தண்ணீரின்றி தவிக்கும் சென்னை ; கவனம் ஈர்த்த டிகாப்ரியோவின் பதிவு!

தண்ணீரின்றி தவிக்கும் சென்னை ; கவனம் ஈர்த்த டிகாப்ரியோவின் பதிவு!

சென்னைக்குத் தண்ணீர் தந்துகொண்டிருந்த நான்கு ஏரிகளும் வறண்டு, நிலத்தடி நீர்மட்டமும் வெகுவாகக் குறைந்து மொத்த நகரையும் ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது தண்ணீர்ப் பஞ்சம். எப்போதும் சில வாரங்களே நீடிக்கும் இந்தப் பிரச்னை, இந்த ஆண்டு மூன்று மாதங்களுக்கும் மேல் தொடர்வதால் உலகம் முழுவதும் சென்னை தண்ணீர்ப் பிரச்னை அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த நிலையில், இதுகுறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன் வருத்தத்தைப் பதிவுசெய்திருக்கிறார் ஹாலிவுட் நடிகர் லியனார்டோ டிகாப்ரியோ. “தென்னிந்திய நகரமான சென்னை தற்போது மிகப்பெரும் பிரச்னையை எதிர்கொண்டு நிற்கிறது. அந்த நகரத்துக்கு நீர்தரும் நான்கு அணைகளும் வறண்டுவிட்டன. இந்தப் பிரச்னையை சமாளிப்பதற்கான உடனடித் தீர்வுகளை நோக்கி அந்நகரம் ஓடிக்கொண்டிருக்கிறது. தண்ணீர் லாரிகளுக்குப் பின்னர் அம்மக்கள் பலமணி நேரம் நீண்ட வரிசையில் நின்றுகொண்டிருக்கின்றனர். தண்ணீர் இல்லாததால் உணவகங்கள், விடுதிகள் அனைத்தும் தற்காலிகமாக மூடப்பட்டிருக்கின்றன. சென்னையின் மெட்ரோ ரயிலில் ஏ.சி வசதி நிறுத்தப்பட்டுள்ளது. வேறு தண்ணீர் வளங்களைக் கண்டறிய அரசு அதிகாரிகள் தொடர்ந்து முயற்சி செய்துகொண்டிருக்கின்றனர். ஆனால், மக்களோ மழைக்காகத் தொடர்ந்து பிரார்த்தனை செய்துகொண்டிருக்கிறார்கள்!” என அதில் பிபிசி செய்தியை சுட்டிக்காட்டி வருத்தப்பட்டிருக்கிறார் அவர்.

லியனார்டோ டிகாப்ரியோ!

சுற்றுச்சூழல் பிரச்னைகள் குறித்து உலகம் முழுவதும் தொடர்ந்து குரல்கொடுத்துக் கொண்டிருப்பவர் டிகாப்ரியோ. ஆஸ்கர் விருதுபெற்ற மேடையிலேயே உலகின் பருவநிலை மாற்றம் குறித்து பேசி அசத்தியவர். தற்போது உலக நாடுகளின் அத்தனை தலைவர்களையும் இயற்கையின் மீது கவனம் செலுத்தும்படியும், பூமியின் வளங்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கும்படியும் வலியுறுத்தி வருகிறார்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: