தூத்துக்குடியில் சுட்டுக்கொல்லப்பட்டவர்களுக்கு நீதி வேண்டி கொழும்பில் போராட்டம்!

தூத்துக்குடியில் சுட்டுக்கொல்லப்பட்டவர்களுக்கு நீதி வேண்டி கொழும்பில் போராட்டம்!

தூத்துக்குடியில் சுட்டுக்கொல்லப்பட்டவர்களுக்கு நீதி வேண்டி கொழும்பில் போராட்டம்!

”தூத்துக்குடியில் போராடும் மக்களோடும், தாக்கப்பட்டு வதைபடுகிற மக்களோடும் இலங்கையில் உள்ள மக்கள் கைகோர்த்து, தோளோடு தோள் நிற்கிறோம் என்பதைக் கூறவே இன்று இங்கு கூடி நிற்கிறோம்” என்று கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகத்தின் முன்பாக தெரிவித்தார் சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் பிரதிநிதி மயூரன்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்

உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா?


தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டத்தில் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு நீதி வழங்கக் கோரி, இந்திய அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதற்காக கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகத்தின் முன்பாக இன்று (மே 30) மாலை 3.30 அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இயற்கை வளங்களைக் காப்பதற்காக மக்கள் போராடும் போது, அரசாங்கம், சூழலை நாசப்படுத்தும் முதலாளிகளோடு கைகோர்த்துக் கொண்டு, மக்களை எதிர்ப்பதாக போராட்டத்தில் பங்கெடுத்தவர்கள் குற்றஞ்சாட்டினர்.

இவ்வாறு போராடிய தூத்துக்குடி மக்கள் மீது மேற்கொள்ளப்பட்டத் தாக்குதலைக் கண்டித்த பதாதைகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர்.

இதுகுறித்து விரிவாக பேசினார் சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் பிரதிநிதி மயூரன்.

‘தம்முடைய காற்று, நிலம், நீர் ஆகியவற்றை நஞ்சாக்கிக் கொண்டிருக்கின்ற தொழிற்சாலையை எதிர்த்து தூத்துக்குடி மக்கள் அமைதி வழியில் போராடினார்கள். 100ஆவது நாளில் அரசாங்கம் தங்களின் காவல்துறையைக் கொண்டு 13 பேரை சுட்டுக் கொன்றது. இந்த கொலைகளுக்கு நியாயம் கேட்பதற்காகவும், இந்த கொலைகளுக்கு நீதி வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் இன்று இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்துகிறோம்” என்றார் மயூரன்.

”சூழலைப் பாதிக்கின்ற தொழிற்சாலைகள் கட்டப்படும் போதெல்லாம் மக்கள், இயற்கை வளங்களை, சூழலை, நாட்டைப் பாதுகாக்க போராடுகிறார்கள். அரசாங்கமோ சூழலை நாசப்படுத்துகிற முதலாளிகளோடு கைகோர்த்துக் கொண்டு, போராடும் மக்களை எதிர்க்கிறது. நாட்டைக் காக்க மக்களும், நாட்டுக்கு எதிராக அரசும் போராடுகிறது. இந்த நிலைமை உலகம் முழுவதும் இருக்கிறது. இன்று இங்கே தூத்துக்குடிக்காக பேசுகின்ற ஒவ்வொரு வார்த்தைகளும், தூத்துக்குடிக்கானது மட்டுமல்ல. இது உலகம் முழுவதும் நடக்கும் இவ்வாறான போராட்டங்களுக்குரியது.”என்றார்.

”எங்கெல்லாம் மக்கள் தங்களின் சூழலைக் காக்க போராடுகிறார்களோ, சூழலை சுரண்டும் முதலாளிகளுக்கு எதிராக போராடுகிறார்களோ, அந்த மக்களோடு நாங்கள் நிற்கிறோம் என்ற செய்தியை நாங்கள் உரக்க சொல்கிறோம். தூத்துக்குடியில் போராடும் மக்களோடும், அங்கு போராடி தாக்கப்பட்டு, வதைபடுகிற மக்களோடும் இலங்கையில் உள்ள மக்கள் கைகோர்த்து, தோளோடு தோள் நிற்கிறோம் என்பதை சொல்வதற்காக நாம் இங்கு கூடியிருக்கிறோம்” என்று மயூரன் மேலும் தெரிவித்தார்.

இனிமேலும் இவ்வாறு சூழலை சுரண்டுகின்ற நிறுவனங்கள், தொழிற்சாலைகள் ஆகியவற்றுக்கு எதிராக மக்கள் போராடும் போது, உலகம் முழுவதும் உள்ள உழைக்கும் மக்கள் அதனுடன் கைகோர்த்து நிற்பார்கள் என்பதையும் போராட்டத்தின் முடிவில் சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் பிரதிநிதி மயூரன் தெரிவித்தார்.

அத்துடன், இலங்கையில் உரிமைக்காக போராடிய மக்கள் கொலை செய்யப்பட்டதைப் போன்றே தூத்துக்குடியிலும் உரிமைக்காக போராடிய மக்கள் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள் என ஆர்ப்பாட்டத்தில் பங்கெடுத்த, ”அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கான அமைப்பின்” தலைவர் வண.பிதா சக்திவேல் தெரிவித்தார்.

மக்கள் உரிமைகளைக் காக்க தமிழக அரசும், இந்திய அரசும் முன்வர வேண்டுமே தவிர, உரிமைகளுக்காக போராடும் மக்களை ஒடுக்கக் கூடாது எனவும் அவர் கோரினார்.

”தூத்துக்குடியில் மக்கள் தேடித் தேடி கொல்லப்பட்டுள்ளனர். குறிவைத்து கொல்லப்பட்டுள்ளனர். போராட்டத்திற்கு தலைமை தாங்கியவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இலங்கையில் திட்டமிட்டு இனப்படுகொலை செய்யப்பட்டதைப் போன்று, தூத்துக்குடியிலும் உரிமைக்காக போராடிய மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். எங்கு மக்கள் ஒடுக்கப்படுகிறார்களோ, அவர்களுக்காக நாம் குரல்கொடுப்போம்.

இலங்கையோடு கைகோர்த்துக் கொண்டு, தமிழ் மக்களை ஒடுக்காது, மக்களைப் பாதுகாக்கின்ற அரசியலை செய்ய வேண்டுமென இந்தியாவிற்கு இந்தச் சந்தர்ப்பத்தில் நாம் ஒரு செய்தியைக் கூறுகிறோம். மக்கள் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும் என தமிழக அரசுக்கும், இந்தியா அரசுக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில் கோரிக்கை முன்வைக்கிறோம். அரசாங்கங்கள் வளங்களைப் பாதுகாக்க வேண்டும். வளங்கள் அழிக்கப்படுவதன் மூலம் எதிர்காலம் அழிக்கப்படுகிறது. எதிர்கால நம்பிக்கை அழிக்கப்படுகிறது. இதனால் எதிர்கால சந்ததி அழிக்கப்படுகிறது. இதற்கு எதிராக நாம் எப்போதும் குரல்கொடுப்போம்” என்று முழக்கமிட்டார்.

இறுதியாக, தங்களின் கோரிக்கை அடங்கிய மனுவொன்றை இந்திய தூதரக அதிகாரியிடம் ஆர்ப்பாட்டக்காரர்கள் கையளித்தனர்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:

?>