ஹூஸ்டன் நகரில் களைகட்டிய பொங்கல் திருவிழா!

ஹூஸ்டன் நகரில் களைகட்டிய பொங்கல் திருவிழா!

BKM என்றழைக்கப்படும் பாரதி கலை மன்றம் கலை, கலாசாரம் தாண்டி தமிழ் மொழியை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்ல, தமிழ்ப் பள்ளிகளை நடத்தி வருகிறது. அரசு அங்கீகாரம் பெற்று, மாணவர்கள் கல்லூரியிலும் தமிழ் கற்க வழி வகுத்துள்ளது. பிரத்தியேகமாகத் தமிழ் நூல்களுக்கென்று நூலகங்கள் (குழந்தைகள் மற்றும் பெரியோர்களுக்கு) அமைய தமிழ்ப் பள்ளிகள் களமாக உள்ளன. முத்தாய்ப்பாக, பேச்சுத் தமிழுக்கான பயிற்சி பட்டறைகள் நடத்தப்படுகின்றன.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்….


இளையர்களையும் நம் கலாசார நிகழ்வுகளில் ஆர்வத்துடன் பங்கு பெற செய்ய, பாரதி கலை மன்றத்தின் `யூத் கிளப்’ என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இப்பொங்கல் விழாவில் யூத் கிளப் இளையர்கள் தங்கள் வீட்டு விசேஷம்போல் உற்சாகமாக பணி செய்து பங்கேற்றது நம் மனதில் நம்பிக்கையோடு எதிர்கால வெளிச்சத்தையும் தருகிறது.

வாசலிலே கோலமிட்டு, வண்ண வண்ண பூக்களிட்டு தைப்பொங்கல் கரும்பு நட்டு, நடு நாயகமாய் ஐங்கரனை அமர்த்தி வைத்து, அடுப்பினிலே பொங்கலிட்டு அதையடுத்து அலங்கார மேடையிட்டு, அதன் மேலே கல்கண்டும் சந்தனமும், குங்குமமும் அணி வகுக்க ஆளைத்தூக்கும் அரும்பு முல்லை மல்லிச்சரங்கள் சுற்றிப் பந்தாய் காத்திருக்க… இவையெல்லாம் எந்தக் கிராமத்து பொங்கல்ன்னுதானே பாக்குறீங்க? கிராமத்துப் பொங்கல் இல்லீங்கோ… இது பெருநகரத்து பொங்கல். அமெரிக்காவின் நான்காவது பெரிய நகரமான ஹூஸ்டன் நகரின் பாரதி கலை மன்றத்தின் பொங்கல் விழா தடபுடல் ஏற்பாடுகள்.

ஜல்லிக்கட்டு இல்லாத பொங்கலா? இதோ வாசலிலேயே குழந்தைகள் குதித்து ஏற, உருட்டி பிரட்டி கீழே தள்ளும் முரட்டுக்காளை தயாராய். கீழே விழுந்து உருளும் குழந்தைகளின் குதூகலக் கூச்சல் தான் பொங்கல் விழாவுக்குக் கட்டியம் கூறியது.

அரங்கின் அழகிய புகைப்பட வளைவின் (போட்டோ பூத் ) அலங்காரம் கைப்பிடித்து அழைத்துச் சென்றது. அதன் நீட்சியாகத் தமிழகத்து திருவிழாக் கடைத்தெருவை கண் முன்னே விரித்தன. அணிமணி துணிக்கடைகள், வண்ண வளையல்கள், தினையும் தேனும் செக்கெண்ணையும் சத்துமாவுகளும் அல்வா கொடுக்காமல் இலவச அல்வா கொடுத்த பட்சணக்கடையில் ஒரே தள்ளுமுள்ளு.

கடைத்தெரு தாண்ட… கனக்க கனக்க பொங்கல் பரிசாய் அன்பளிப்பு காகிதப் பையில், அவரவர் தேவையறிந்து, அளவு கேட்டு, `கனவு மெய்ப்பட வேண்டும்’ என அச்சிடப்பட்ட டி-சட்டைகளையும் பையிலிட்டு தந்தனர். ஆவல் மேலிட, பையை திறந்தால், தமிழகத்து கிராண்ட் ஸ்வீட்ஸ் டப்பா, அழகிய வண்ண காலண்டர், சிறு கண்ணாடி ஜாடியில் நேர்த்தியாக சர்க்கரைப் பொங்கலுக்கான பொருள்கள், என பரிசுகள் திக்குமுக்காட வைத்தன.

மாலை நேரச் சிற்றுண்டியாகக் குழிப்பணியாரமும் பக்கோடாவும், தேநீரும் மணக்க மணக்க ருசித்த பின்னர், நிகழ்ச்சி இனிதே தொடங்கியது. இங்கு வாழும் மூத்த குடிமக்களையும், இளைய சமூகத்தினரையும் இணைக்கும் பாலமாக இவ்விரு அணியினரைக் கொண்டு, இந்த ஆண்டுக்கான காலண்டர் வெளியீடு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 45-க்கும் மேற்பட்ட குழுவினர் கலை நிகழ்ச்சிகளில் காந்தக் கண்ணழகிகளாகவும், அரும்பு மீசை ஒட்டிய குறும்புக் கண்ணன்களாகவும் இசையாகவும் நடனமாகவும் காட்டிய வித்தைகளால் கண்ணும் மனமும் நிறைந்தன.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: