காமன்வெல்த் போட்டியில், தமிழக வீரர் சதீஷ்குமார் சிவலிங்கம் தங்கம் வென்று அசத்தியுள்ளார்.
21-வது காமன்வெல்த் போட்டிகள், ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் 4-ம் தேதி தொடங்கியது. 11 நாள்கள் நடக்கும் இந்த காமன்வெல்த் போட்டிகளில், மொத்தம் 71 நாடுகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர். ஆடவருக்கான பளுதூக்குதலில், 56 கிலோ பிரிவில் இந்தியாவின் குருராஜ் வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவின் பதக்க வேட்டையைத் தொடங்கிவைத்தார். அதன்பிறகு, இந்தியாவின் மீராபாய் சாய்கோம் சானு, சஞ்சிதா சானு ஆகியோர்கள் பெண்கள் பளு தூக்கும் பிரிவில் அடுத்தடுத்து தங்கம் வென்று அசத்தினர். அதேபோல, ஆடவர் பளுதூக்கும் பிரிவில் தீபக் லேதர் வெண்கலம் வென்றார்.
இந்நிலையில், இன்று நடைபெற்ற ஆடவர் 77 கிலோ பளுதூக்குதல் பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த சதீஷ்குமார் சிவலிங்கம் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். சதீஷ், வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியைச் சேர்ந்தவர். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து, நகராட்சிப் பள்ளியில் படித்த சதீஷ், கடந்த 2014-ம் ஆண்டு, ஸ்காட்லாந்தில் நடைபெற்ற காமன்வெல்த்திலும் தங்கம் வென்றிருந்தார். இதன்மூலம் 3 தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் என 5 பதக்கங்களுடன் காமன்வெல்த் பதக்கப் பட்டியலில் இந்தியா 3-வது இடத்தைப் பிடித்துள்ளது. தங்கம் வென்ற சதீஷுக்கு, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.