மலேசிய நாட்டில் ஒரு பள்ளியின் ஒரு வகுப்பில் தொடங்கப்பட்ட தமிழ்க்கல்வி கற்பித்தல் இவ்வாண்டுடன் 200 ஆண்டுகள் முழுமைபெறுகிறது. 1816 ஆம் ஆண்டு, பினாங்கு பிரி பள்ளியில் முதல் அலுவல்பூர்வ தமிழ் வகுப்பு தொடங்கப்பட்டது. அன்று தொட்டு, இன்று வரை தமிழ்க்கல்வி பல மாறுதல்களையும், மேம்பாடுகளையும் கண்டு சிறப்பாக மலேசிய மண்ணில் மிளிர்கிறது.
மலேசியத் தமிழ்ப் பள்ளிகளின் 200 ஆண்டு கால வரலாறு விழாக்கோலம் காண்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மலேசியத் தமிழ் அறவாரியம் முன்நின்று செய்கிறது. மலேசிய மண்ணில் தமிழ்க் கல்வியின் 200 ஆம் ஆண்டு நிறைவின் பொருட்டு மலேசியத் தமிழ் அறவாரியம் அமைப்பு அஞ்சல் தலையினை வெளியிட்டு சிறப்பித்துள்ளது.
நேற்று (18-08-2016) மலேசியத் தமிழ் அறவாரியத்தின் 200 ஆண்டுகள் மலேசியாவில் தமிழ்க் கல்வி எனும் அஞ்சல் முத்திரை வெளியீட்டு விழா சிறப்புற நடைப்பெற்றது. பெட்டாலிங் செயா விவேகானந்தா தமிழ்ப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் கழகத்தின் சார்பாக அதன் கழகத் தலைவர் திரு.மதியழகன் அஞ்சல் முத்திரையைப் பெற்றுக்கொண்டார்.
மலேசியத் தமிழ் அறவாரியம் அமைப்பின் செயலாளர் திரு.செல்வசோதி இராமலிங்கம்.
தமிழ்க் கல்வி கற்பித்தல் இன்று மலேசிய நாட்டில் இலட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களையும், பத்தாயிரத்திற்கும் கூடுதலான ஆசிரியர்களையும், ஐநூற்று இருபத்தி நான்கு தமிழ்ப் பள்ளிகளையும் கொண்ட ஒரு ஆற்றலாக உருவெடுத்துள்ளமைக்கு இருநூறு ஆண்டுகளுக்கு முன்பே வித்திட்டவர் வணக்கத்திற்குரிய ரோபர்ட் சுபார்க் அட்சிங்ச் (Robert Sparke Hutchings (பி. 1782; இ. 1827) ஆவார். இவர் 1816 ஆம் ஆண்டு பினாங்க் இலவச பள்ளியை உருவாக்கினார்.
தமிழ்க்கல்வி வளம் பெற உழைத்தவர்களுக்கு நன்றி !
நன்றி : கற்றது தமிழ் / திரு.நித்தி – படம் : திரு.செகதீசன் ஆறுமுகம்