உலகத் தமிழர்களின் பங்களிப்போடு அமெரிக்காவில் உள்ள ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைவதற்கான முயற்சிகள் நிறைவுபெற்றுவிட்டன. இதனைத் தொடர்ந்து ஹூஸ்டன் பல்கலைக்கழகத்திலும் தமிழ் இருக்கை அமைவதற்கான முயற்சிகளை முன்னெடுத்துள்ளனர் உலகத் தமிழர்கள். அதற்கான நிதி திரட்டும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
ஹூஸ்டனில் உள்ள தமிழ் மக்கள் தங்களால் முடிந்த அளவு தொகையைத் தமிழ் இருக்கைக்காக வழங்கியுள்ளனர். தற்போது இந்தியா மற்றும் பிற நாடுகளில் உள்ள தமிழர்களின் உதவியை நாடியுள்ளது ஹூஸ்டன் தமிழ் இருக்கைக் குழு. இதற்காக முகநூல் பக்கம் ஒன்று தொடங்கப்பட்டு, அதன்மூலம் நிதி திரட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஹூஸ்டன் தமிழ் இருக்கைக்கு ஃபேஸ்புக் நிறுவனமும் பில் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையும் இணைந்து உதவ முன்வந்துள்ளனர்.
ஒருவர் அளிக்கும் நிதியை இரண்டு மடங்காக இந்த நிறுவனங்கள் அளிக்க உள்ளன. வரும் டிசம்பர் 3-ம் தேதி காலை 8 மணி முதல் இரவு 11 மணி வரை நிதி திரட்டும் நிகழ்வு நடைபெறவுள்ளது. `நிதி அளிக்க நினைப்பவர்கள் ஹூஸ்டன் தமிழ் இருக்கைக்கான முகநூல் பக்கம் மூலம் அளிக்கலாம்’ என அந்தக் குழுவினர் தெரிவித்துள்ளனர். இதற்கான பணிகளில் ஹூஸ்டன் தமிழ் ஆய்வுகள் இருக்கை அமைப்பின் தலைவர் சொக்கலிங்கம் சாம் கண்ணப்பன், செயலாளர் பெருமாள் அண்ணாமலை உள்பட பலரும் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றனர்.