மலேசியா : 1,00,000க்கும் மேற்பட்டவர்களை மலாயா தமிழர்களை பலிகடா ஆக்கிய சயாம் மரண ரயில் திட்டத்தில் நட்ட ஈடு கொடுக்காமல் மற(றை)க்கப்பட்ட வரலாறு பற்றிய கருத்தரங்கம்!

siam_burma_railway_tamils1கடந்த நூற்றாண்டின் முற்பகுதியில் ஜப்பானிய ஆதிக்க ஆட்சியாளர்களால் மேற்கொள்ளப்பட்ட சயாம்-பர்மா (மியன்மார்) மரண ரயில் தண்டவாளத் திட்டத்தில் செந்நீரையும் கண்ணீரையும் சிந்தியதுடன் அல்லாமல் பல்லாயிரக் கணக்கான இந்தியர்கள் தம் இன்னுயிரையும் இழந்த கொடுமை யெல்லாம், மலேசிய இந்தியர்களின் வரலாற்றில் ஒரு கருப்பு அத்தியாயமாகும். அதில் தப்பிப் பிழைத்து இன்று உயிர் வாழ்கின்ற நூற்றுக் கணக்கானோர் தங்களின் உள்ளக் குமுறலையும் உரிமைக் குரலையும் எழுப்ப வகையின்றி முதுமையுடன் முடக்கிக் கிடக்கின்றனர். இது குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும் பாதிக்கப்பட்டவர்களின் நியாயத்தை எடுத்துரைக்கவும் சயாம் மயான ரயில் திட்ட தன்னார்வக் குழுவினர் தற்பொழுது தீவிர முயற்சி மேற்கொண்டு வருவதுடன் இதன் தொடர்பில் கோலாலம்புரில் முழு நாள் கருத்தரங்கிற்கும் ஏற்பாடு செய்து வருகின்றனர் என்று இக்குழுவின் தலைவர் பி.சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

siam_burma_railway_tamils2மலேசிய சுதந்திர வரலாற்றுடன் பின்னிப் பிணைந்த இந்த மரண ரயில் திட்டத்தில் போர்க் கைதிகள் கட்டாயமாக ஈடுபடுத்தப்பட்டனர் என்பதை விட கொடுமைப்படுத்தப் பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை கிடைத்த ஆவணங்களின்படி, மேற்கத்திய போர்க் கைதிகள் சுமார் 63,000 பேர் இதில் ஈடுபடுத்தப்பட்டதாகவும் இதில் பதின்மூன்றாயிரம் பேர் வரை மடிந்ததாகவும் தெரிகிறது. போர் முடிந்த பின், 415 கி.மீ. நீளமுள்ள தண்டவாள பாதை நெடுகிலும் புதைக்கப்பட்டவர்களின் உடல்களெல்லாம் சேகரிக்கப்பட்டு, அவை, தாய்லாந்தில் உள்ள காஞ்சனாபுரி மாவட்டத்தில் இரு மயானங்களிலும் மியான்மாரின் தன்புசயாட்டில் உள்ள ஒரு மயானத்திலும் மறு அடக்கம் செய்யப்பட்டன.

இதை யெல்லாம் உறுதிப் படுத்திக் கொண்ட நேச நாட்டுப் படையினர், உயிர் தப்பியவர்களை மீட்டு தத்தம் தாய் நாடுகளுக்கு அனுப்பி வைத்ததுடன் அவர்களுக்கு உரிய நட்ட ஈட்டையும் பெற்றுத் தந்தனர். ஆனால், ஆசியப் போர்க் கைதிகள் அப்படியேக் கைவிடப்பட்டனர். இந்த மரண ரயில் தண்டவாளத் திட்டத்தில் பர்மா, தாய்லாந்து, மலாயா, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த போர்க் கைதிகள் அதிகமாக பாதிக்கப்பட்டாலும், தமிழர்கள்தான் அதிக பாதிப்புக்கு ஆளானார்கள்.

இந்த மரண ரயில் திட்டத்தை நிறைவேற்ற மலாயா தமிழர்கள் உட்பட சுமார் இரண்டு இலட்சத்து 70 ஆயிரம் ஆசியர்கள் ஜப்பானிய இராணுவ ஆட்சியாளர்களால் கட்டாயமாக ஈடுபடுத்தப்பட்ட நிலையில், தற்பொழுது கிடைத்துள்ள சில ஆதாரங்களின் அடிப்படையில் ஏறக்குறைய ஒரு இலட்சம் மலாயா தமிழ்த் தொழிலாளர் அதிக நேர கடின உழைப்பு, முறையான பராமரிப்பு இன்மை, சுகாதாரக் கேடு போன்ற காரணங்களால் மடிந்து போயுள்ளனர். இப்படி அநியாயமாக மாண்டவர்களைப் பற்றிய விவரமெல்லாம் முறையாக தொகுக்கப்படவில்லை; இவர்களின் தியாகமும் மலேசிய வரலாற்றில் இடம் பெறவில்லை. மொத்தத்தில் இதில் பாதிக்கப்பட்ட தமிழர்களைப் பற்றிய துல்லியமான கணக்கோ அல்லது தொகுப்போ எதுவும் இல்லை. போதாக்குறைக்கு, இந்திய, மலாய, பிரித்தானிய, ஜப்பானிய அரசுகளும் கைகழுவி விட்டன.

இத்தகைய நிலையில் சயாம் மயான ரயில் திட்ட தன்னார்வக் குழுவினர் மறைக்கப்பட்டும் மறக்கப்பட்டும் போன சயாம் மயான ரயில் தண்டவாளத் திட்டத்தைப் பற்றியும், இதில் இலட்சக் கணக்கான தமிழர்கள் அநியாயமாக பாதிக்கப்பட்டதையும் குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த ஒரு முழு நாள் கருத்தரங்கை வரும் செப்டம்பர் மாதம் 16-ஆம் நாள் காலை 9.30 மணி முதல் கோலாலம்பூர், ஜாலான் ராஜா லாவுட் மாநகர் மன்ற ஆடிட்டோரியத்தில் சயாம் மயான ரயில் திட்ட தன்னார்வக் குழுவின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

இலவசமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இக்கருத்தரங்கின் தொடர்பில் நன்கொடைகள் வரவேற்கப்படும். அதேவேளை, சயாம் மயான ரயில் திட்டத்தில் ஈடுபட்டு, அதிலிருந்து மீண்ட பெரியவர்களும் மற்றவர்களும் தொடர்பு கொள்ள வேண்டப்படுகின்றனர்.

செய்தி உதவி : ஹிந்துராப், மலேசியா

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: