பிரித்தானியாவிலும் கனடாவிலும் புலம் பெயர்ந்தவர்கள், அதிலும் இலங்கைத் தமிழர்களின் அழுத்தங்கள் அந்த நாடுகளின் அரசியலிலும் வெளிநாட்டுக் கொள்கையிலும் தாக்கங்களை ஏற்படுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானிய கொள்கைகளும், அரசியலும் என்ற இணையத்தில் அரசியல் ஆய்வாளர் ஒருவர் இது தொடர்பான ஆய்வுக் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் பிரித்தானியாவிலும், கனடாவிலும் புலம்பெயர்ந்தவர்களின் அழுத்தங்கள் அதிலும் இலங்கை தமிழர்களின் அழுத்தங்கள் குறித்து அவர் ஆராய்ந்துள்ளார். கனடாவின், டொரன்டோவில் அரைவாசிப் பங்கினர் புலம் பெயாந்தவர்களாக இருக்கின்றனர். பிரித்தானியாவில் ஏழில் ஒரு பங்கினர் வேறு நாடுகளில் பிறந்தவர்களாக இருக்கின்றனர். இந்தநிலையில் பிரித்தானியாவின் பிரதான அரசியல் கட்சிகளிலும், கடனாவின் பிரதான அரசியல் கட்சிகளிலும், வெளிநாட்டுக் கொள்கையிலும், இலங்கை தமிழர்களின் அழுத்தங்கள் தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளதாக மெத்திவ் கொட்வின் என்ற அந்த ஆய்வாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த இரண்டு நாடுகளிலும் உள்ள புலம் பெயர்ந்தவர்கள் தமது நாடுகளின் பெயரில் பல்வேறு குழுக்களை ஆரம்பித்துள்ளனர். இதில் வியட்நாமியர்கள், இஸ்ரேலியர்கள், சீக்கியர்கள் மற்றும் துருக்கியர்களும் உள்ளனர். இதில் இலங்கை தமிழர்களின் அழுத்தங்களை ஆராயும் போது 2013-ஆம் ஆண்டு கனடாவின் பிரதமர் இலங்கையில் இடம்பெற்ற பொதுநலவாய நாடுகளின் மாநாட்டையே தமிழர்களுக்காக புறக்கணித்தார் என்பதை ஆய்வாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது இலங்கை தமிழர்களுக்காக கனடாவில் மேற்கொள்ளப்பட்ட வெளிநாட்டுக் கொள்கை மாற்றம் என்று அவர் விபரித்துள்ளார். இந்த நிலையில் கனடாவிலும், பிரித்தானியாவிலும் விடுதலைப் புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டுள்ள போதும் அவர்களின் கொடிகளை தாங்கி, நடத்தப்பட்ட இலங்கை அரசாங்கத்துக்கு எதிரான பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. அவற்றில் இரண்டு நாடுகளின் கட்சி பிரதிநிதிகளும் பங்கேற்றிருந்தனர் என்றும் ஆய்வாளர் கொட்வின் சுட்டிக்காட்டியுள்ளார்.