அமெரிக்காவின் வொஷிங்டன் டிஸிக்குச் சென்றிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் உலகத் தமிழர் பேரவை(GLOBAL TAMIL FORUM) ஆகியவற்றின் பிரதிநிதிகள் குழு அங்கு அமெரிக்க ஜனாதிபதியின் கீழ் நேரடியாக இயங்கும் அமெரிக்கத் தேசியப் பாதுகாப்புக் கவுன்ஸிலின் முக்கிய இரு பிரதிநிதிகளைச் சந்தித்து ஒரு மணி நேரத்துக்கும் அதிகமாக உரையாடினர் என அறியவருகின்றது.
வெள்ளை மாளிகையை ஒட்டி கடந்த புதன் கிழமை இந்தச் சந்திப்பு நடைபெற்றதாக அறிவருகின்றது. இந்தச் பேச்சில் சம்பந்தப்பட்ட அமெரிக்கத் தரப்பில் இருந்து சந்திப்புப் பற்றிய செய்திகள், படங்கள் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டமையால், சந்திப்பு நடந்து 36 மணி நேரம் கடந்தும் அது பற்றிய தகவல் ஏதும் தமிழர் தரப்பில் இருந்து வெளியிடப்படவில்லை என அறியவந்தது. எனினும், வேறு வட்டாரங்கள் மூலம் சந்திப்பு நடந்தமை பற்றிய விவரம் காலைக்கதிருக்குக் கிடைத்தது.
இந்தச் சந்திப்புகளில் பங்குபற்றியவர்களில் ஒருவர் வெள்ளை மாளிகையில், ஜனாதிபதி ஜோ பைடனின் கீழ் இயங்கும் அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்ஸிலின் தெற்காசிய பாதுகாப்பு விவகாரங்களுக்குப் பொறுப்பான இயக்குநர் பெற் லார்ஸன் ((Pete Larsen). மற்றையவர் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் விசேட உதவியாளர் றொபேர்ட் ஜி பெர்ஷ்சிச்ன்ஸ்கி (Robert G. Berschinski). அத்தோடு அவர் அமெரிக்க தேசிய பாதுகாப்புக் கவுன்ஸிலின் ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் விடயங்களுக்கான சிரேஷ்ட இயக்குநர் ஆவார்.
இவர்களோடு சுமந்திரன் தலைமை யிலான தமிழ்ப் பிரதிநிதிகள் பேசிய விடயங்கள் இப்போதைக்கு வெளியே வருமோ தெரியவில்லை.
இந்தச் சந்திப்பு வெள்ளை மாளிகையில் நடப்பதாக இருந்தது. எனினும் கொரொனாத் தொற்று எச்சரிக்கையை முன்னிட்டு, வெள்ளை மாளிகையை ஒட்டிய கட்டடம் ஒன்றில் அது நடந்தது.
மேற்படி சந்திப்பை முடித்துக் கொண்டு புதனிரவு நியூயோர்க் சென்ற சுமந்திரன் குழுவினர், அங்கு இரண்டு நாள்கள் ஐ.நாவுடன் தொடர்புபட்ட அமெரிக்க மற்றும் பிறநாட்டு பிரமுகர்களுடனும் ஐ.நா. அதிகாரிகளுடனும் பேச்சில் ஈடுபட்டனர்.
வெள்ளி இரவு அவர்கள் கனடா புறப்பட்டனர். இன்றும் நாளையும் சுமந்திரன் கனடாவில் தமிழர் தரப்புகளுடன் சந்திப்புகளில் ஈடுபடுகின்றார். அவருடன் சாணக்கியன் எம்.பியும் இணைந்து கொள்கின்றார்.
மீண்டும் திங்கள் காலையில் வொஷிங்டனைச் சென்றடையும் சுமந்திரனும் ஏனைய பிரதிநிதிகள் எண்மரும் அங்கு அமெரிக்கத் தரப்பில் உயர்மட்ட அதிகாரி ஒருவரைச் சந்தித்து இந்த அமெரிக்கப் பயணத்தின் இறுதிப் பேச்சுகளில் ஈடுபடுவர்.
அதன் பின்னர் அடுத்த நாள் செவ்வாய்க்கிழமை கனடாவின் ஒட்டாவா நகரில் கனேடிய வெளிவிவகார அமைச்சு அதிகாரிகளுடனும் – அதன் பின் இரண்டு நாள்கள் கழித்து செவ்வாய்க்கிழமை லண்டனில் பிரிட்டன் வெளிவிவகார அமைச்சு அதிகாரிகளுடனும் – சுமந்திரன் – சாணக்கியன் இணை பேச்சுக்களில் ஈடுபடவிருக்கின்றமை தெரிந்ததே.(காலைக்கதிர், 20-11-2021)