த்துள்ளார் எனப் பலரும் பாராட்டுகிறார்கள்.
மேலும், தமிழ்நாடு சார்பாகப் பெண்கள் பிரிவில் தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்டு தங்கப்பதக்கம் வென்ற முதல் பெண்மணி என்ற பெருமையும் அடைந்திருக்கிறார்.