கனடிய எதிர்க்கட்சித் தலைவரும் கன்சவேட்டிக் கட்சியின் தலைவருமான அன்ரூ செயர் கனடிய தமிழ் மக்களுடனான ஒரு பாரிய கோடை ஒன்று கூடலில் கலந்து கொண்டுள்ளார்.
இந்த ஒன்று கூடல் பிராம்டன் நகரில் கடந்த 19-ஆம் தேதி பிற்பகல் நடைபெற்றுள்ளது. கன்சவேட்டிவ் கட்சியின் முக்கிய தமிழ் உறுப்பினர்கள் ஒருங்கிணைத்த இவ் ஒன்று கூடலில் தமிழ் மக்களுடன் வேற்றின மக்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
ரொரன்ரோ பெரும்பாகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மற்றும் ஒட்டாவா மொன்றியல் பெரு நகரங்களில் இருந்தும், தமிழ் அமைப்புக்கள், இளையோர், மகளிர், முதியோர், மத அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் வர்த்தகர்கள் என அனைத்து தரப்பு தமிழ் மக்களும் இதில் கலந்து கொண்டிருந்தனர்.
அங்கு பேசிய எதிர்கட்சித் தலைவர் அன்ரூ செயர் கட்சித் தலைவருக்கான தேர்தல் முதல் தன்னுடன் பயணிக்கும் தமிழர் சமூகத்தை நன்றியுடன் நினைவு கூர்ந்தார்.
தமிழர் தாயகத்தில் தமிழ் மக்கள் விடயத்தில் தமது கட்சி நீண்ட காலமாக கடைப்பிடித்து வரும் உறுதியான நிலைப்பாட்டை நினைவு கூர்ந்து கொழும்பில் நடைபெற்ற பொது நலவாய நாடுகளின் மகாநாட்டை புறக்கணித்ததையும் ஒரு கணம் நினைவு படுத்தி தமிழ் மக்கள் உரிமைக்காக தொடர்ந்தும் உறுதியாக செயற்படுவோம் என்பதையும் வலியுறுத்தினார்.
எதிர்கட்சித் தலைவருடன் நாடாளுமன்றத்தில் தமிழர் விவகாரங்களை முதன்மையாக முன்னெடுத்து வரும் நாடாளுமன்ற உறுப்பினர் கானட் அவர்களும் இவ் ஒன்று கூடலில் கலந்து கொண்டிருந்தார். இருவரும் தமிழர் பிரதிநிதிகளுடன் தொடர்ச்சியான சந்திப்புக்களை மேற்கொண்டு வருவதும் இங்கு குறிப்பிடத்தக்கது. அடுத்த கனடிய மத்திய அரசுக்கான தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம் இருக்கும் நிலையில் அண்மைய தேர்தல் தொடர்பான கருத்து கணிப்புகளில் அன்ரு செயர் தலைமையிலான கன்சவேட்டி கட்சி ஆளும் லிபரல் கட்சியை விட முன்னனியில் இருப்பது குறிப்பிடத்தக்கது.