லண்டனிலும் தமிழ் இருக்கை!

லண்டனிலும் தமிழ் இருக்கை!

லண்டனிலும் தமிழ் இருக்கை!

உலகப்புகழ் பெற்று விளங்கும் லண்டன் பல்கலைக்கழகத்தில் தமிழுக்கான இருக்கையைத் துவங்குவதற்கு அதிகாரப்பூர்வமான ஒப்புதலை பல்கலைக்கழகம் வழங்கியுள்ளது. இதற்கான ஒப்புதலை கல்லூரியின் துணை இயக்குனர் நவதேசு அவர்கள் இலண்டன் தமிழ் இருக்கை ஒருங்கமைப்புக் குழுவினரிடம் வழங்கினார்.

கடந்த சில வருடங்களாகவே உலகம் முழுவதுமுள்ள தமிழர்களிடையே தமிழ் மொழி சார்ந்த எழுச்சி அதிகரித்துள்ளதாக பரவலாக பேசப்படுகிறது. அதிலும், குறிப்பாக ஜல்லிக்கட்டுக்கான போராட்டத்தை அடுத்து, உலகம் முழுவதுமுள்ள தமிழர்கள் ஒன்றிணைந்த ஒரு விடயம் என்றால் அது அமெரிக்காவிலுள்ள ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கையை அமைக்கும் முயற்சியே என்று கருதப்படுகிறது.

ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கையை அமைப்பதற்காக நிதி முழுவதுமாக திரட்டப்பட்டு அதற்கான விழாவும் வட அமெரிக்க தமிழ்ச் சங்கத்தின் ஆண்டு விழாவில் சமீபத்தில் கொண்டாடப்பட்டது. இந்நிலையில், லண்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கையை தொடங்குவதற்கான முயற்சிகளை “TamilChairUK” என்ற அமைப்பினரால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

லண்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை:

லண்டன் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் எஸ்ஓஏஎஸ் (SOAS – School of Oriental and African Studies) கல்வி நிறுவனத்தில் 1931 முதல் இயங்கிவந்த தமிழ் படிப்புகள், 1995களுக்குப் பிறகு மாணவர் சேர்க்கை குறைந்ததாலும், கல்லூரியின் பொருளாதார முதலீடுகள் குறைந்ததாலும் நிறுத்தப்பட்டது. உலகளாவிய தமிழர்களின் எழுச்சியாலும், புலம்பெயர் தமிழ் மக்களின் தமிழ் ஆர்வத்தாலும், ஐக்கிய இராச்சியத்தில் தமிழ் படிப்புக்கான தேவைகள் அதிகரித்துள்ளதாலும், தமிழ் படிப்புகளை மீண்டும் கொண்டுவருவது என்று பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளதாக கூறுகிறார் லண்டன் பல்கலைக்கழக தமிழ் இருக்கையின் தலைவரான செலின் சார்ச்.

“ஐக்கிய ராஜ்ஜியத்தில் தமிழ் இருக்கை ஒன்றை அமைப்பது தொடர்பாக 10 பேர் கொண்ட ஒரு தன்னார்வக் குழு, எனது தலைமையில், கடந்த வருடம் நவம்பர் முதல் செயல்பட்டு வருகிறது. இந்த தமிழ் இருக்கை அமைப்பு, ஆக்சுபோர்ட், கேம்பிரிட்ச், மற்றும் லண்டன் பல்கலைக்கழகங்களின் தமிழ் வளர்ச்சி சூழலை ஆய்வு செய்தது. அப்போது, லண்டன் பல்கலைக்கழகத்தில் ஏற்கனவே சிறப்பாக இயங்கி, தற்போது செயல்படாமல் இருக்கும் தமிழ் இருக்கையைப் புதுப்பிப்பதே சிறந்தது என்று உணர்ந்து, அந்த பல்கலைக்கழகத்துடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியதன் விளைவாக இரு வாரங்களுக்கு முன்பு தமிழ் இருக்கையை அமைப்பதற்கான அதிகாரப்பூர்வ ஒப்புதல் கல்லூரி நிர்வாகத்திடமிருந்து கிடைத்துள்ளது” என்கிறார் செலின்.

லண்டனில் தமிழ் இருக்கைக்கான தேவை என்ன?

பிரிட்டனில் கிட்டத்தட்ட மூன்று இலட்சம் தமிழர்கள் வாழ்ந்து வருகிறார்கள். இரண்டாம் தலைமுறையாக வாழும் அவர்களில் பெரும்பான்மையானோர் இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலிருந்து பிரிட்டனில் குடியேறியவர்களாவர்.

இரண்டாம், மூன்றாம் தலைமுறையை சேர்ந்தவர்களிடையே “எனக்கு தமிழ் தெரியாது. ஆனால், தெரிந்துகொள்ள விரும்புகிறேன்” என்று கூறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்று கூறுகிறார் செலின்.

“பிரிட்டனில் தமிழர்கள் அதிகளவில் வசிக்கும் நகரங்களில் தமிழ் பள்ளிக்கூடங்களும், பகுதிநேர பயிற்சி வகுப்புகளும் நடத்தப்படுகின்றன. ஆனால், மேல்நிலை பள்ளிக்கல்வியிலோ, கல்லூரியிலோ தமிழை தொடர்வதற்கான வாய்ப்பில்லை. மேலும், தமிழை ஒரு பாடமாக எடுத்து படித்தாலும் அது கேம்பிரிட்ஜ் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களாலும், தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகளிலும் மதிப்பீட்டுக்கு எடுத்துக்கொள்ளப்படுவதில்லை. எனவே, தமிழை படிக்கும் ஆர்வம் கொண்டவர்களுக்கு ஒரு வாய்ப்பளிக்கவும், தமிழுக்கு மகுடமாகவும் இந்த இருக்கையை தொடங்குவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன” என்று அவர் விவரிக்கிறார்.

தமிழ் மீது ஆர்வம் கொண்டவர்களுக்கு முற்றிலும் இலவச படிப்பு:

லண்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கையை அமைப்பதற்கு தேவையான நிதியை திரட்டும் பணி இன்னும் சில வாரங்களில் தொடங்கி 2020க்குள் முடித்து 2021ஆம் ஆண்டில் இருக்கையை தொடங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், ஒரு தமிழ்த் துறையை போன்றே தமிழில் மூன்றாண்டுகால இளங்கலை பட்டப்படிப்பு, ஓராண்டு முதுகலை பட்டமேற்படிப்பு மற்றும் முனைவர் பட்டப்படிப்பு தொடங்கப்படவுள்ளது.

“குறிப்பாக, இந்தியா, பிரிட்டன் மட்டுமல்லாது உலகம் முழுவதுமுள்ள தமிழ் மொழி மீது ஆர்வம் கொண்டவர்களில் நான்கு பேரை தேர்ந்தெடுத்து, ஆராய்ச்சி மற்றும் முதுகலை பட்டப்படிப்பை முற்றிலும் இலவசமாக வழங்குவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது” என்று செலின் கூறினார்.

இதற்கு இவ்வளவு நிதி ஏன் தேவைப்படுகிறது?
லண்டன் எஸ்ஓஏஎஸ் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கையை அமைப்பதற்கு சுமார் 50-60 கோடி இந்தியா ரூபாய் தேவைப்படும் என்று அந்த இருக்கை குழு தெரிவிக்கிறது.

ஹார்வர்ட் தமிழ் இருக்கை அமைக்கப்படும்போதே அதற்கு ஏன் இவ்வளவு கோடி ரூபாய் தேவைப்படுகிறது? அந்த பணம் என்ன செய்யப்படும்? போன்ற பல கேள்விகள் எழுந்தன. இதுகுறித்து, செலினிடம் கேட்டபோது, “லண்டன் பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்காக அளிக்கப்படும் அனைத்துவிதமான நிதியுதவிகளும் நேரடியாக பல்கலைக்கழகத்தின் கணக்கை சென்றடையும். போதுமான தொகை கிடைத்த பின்னர் சட்டப்படி அந்த பணம் வங்கியில் செலுத்தப்பட்டு, அதன் மூலம் கிடைக்கும் வட்டியை கொண்டே பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் இருக்கைக்கு தேவையான மற்ற நிதித்தேவைகள் பூர்த்தி செய்யப்படும்” என்று கூறுகிறார்.

