எம்.ஜி.ஆர் மறைந்து 31 ஆண்டுகள் கடந்த பின்னரும் தமிழகத்தைத் தாண்டி மலேசியாவிலும் அவர் புகழ் மங்காமல் இருப்பதற்கு உதாரணமாக அங்குள்ள அரசியல் கட்சிகள் அவரது படத்தை போட்டு ஓட்டு கேட்பதைக் காணமுடிகிறது.
தமிழ் திரையுலகின் இமேஜ் கதாநாயகன் என்றால் அது எம்.ஜி.ஆர்தான். திரையில் தனக்கிருந்த அதே இமேஜை, நல்ல பெயரை கடைசி வரை எம்.ஜி.ஆர் காப்பாற்றினார். திரையில் நல்லவராக நடித்த எம்.ஜி.ஆர் ஒரு இடத்தில் கூட கொடூரமான காட்சிகளை, வில்லன்களை கொடூரமாகக் கொல்லும் காட்சிகளை வைத்ததில்லை.
‘நாளை நமதே’ படத்தில் தனது பெற்றோரைக் கொன்ற நம்பியார் கடைசிக் காட்சியில் ரயில் தண்டவாளத்தில் கால் சிக்கிய நிலையில் கதறுவார். எம்.ஜி.ஆர் அவரைக் காப்பாற்றப் போராடுவார். இதுதான் மனிதாபிமானம். இது போன்று காட்சி அமைப்பில் மக்களுக்கு வன்முறை தவிர்த்து நல்ல கருத்துகளை வழங்கியவர்.
வாழும்போது செய்த உதவியால் பலராலும் நினைவுகூரப்படுபவர். மறைந்து 30 ஆண்டுகள் கடந்த பின்னரும் மக்களால் நேசிக்கப்படும் தலைவராக எம்.ஜி.ஆர் உள்ளார். ஆனால் அதையும் தாண்டி சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளிலும் எம்ஜிஆரின் புகழ் இன்றும் மங்காமல் உள்ளதுதான் அவருக்கு கிடைத்துள்ள மரியாதை. எம்ஜிஆருக்கு மலேசியாவில் ஒரு கோயிலும் உள்ளது.
இதற்கு சிறு உதாரணம் எம்ஜிஆரின் படங்களில் ஸ்டண்ட் மேனாக நடித்து பின்னர் எம்ஜிஆரின் மெய்க்காப்பாளர்களில் ஒருவராக விளங்கிய ராமகிருஷ்ணனுக்கு கடந்த 2014-ம் ஆண்டு மலேசியாவில் நடந்த விழாவில் நினைவுப் பரிசு வழங்க அழைத்தனர். அப்போது அவர் எம்ஜிஆருடனான தனது நினைவுகளைப் பகிர்ந்தபோது மலேசிய அமைச்சர் முதல் அனைவரும் மகிழ்ச்சியுடனும் ஆர்வத்துடனும் கேட்டனர்.
விழாவின் இறுதியில் மேடையிலிருந்து இறங்கிய ராமகிருஷ்ணனின் கரங்களைப் பற்றியபடி அவரை தாங்கிப்பிடித்து அமைச்சர் டாக்டர் கோ சூ கூன் அழைத்து வந்த போது, இருக்கட்டும் பரவாயில்லை என்ற ராமகிருஷ்ணனிடம் நீங்கள் எம்ஜிஆருக்கு சேவை செய்தவர் என மலேசிய அமைச்சர் கூறினார். எம்.ஜி.ஆர் உடன் இருந்தவருக்கே அவ்வளவு மரியாதை கொடுக்கும் மக்கள் எம்.ஜி.ஆர் மீது எவ்வளவு மதிப்பு வைத்திருப்பார்கள் என்பதற்கு இந்த சம்பவமே உதாரணம்.
இன்றும் மலேசியாவின் அரசியல் கட்சிகள் தேர்தலில் யார் படத்தை பயன்படுத்துகிறார்களோ இல்லையோ, எம்.ஜி.ஆர் படத்தை போடாமல் தேர்தல் பிரச்சாரத்தை நடத்த வாய்ப்பில்லை. காரணம் மலேசியாவில் பெருவாரியாக இந்தியர்கள் அதிலும் தமிழர்கள் அதிகம் உள்ளனர்.
மலேசியத் தமிழர்களின் உள்ளங்களில் இன்றும் நீங்கா இடம் பிடித்திருப்பவர் எம்.ஜி.ஆர் என்பதால் எம்ஜிஆரின் படத்தை போடாமல் தேர்தலை நடத்த முடியாது என்ற நிலைக்கு அங்குள்ள கட்சிகள் ஆளாகியுள்ளன. இது ஒவ்வொரு தேர்தலிலும் காணும் காட்சி. அவர்களால் நேசிக்கப்படும் எம்ஜிஆருக்கு நெருக்கமானவர்கள் என்று காட்டிக்கொள்ள அவர் படத்தைப்போட்டு ஓட்டு கேட்கின்றனர்.
கடந்த 2013-ம் ஆண்டு நடந்த மலேசியத் தேர்தலிலும் அங்குள்ள அரசியல் கட்சிகள் எம்.ஜி.ஆர் படத்தை போட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டன. தற்போது அந்த நாட்டில் மீண்டும் தேர்தல் நடக்கிறது. இந்தத் தேர்தலில் மலேசிய காங்கிரஸ் தனது தேர்தல் பிரச்சார பேனரில் தங்களது தேர்தல் சின்னமான தராசு சின்னத்தில் ஓட்டு கேட்டு வைத்திருக்கும் விளம்பர பேனரில் எம்.ஜி.ஆர் படத்தை வைத்து ஓட்டு கேட்டுள்ளனர்.
மலேசியா முழுவதும் எம்.ஜி.ஆர் படத்தை போட்டு வாக்கு கேட்டு பிளக்ஸ் பேனர்கள் வைத்துள்ளது வெளியாகி உள்ளது. எம்.ஜி.ஆர் இறந்து முப்பது ஆண்டுகள் கழிந்த நிலையிலும் வெளிநாட்டில் அவர்களுடைய நாடாளுமன்றத் தேர்தலுக்கு எம்ஜிஆரின் படத்தைப் பயன்படுத்துகின்றனர்.
இந்த நிகழ்வு மலேசிய தமிழ் மக்கள் நெஞ்சில் நீக்கமற நிறைந்திருக்கும் ஒரே தலைவர் எம்.ஜி.ஆர் தான் என்பதை நிரூபிக்கும் வண்ணம் உள்ளது.