புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டங்களில் மொய் விருந்து நடத்தப்படுவது உண்டு. முதலில் தனித்தனியாக நடத்தப்பட்டு வந்த இந்த மொய் விருந்து, தற்போது குழுவாக இணைந்து நடத்தி பெருமளவில் பணம் வசூல் செய்யப்படுகிறது.
ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்த
இந்நிலையில், தமிழகத்தில் இருந்து கண்டம் விட்டு கண்டம் சென்று தொலை தூரத்தில் தமிழர்கள் வெளிநாடுகளில் தங்கி இருந்தாலும், அவர்களின் தொப்புள் கொடி உறவுகளை நினைவில் வைத்து அவர்களுக்காக உதவிக்கரம் நீட்ட முன்வந்து இருக்கின்றனர். அதன் ஒரு பகுதியாக அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் நடந்த ஒரு வித்தியாசமான மொய் விருந்து தமிழக மக்கள் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்து இருக்கிறது. தமிழகத்தில் உள்ள நீர்நிலைகளை மீட்கவும், விவசாயிகளை காக்கவும் இந்நிகழ்ச்சியை அரங்கேற்றி உள்ளனர்.
தமிழகத்தில் பருவமழை பொய்த்து போனதால் ஆறுகள், குளங்கள், ஏரிகள், அணைகள் அனைத்தும் வறண்டு விட்டன. நிலத்தடி நீர்மட்டமும் குறைந்து போனது. இதனால் விவசாயம் தலைதூக்க முடியாமல் வானம் பார்த்த பூமி, தற்போது வறட்சி பூமியாக காணப்படுகிறது.
இதை மனதில் வைத்து எய்ம்ஸ் இந்தியா பவுண்டேஷன், வாஷிங்டன் வட்டார தமிழ்ச்சங்கம், வட்டார தமிழ் பள்ளிகள் இணைந்து மொய் விருந்து நிகழ்ச்சியை வாஷிங்டனில் நடத்தி இருக்கிறது.
வெறுமனே விருந்து நடத்துவதை விட தமிழ் கலாசாரத்துடன் கூடிய நிகழ்ச்சிகளையும் நடத்த ஏற்பாட்டாளர்கள் முடிவு செய்தனர். அதன்படி, பரதநாட்டியம், கிராமிய நடனங்கள், உரியடி, பல்லாங்குழி, பம்பரம், தாயம், கபடி, ஆடுபுலி ஆட்டம், கோலிக்குண்டு, கயிறு இழுத்தல், சாக்கு ஓட்டம், பாண்டி, இசை நாற்காலி போன்ற நாட்டுப்புற விளையாட்டுகள் நடத்தப்பட்டன. வாழை இழையுடன் கூடிய பாரம்பரிய சைவ-அசைவ உணவு வகைகள் மொய் விருந்தில் இடம்பெற்றன.
வாஷிங்டன் மற்றும் அதனை சுற்றியுள்ள வட்டார தமிழர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. வாட்ஸ்-அப், முகநூல், டுவிட்டர் ஆகியவற்றில் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக அழைப்புக்கான பதிவை ஏற்பட்டாளர்கள் அனுப்பினர். அந்தவகையில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த மொய் விருந்தில் பங்கு பெற்றதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் ஜான் பெனிடிக்ட், மகேந்திரன் பெரியசாமி ஆகியோர் கூறுகையில், ‘தமிழகத்தில் பருவமழை பொய்த்து போனதால் விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. எனவே விவசாயத்துக்கும், விவசாயிக்கும் உதவி செய்யும் நோக்கில் தமிழக ஏரி, குளங்களை தூர்வார இந்த மொய் விருந்தை நடத்தினோம். ரூ.58.7 கோடி நிதி திரட்ட இலக்கு நிர்ணயித்தோம். இந்நிகழ்ச்சியில் திரட்டப்பட்ட நிதிகள் அனைத்தும் தமிழகத்தில் விவசாயிகளின் முதுகெலும்பாக இருக்கும் நீர்நிலைகளை காக்க பயன்படுத்தப்பட உள்ளது. விவசாயிகளின் மகத்துவத்தை அனைவரும் உணர வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த நிகழ்ச்சியை நடத்தி இருக்கிறோம்’ என்றனர்.
நிகழ்ச்சியில் எய்ம்ஸ் இந்தியா பவுண்டேஷன் தலைவர் வித்யா விஜய் ஆனந்த், இயக்குனர் அலியார் சாகிப், பொருளாளர் சிவானந்தம் உள்பட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
எய்ம்ஸ் இந்தியா பவுண்டேஷன் சார்பில் திரட்டப்படும் நிதிகளை கொண்டு எங்கெல்லாம் நீர்நிலைகளை பாதுகாக்கிறார்கள் என்பது குறித்து அவர்களுடைய முகநூல் பக்கத்தில் பதிவு செய்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:-
- தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள மருதூர் கீழக்கல் கல்வாய் தூர்வாரும் பணி நடந்து வருகிறது.
- வீராணம் ஏரி, அரியலூர் மாவட்டம் விளாங்குடியில் உள்ள நீர்நிலைகள், தஞ்சை ஏரி தூர்வாரும் பணி (கலெக்டர் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது)
விவசாயிகள் மற்றும் வருங்கால தலைமுறையினரின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வாஷிங்டனின் நடந்த இந்த மொய் விருந்து நிகழ்ச்சி, தமிழக மக்கள் மத்தியில் விவசாயிகளுக்காக உதவ வேண்டும் என்ற தூண்டுதலை ஏற்படுத்தும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.