‘ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஏழு பேரை விடுதலை செய்ய வேண்டும்’ என அமெரிக்காவின் நார்விச் நகர மேயர், தமிழக ஆளுநருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றுவரும் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி உள்ளிட்ட 7 பேரின் விடுதலையை மாநில அரசே முடிவு செய்து கொள்ளலாம்” என உச்ச நீதிமன்றம் சமீபத்தில் கூறியிருந்தது. இதையடுத்து, தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில், 7 பேரின் விடுதலைக்கான தீர்மானத்தை நிறைவேற்றி, அதைத் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு பரிந்துரை செய்து அனுப்பி வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. அந்தப் பரிந்துரைக் கடிதம் அனுப்பப்பட்டு இரண்டு மாதங்களுக்கு மேல் ஆன நிலையில், அதன் மீது எந்த முடிவும் எடுக்காமல் அமைதிகாத்து வருகிறார் தமிழக ஆளுநர். இருந்தும், ஏழு பேரின் விடுதலை தொடர்பாக தமிழகம் உட்பட, உலகின் பல பகுதிகளிலிருந்தும் தமிழக ஆளுநருக்கு பரிந்துரைக் கடிதங்கள் தொடர்ந்து வந்தவண்ணம் உள்ளன.
ஏற்கெனவே, அமெரிக்க கனட்டிக்கட் தமிழ்ச்சங்கம் சார்பாக, அங்கு வாழும் நூற்றுக்கணக்கான தமிழர்கள், ஏழு பேரின் விடுதலை தொடர்பாக தனித்தனி கடிதங்கள் அனுப்பினர். தமிழர்கள் மட்டுமல்லாமல், அமெரிக்காவில் வசிக்கும் சீக்கியர்களும், இந்த எழுவர் விடுதலைக்கு ஆதரவான கையெழுத்து இயக்கத்தில் பங்கெடுத்து, ஆளுநருக்குக் கடிதங்கள் அனுப்பியுள்னர்.
இந்நிலையில், எழுவர் விடுதலைகுறித்த தமிழக அமைச்சரவையின் பரிந்துரையை ஏற்று, எழுவரையும் ஆளுநர் விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை கையெழுத்து இயக்கம் தற்போது, அமெரிக்காவில் மிக வேகமாகப் பரவிவருகிறது. அமெரிக்க நாட்டின் கனட்டிக்கட் மாகாணத்தில் உள்ள நார்விச் நகரத்தின் மேயர் பீட்டர் ஆல்பர்ட் நிஸ்ட்ரோம், எழுவர் விடுதலைக்கு ஆதரவான தமிழக அமைச்சரவை தீர்மானத்தை ஏற்று, அவர்களை விடுதலை செய்யும்படி நேற்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு வேண்டுகோள் கடிதம் எழுதியுள்ளார்.
அவர் தனது கடிதத்தில், ”28 ஆண்டுகள் சிறையில் கழித்துவிட்ட ஏழு பேரையும் விடுதலை செய்யும் தமிழக அமைச்சரவை தீர்மானத்தை, மனிதநேயத்துடன் அணுகும்படி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது, தனது விருப்பம் மட்டுமல்ல நீதியரசர் வி.ஆர்.கிருஷ்ணய்யர் வழியில் மனித உரிமைகளுக்காகப் போராடும் அனைவரின் விருப்பமும் ஆகும்” என தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.