‘கெளரவமான வேலை வாங்கித் தருகிறோம்’ என்று சொல்லி சில ஏஜென்சி நிறுவனங்கள் குடும்பப் பெண்களை வெளிநாட்டுக்கு அனுப்பிவைத்து, அங்கே வீட்டு வேலைகளைச் செய்ய வைப்பது பற்றியும், அடிமையாய் வைத்திருப்பது பற்றியும் நாம் செய்தித்தாள்களிலும், சமூக வலைதளங்களிலும் படித்து வருகிறோம். இந்த நிலையில், சமீபத்தில் சிவகங்கையைச் சேர்ந்த ஒரு பட்டதாரி பெண் இதுபோன்ற அவஸ்தைக்கு ஆளாகியுள்ளார். அவரை, ‘தமிழகச் சேவைக் குழு மலேசியா’ அமைப்பினர் மீட்டு சொந்த ஊருக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இதுகுறித்து ‘தமிழகச் சேவைக் குழு மலேசியா’ நிறுவனரும், மலேசியா வாழ் தமிழருமான நாகப்பட்டினத்தைச் சேர்ந்த மூர்த்தி கூறியதாவது:
“சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர் பானு (பெயர் மாற்றப்பட்டுள்ளது). முதுகலை பட்டதாரியான இவரிடம், திருச்சியைச் சேர்ந்த சிவா (ஏஜென்ட்) என்பவர், மலேசியாவில் குழந்தைகளுக்கு டியூஷன் எடுக்கும் வேலைக்கு உங்களை அனுப்பிவைக்கிறோம் என்று சொல்லி அந்த நாட்டில் வசிக்கும் இன்னொரு பெண் ஏஜென்டிடம் பானுவை அனுப்பி வைத்துள்ளார்.
ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்
அந்தப் பெண் ஏஜென்ட், சிலாங்கூர் மாநிலத்தில் வசிக்கும் ஒரு தமிழ்க் குடும்பத்திடம் வீட்டு வேலை செய்வதற்காகப் பானுவை 5,000 வெள்ளிக்கு விற்றுள்ளார். அந்த வீட்டு உறுப்பினர்கள், பானுவை வெளியில் எங்கும் அனுப்பாமல் வீட்டில் அடைத்தபடியே மிகவும் கடுமையாக வேலை வாங்கியுள்ளனர். அதுமட்டுமன்றி, போதுமான உணவையும் அளிக்காமல் கொடுமைப்படுத்தி வந்துள்ளனர். தொலைபேசி இணைப்பையும் கட் செய்துள்ளனர். இரண்டு மாத விசா அனுமதியோடு டியூஷன் எடுக்க வந்த பானு, இப்படியான துன்பங்களோடு ஒன்றரை வருடம் வீட்டில் அடைத்துவைத்துக் கொடுமைப்படுத்தப்பட்டுள்ளார். இந்த நிலையில், பாதிக்கப்பட்ட அந்தப் பெண் ‘தமிழகச் சேவைக் குழு மலேசியா’ குழுவைப் பற்றிய தகவல் தெரிந்து எங்களை அழைத்துப் பேசினார்.
பின் தமிழகச் சேவை குழுவின் தலைவர் காளையப்பனும் அவரது குழுவும் அங்கு சென்று அவரை மீட்டெடுத்து விசா உரிமம் காலாவதியானதற்கு அபராதம் செலுத்தி இந்தியத் தூதரகத்தின் துணையோடு அவரைத் தமிழகத்துக்கு அனுப்பிவைத்தோம்” என்றவர், “இப்படிப் பல பெண்கள் இங்கு சிக்கிக்கொண்டிருப்பதாக எங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது. அவர்களையும் நாங்கள் விரைவில் மீட்டெடுக்க உள்ளோம். இதேபோல் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணைக் கடந்த மாதம் தமிழகத்துக்கு அனுப்பிவைத்துள்ளோம். இதுபோன்று பாதிப்புக்குள்ளாகும் நபர்களை மீட்டெடுத்து அவர்களைச் சொந்த ஊருக்கு அனுப்பிவைப்பதிலும், இறந்தவர்களின் சடலங்களை அவர்களுடைய ஊருக்கு இலவசமாக அனுப்பிவைப்பதிலும் நாங்கள் தொடர்ந்து செயல்பட்டு வருகிறோம். இந்த அமைப்புக்குப் பெரிதும் துணையாக நிற்பது இந்தியத் தூதரகமே ஆகும்” என்றவரிடம், “வெளிநாட்டில் பெண்கள் இப்படிச் சிக்கிக்கொள்வதற்கு என்ன காரணம்” என்று அவரிடம் கேட்டோம்.
“பாஸ்போர்ட்டில் இ.சி.ஆர். (Emigration Check Required), இ.சி.என்.ஆர். (Emigration Check Not Required) என இரண்டு வகை உண்டு. இதில் குறைவாகப் படித்தவர்கள் வெளிநாடு சென்று ஏமாறாமல் இருப்பதற்கு அவர்களுக்குக் குறிப்பிடப்பட்ட நிறுவனத்தில் வேலை கிடைத்துள்ளதா, இவர்களை அழைத்துச் செல்லும் ஏஜென்சி நம்பகத்தன்மை வாய்ந்ததா என்பதை ஆராய்வதற்காக உள்ளதே இ.சி.ஆர். மற்றொரு வகையான இ.சி.என்.ஆர். என்பது மேற்படிப்பு படித்தவர்களுக்கு, அவர்கள் வேலை செய்யப்போகும் நிறுவனத்தைப் பற்றி அறிந்துவைத்திருப்பதாகும். இந்த இ.சி.என்.ஆர். பாஸ்போர்ட்டில் வெளிநாடு செல்பவர்கள்தாம் அதிகளவில் ஏமாற்றப்படுகின்றனர். இவர்கள், ஆரம்பத்தில் குறைந்தகால விசாவில் வெளிநாடு செல்வார்கள். அங்கு சென்று வேலை பார்க்கும் நிறுவனத்தின் ஆணையை வைத்து பணி முடிவடையும் காலம் வரை விசாவை நீட்டிப்பது வழக்கம். ஆனால், வேலையே கிடைக்காமல் ஏமாற்றம் அடைபவர்களுக்கு விசா நீட்டிக்கவும் முடியாமல்; போதுமான பணம் இல்லாமல்; சொந்த ஊருக்குத் திரும்பவும் முடியாமல் அங்கேயே சிக்கிக் கொள்கின்றனர். இதனால்தான் இந்தத் துன்பங்களுக்கு ஆளாகும் நிலை ஏற்படுகிறது” என்றார் மிகத் தெளிவாக. பாதிக்கப்படும் நபர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் ‘தமிழகச் சேவைக் குழு மலேசியா’வுக்கு ஒரு ராயல் சல்யூட்.
- விகடன்