மேலும், லண்டன் ஸ்கூல் ஆஃப் எக்னாமிக்ஸ் போன்று மொத்தமுள்ள 22 லண்டன் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் தமிழை ஒரு விருப்பப்படமாக எடுத்து படிப்பதற்கான முயற்சியையும், லண்டனிலுள்ள பிரிட்டிஷ் நூலகத்தில் வைக்கப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான பழமையான தமிழ் புத்தகங்கள் மற்றும் ஓலைச்சுவடிகளை மின்னணுமயமாக்கம் செய்வதற்கும் இந்த நிதியை பயன்படுத்தவுள்ளதாக தமிழ் இருக்கை குழுவினர் தெரிவித்துள்ளனர்.

“வெளிநாடுகளில் தமிழர்கள் ஒன்றிணைந்து செயல்படுகிறார்கள்”
“தமிழகத்தில் சென்னை, மதுரை போன்ற நகரங்களில் ஆங்காங்கே 10-20 பேர் பங்கேற்கும் சிறியளவிலான இலக்கிய கூட்டங்கள் தினந்தினமும், குறிப்பிட்ட காலத்துக்கொருமுறை புத்தக கண்காட்சிகளும் நடைபெற்று வருகின்றன. ஆனால், அமெரிக்கா, பிரிட்டன் போன்ற வெளிநாடுகளில் தமிழுக்காக நடைபெறும் நிகழ்வுகளில் அதிகளவிலான தமிழர்கள் ஒன்றுகூடுவதை பார்க்க முடிகிறது” என்று கூறுகிறார் லண்டனிலுள்ள பல்கலைக்கழகத்தில் அமையவுள்ள தமிழ் இருக்கையான குழு உறுப்பினர்களில் ஒருவரான சிவா சுப்ரமணியம்.

கடந்த இரண்டாண்டுகளாக பணியின் காரணமாக லண்டனில் வசித்து வரும் சிவாவிடம், தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக முன்னெடுக்கப்படும் முயற்சிகளில் தமிழகத்துக்கும், வெளிநாடுவாழ் இந்தியர்களுமுள்ள வேறுபாடு குறித்து கேட்டோம்.

அப்போது பேசிய அவர், “தமிழகத்தில் மொழி, இலக்கியம் சார்ந்த பணிகள் ஏராளமாக மேற்கொள்ளப்பட்டாலும், வெளிநாடுகளில் மேற்கொள்ளப்படும் முன்னெடுப்புகள் அதைவிட பெரியளவிலும், நேர்த்தியாகவும் எனக்கு தெரிகிறது. மேலும், தமிழகத்தில் எடுக்கப்படும் ஒரு முன்னெடுப்புக்கு மாநிலம் தழுவிய அளவில் ஒற்றுமை காணப்படுவதில்லை”

” ஆனால், லண்டன் தமிழ் இருக்கையாகட்டும், ஹார்வர்ட் தமிழ் இருக்கையாகட்டும் அந்தந்த நாடுகளிலுள்ள பல்வேறு தமிழ் அமைப்புகள் ஒன்றிணைந்து செய்யப்படுவது நம்பிக்கையூட்டுகிறது” என்று அவர் மேலும் கூறினார்.


தமிழ் இருக்கைக்கும், தமிழ்த் துறைக்கும் என்ன வேறுபாடு?

– ஒரேயொரு பேராசிரியர் மூலம் சராசரியாக பத்து ஆராய்ச்சி மாணவர்களை கொண்டு ஆராய்ச்சிகளும், கருத்தரங்குகளும், மொழிசார்ந்த நிகழ்வுகள் மட்டுமே நடத்தப்படுவது தமிழ் இருக்கை.

– துறைத்தலைவரையும், அவர்களின் கீழ் பணியாற்றும் பேராசிரியர்கள், துணைப்பேராசிரியர்கள், விரிவுரையாளர்களை கொண்டு தமிழில் இளநிலை, முதுகலை பட்டப்படிப்புகளும், ஆராய்ச்சி படிப்பும் வழங்கப்பட்டால் அதுவே தமிழ்த் துறை.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: