விருது என்ற பெயரில் தந்தை செல்வநாயகத்தை அவமானப்படுத்திய “நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்”!

விருது என்ற பெயரில் தந்தை செல்வநாயகத்தை அவமானப்படுத்திய "நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்"!

விருது என்ற பெயரில் தந்தை செல்வநாயகத்தை அவமானப்படுத்திய “நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்”!

கடந்த சனிக்கிழமை இரவு கல்லறையில் நீள் துயில் கொண்ட தந்தை செல்வநாயகம் புரண்டு மறுபக்கம் படுத்துக் கொண்டார். காரணம் தனது நினைவாக ”நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்”, ஒரு நினைவு விருதை மா.க. ஈழவேந்தனுக்கு வழங்கி அவரை அவமானப்படுத்தியது. தந்தை செல்வ நாயகம் இலங்கைத் தமிழ் மக்களின் ஒப்பாரும் மிக்காரும் இல்லாத ஒப்பற்ற தலைவர். இரண்டு சகாப்தத்துக்கு மேலாக அறவழிப் போராட்டங்களுக்குத் தலைமை தாங்கி தமிழ் மக்களது அடிப்படை உரிமைகளை வென்றெடுக்கப் போராடியவர். ஆட்சியாளரால் கைது செய்யப்பட்டு சிறை சென்றவர்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத்மிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்


1948 இல் டி.எஸ். சேனநாயக்கா இலங்கை விடுதலை பெற்ற 285 நாட்களுக்குள், அதாவது ஆகஸ்ட் 20, 1948 அன்று இலங்கைக் குடியுரிமைச் சட்டத்தின் பிரிவு 18, (எட்டு இலட்சம் மலையகத் தமிழர்கள் தங்கள் குடியுரிமையை இழக்க காரணமான சட்டம்) நாடாளுமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்றினார். அதே ஆண்டு நவம்பர் 15 இல் அந்தச் சட்டம் ஆளுநரின் ஒப்புதலைப் பெற்று சட்டமாக்கப்பட்டது. இந்தச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் தந்தை செல்வநாயகம் தீவிரமாக எதிர்த்துப் பேசினார். எதிர்த்துப் பேசியதோடு நில்லாமல் எதிர்த்து வாக்களித்தார். இந்தக் கொடிய சட்டத்தினால் எட்டு இலட்சம் மலையகத் தமிழர்கள் தங்கள் குடியுரிமையை இழந்தார்கள்.

குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து நாடாளுமன்றத்தில் பேசிய தந்தை செல்வநாயகம் “இன்று மலைநாட்டுத் தமிழர்களது கழுத்துக்கு கத்தி விழுந்துள்ளது. நாளை ஆட்சி மொழி பற்றி முடிவு செய்யும் நேரம் வரும் போது இலங்கைத் தமிழர்களுக்கும் இதே கதிதான் ஏற்படும்” எனத் தீர்க்கதரிசனத்தோடு பேசினார். 1956 ஆம் ஆண்டில் திரு. பண்டாரநாயக்கா “சிங்களம் மட்டும்” சட்டத்தைக் கொண்டு வந்து நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய போது தந்தை செல்வநாயகத்தின் அரசியல் தீர்க்கதரிசனம் உண்மையாகியது. ஜிஜி பொன்னம்பலத்துக்கு இந்தத் தீர்க்கதரிசனம் இருக்கவில்லை.

அடுத்த ஆண்டு 1949 இல் நாடாளுமன்ற தேர்தல் (திருத்தம்) சட்டத்தில் (Parliamentary Elections (Amendment) Act of 1949) ஒற்றை வரித் திருத்தத்தைக் கொண்டு வந்து மலையகத் தமிழர்களது வாக்குரிமையையும் டி.எஸ். சேனநாயக்கா பறித்தார். குடியுரிமை உடைய ஒருவரே தேர்தல்களில் வாக்களிக்கலாம். ஏற்கனவே (செப்டம்பர் 03, 1948) அமைச்சரவையில் மீன் பிடி கைத் தொழில் அமைச்சராகப் பதவி ஏற்றுக் கொண்ட ஜிஜி பொன்னம்பலம் இந்தச் சட்ட திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களித்தார். இதனால் தமிழர்களது நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம் சரி பாதியாகக் குறைந்தது. 1952 இல் ஏழு தொகுதிகளில் வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்ற இலங்கை இந்திய காங்கிரஸ் 1952 இல் நடந்த தேர்தலில் ஒருவரைக் கூட அனுப்ப முடியவில்லை.

தமிழ்க் காங்கிரஸ் தலைவர் ஜிஜி பொன்னம்பலத்தோடு முரண்பட்டுக் கொண்ட தந்தை செல்வநாயகம் தனது சகாக்களான கோப்பாய்க் கோமான் திரு கு.வன்னியசிங்கம், மருத்துவர் இ.மு.வி நாகநாதன், இளம் சட்டத்தரணி வி.நவரத்தினம் போன்றவர்களை இணைத்துக் கொண்டு இலங்கைத் தமிழரசுக் கட்சியைத் தோற்றுவித்தார். இந்த மூவரும் தந்தை செல்வநாயகத்தின் வலது, இடது கைகளாகச் செயல்பட்டார்கள்.

“நம் உரிமைகளுக்காக விட்டுக் கொடுக்காது போராடி வந்த ஜிஜி பொன்னம்பலம் அவர்கள் இப்பொழுது போராட்டத்தைக் கைவிட்டது மாத்திரமின்றி, இலங்கைத் தமிழ் மக்களுக்கு எந்தக் குறையும் இல்லை என்று எங்கும் பறைசாற்றி வருகிறார். தமிழ் மக்கள் திக்கற்றவர்களாத் தவிக்கலாயினர்………” (இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தொடக்க மாநாடு மருதானையிலுள்ள அரசாங்க பொது எழுதுவினைஞர் மண்டபத்தில் 18-12-1949 அன்று நடந்த போது கட்சியின் நிறுவனர் உயர் திரு சா.ஜே.வே. செல்வநாயகம், கியூ. சி ஆற்றிய தலைமைப் பேருரையில் இருந்து)

தந்தை செல்வநாயகம் மட்டும் அரசியலுக்கு வந்திராவிட்டால், அல்லது 1948 ஆம் ஆண்டு அன்றைய சிங்கள ஆட்சியாளரால் எட்டு இலட்சம் மலைநாட்டுத் தமிழர்களின் குடியுரிமையைப் பறிப்பதற்குக் கொண்டு வரப்பட்ட சட்டத்தை ஆதரிக்க முடிவு செய்த அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் தலைவர் பொன்னம்பலத்தோடு சமரசம் செய்து கொண்டு போயிருந்தால், அல்லது முரண்பட்டுக் கொண்டு அரசியலுக்கு ஒரேயடியாக முழுக்குப் போட்டிருந்தால் தமிழீழ மக்களின் அரசியல் போராட்டம் தடம் புரண்டு திசை மாறியிருக்கும் என்பதில் இருவித கருத்து இருக்க முடியாது. யூதர்களுக்கு மோசஸ் போல் தமிழர்களுக்கு தந்தை செல்வநாயகம் வந்து வாய்த்தார்.

தமிழரசுக் கட்சி தொடங்கிய காலம் தொட்டு அதனை வளர்ப்பதற்காக சட்டத் தொழிலில் சம்பாதித்த வான்பொருளைத் தொலைத்தார். சிறை சென்று, உடல் நலம் கெட்ட போதும் தமிழ்த் தேசியத்துக்கு நீர் வார்த்து, உரம் போட்டு வளர்த்தார். அரசியலில் புகுந்தால் பெயர், புகழ், பணம் சம்பாதிக்கலாம் என்ற நியதி இருந்த கால கட்டத்தில் தந்தை செல்வநாயகம் அரசியலில் ஈடுபட்டு ஒண்டியானர். கடைசி வரை அவர் ஒரு வாடகை வீட்டிலேயே கொழும்பில் வாழ்ந்தார்.

சந்தர்ப்பவாத அரசியல் என்பது தந்தை செல்வநாயகம் அவர்களது அகராதியில் இல்லாத சொல். முடிவு மட்டுமல்ல அதனை அடையும் வழியும் சரியாக இருக்க வேண்டும் என்பது அவரது உறுதியான கோட்பாடாகும். அரசியலில் நேர்மை, பேச்சில் வாய்மை, கொள்கையில் உறுதி என்பன அவரது தாரக மந்திரங்களாக இருந்தன. இதனால் அவரை மாற்றுக் கட்சியினரும் மதித்தனர்.

1952 இல் நடந்த தேர்தலில் தந்தை செல்வநாயகம் தோற்றுப் போனார். அந்தத் தேர்தலில் முறைகேடுகள் நடந்துள்ளன, வென்ற வேட்பாளர் தனது பரப்புரையின் போது “வேல் வேண்டுமா? சிலுவை வேண்டுமா?” என்று கேட்டார் எனச் சொல்லி தந்தை செல்வநாயகம் வழக்குத் தொடுத்தார். வழக்கில் அவர் தோற்றுப் போனார். வழக்கு போட்டவர், வென்றவருக்கு செலவுப் பணம் கொடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அந்தப் பணத்தை அடுத்த சில நாட்களுக்கும் தந்தை செல்வநாயகம் கட்டினார். அவரது நேர்மைக்கு இது நல்ல எடுத்துக்காட்டாகும்.

1949 தொடக்கம் 1976 வரையான காலப் பகுதியில் நிகழ்ந்த தமிழ்த் தேசிய எழுச்சிக்கு தந்தை செல்வநாயகம் தலைமை தாங்கினார் என்பது வரலாறு. அப்படிப்பட்ட பன்முக ஆளுமை கொண்ட தந்தை செல்வநாயகத்தின் பெயரால் விருது கொடுக்கப்படுகிற ஒருவருக்கு தந்தை செல்வநாயகம் மேலும் அவர் தொடக்கிய கட்சி மீதும், அந்தக் கட்சியை வழி நடத்துகிற தலைவர்கள் மீதும் மனத்தினால், வாக்கினால் பற்றும் பாசமும் பற்றுறுதியும் நன்றியும் இருக்க வேண்டுமா? வேண்டாமா?

1968 இல் தமிழரசுக் கட்சியில் இருந்து விலகிய ஈழவேந்தன் வி.நவரத்தினம் தோற்றுவித்த சுயாட்சிக் கழகத்தில் இணைந்தார். பின்னர் மீண்டும் தமிழரசுக் கட்சியில் வந்து சேர்ந்தார். 1980 இல் மீண்டும் தமிழரசுக் கட்சியில் இருந்து விலகி தமிழீழ விடுதலை முன்னணி என்ற கட்சியை தொடங்கி அதன் செயலாளராக இருந்தார். இரண்டு பேரை மட்டும் (மற்றொருவர் 1992 இல் மறைந்த திரு கோவை மகேசன்) இந்தக் கட்சியின் சார்பில் தமிழ் நாட்டில் இருந்து கொண்டு செய்தித் தாள்களுக்கு அறிக்கை விட்டுக் கொண்டிருந்தார். 2000 இல் இந்தியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட ஈழவேந்தன் 2001 இல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திருகோணமலைத் தொகுதியில் தமிழீழ விடுதலை முன்னணி (ரெலோ) சார்பாக போட்டியிட நியமனம் கேட்டார். இரா. சம்பந்தர் அவர்களால் நியமனம் மறுக்கப்பட்ட போது ரெலோ வேட்பாளர் ஸ்ரீகந்தாவுக்கு ஆதரவாக ஊர் ஊராகச் சென்று பரப்புரை செய்தார்.

இதில் வேடிக்கை என்னவென்றால் திரு. தர்மலிங்கம், திரு. ஆலாலசுந்தரம் இருவரையும் செப்டம்பர் 02, 1985 அன்று சுட்டுக் கொன்றது இதே ரெலோ அமைப்புத்தான். பதவி என்றால் ஈழவேந்தன் எந்தப் பேய் பிசாசோடும் கைகோர்க்க அணியமாவார் என்பதற்கு இது ஒரு சின்ன எடுத்துக்காட்டாகும்.

2007 வரை ஈழவேந்தன் அவர்களது அரசியல் போக்கை ஏற்றுக் கொண்டாலும் அதன் பின்னர் அவர் ததேகூ எதிரான – திரு. சம்பந்தன், திரு. சுமந்திரன் இருவருக்கும் எதிரான எதிர்மறை அரசியலையே தீவிரமாக நடத்தி வருகிறார்.

2010 இல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஈழவேந்தன் தமிழ் தேசிய மக்கள் முன்னணி என்ற முகமூடி அணிந்து கொண்டு வந்த அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் கட்சியை ஆதரித்துப் பரப்புரை செய்தார். அதே போல் மீண்டும் 2015 இல் நடந்த தேர்தலில் 2010 இல் கட்டுக்காசை (டெப்பாசிட்) இழந்த அதே அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் கட்சியை ஆதரித்து மேடைகளிலும் வானொலியிலும் பேசினார். இப்போதும் தமிழரசுக் கட்சித் தலைவர் இரா சம்பந்தன், அதன் பேச்சாளர் திரு. ம.ஏ. சுமந்திரன் இவர்களை ஒருமையில் விழித்துக் குறிபார்த்துத் தாக்கி வருகிறார். தள்ளாத வயதிலும் தளராத துணிவோடு அரசியல் சமர்க்களத்தில் காய் நகர்த்தும் சாணக்கியர் திரு. சம்பந்தர் அவர்களை தோற்கடிக்கக் காட்டும் பகீரத முயற்சியை எமது தாயக மக்களின் வாழ்வாதாரத்தை, பொருளாதாரத்தை நிமிர்த்துவதற்குப் பயன்படுத்தலாமே?

ரொறன்ரோவில் (டொரன்டோ) ஏப்ரல் 07, 2010 அன்று தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணிக்கு ஆதரவு திரட்டும் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டத்தில் ஈழவேந்தன் பேசினார். அப்போது “தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை” என்ற கொள்கைகளைக் கைவிட்டு, சரணாகதி அரசியலுக்குள் நுழைந்து தமிழ் மக்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையில் இருப்பவர்கள், அந்தப் பதவிகளில் இருந்து அகற்றப்பட வேண்டும். ஈழத் தமிழினத்தை மறந்து இந்தியாவின் நிகழ்ச்சி நிரலை ஏற்றுச் செயற்படும் இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா, சுமந்திரன், சுரேஸ் பிறேமச்சந்திரன் ஆகியோரை அரசியலில் இருந்து நீக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டதுடன், தாயக மக்கள் தீர்க்கமாகச் சிந்துத்து வாக்களிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

இப்படி எடுத்தேன் கவிட்தேன் என வெகுளித்தானமாகப் பேசுவதில் ஈழவேந்தன் விண்ணாதி விண்ணன். மன்னாதி மன்னன். இடம், பொருள், ஏவல் பற்றி அவர் கவலைப்படுவதே இல்லை. ‘தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையில் இருப்பவர்கள், அந்தப் பதவிகளில் இருந்து அகற்றப்பட வேண்டும்’ என்று எங்கிருந்து கொண்டு கர்ச்சிக்கிறார்? தாயகத்தில் மக்களோடு மக்களாக நின்று இந்த அறை கூவலை விடுத்தாரா? இல்லை! கனடாவில் இருந்து கொண்டு அங்கே மக்களால் தெரிவு செய்யப்பட்ட தலைவர்களைப் பார்த்து இந்த வேண்டுகோளை விடுக்கிறார்! உண்மையில் த.தே.கூக்கும் தமிழ்க் காங்கிரஸ் கட்சிக்கும் கொள்கையளவில் அதிக வேற்றுமை இல்லை. 2010 நாடாளுமன்றத் தேர்தலில் கஜேந்திரன், பத்மினி போன்றோருக்கு நியமனம் கொடுக்க மறுத்த போதே தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி என்ற காளான் கட்சியை இரவோடு இரவாக உருவாக்கினார்கள். உருவாக்கி தமிழ் மக்களது ஒற்றமையை உடைத்தார்கள்.

கனடாவில் ஏதிலி அடைக்கலக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு நாடு கடத்தலைத் தடுத்து நிறுத்த கனடிய நீதிமன்றங்களின் படிகளில் இடைவிடாது ஏறி இறங்கிக் கொண்டிருக்கும் ஒருவர் அங்குள்ள த.தே.கூ இன் தலைவர்களைப் பார்த்து அறை கூவல் விடுகிறார். அகற்றப் போவதாகச் சொல்கிறார். யார் யாரைப் பார்த்து அறை கூவல் விடுவது என்பதற்கு ஒரு ஒழுங்கு முறை இல்லையா? இது மொட்டைத் தலைச்சி தனது தலையைச் சிலிப்பிக் காட்டியது போல இல்லையா? தமிழ் வாக்காளப் பெருமக்கள் இவரை விட நூறு மடங்கு புத்திசாலிகள். ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்பாள் போட்ட குலோத்துங்க சோழனின் தேவி மாதிரி ஈழவேந்தன் ஆதரித்த தமிழ்க் காங்கிரஸ் கட்சி 2010, 2015 இல் போட்டியிட்ட தேர்தல் தொகுதிகள் எல்லாவற்றிலும் கடைசி இடத்துக்குத் தள்ளப்பட்டு கட்டுக்காசையும் இழந்தது தான் இதை விட வெட்கம். அவமானம் வேறு உண்டா?

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தடுமாறுவதும் தடம் புரள்வதும் தமிழினத்தை அழிவிற்க்கு அழைத்துச் செல்வதோடு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எதிர்காலத்தையும் தேக்க நிலைக்கு தள்ளி விடும் … ஆனால் கொள்கை உறுதியோடு செயற்படும் திறன் அவருக்கு உண்டென்பவன் சரி, தன் மனைவியின் தேவைகளை நிறைவு செய்ய முடியாத கணவன் சரி, முடிவில் தன் மனைவியைக் கைவிட்டதாகவே கொள்ளப்படும் ( A betraying husband is dangerous but a weak husband is equally bad). எம்மைப் பொறுத்த வரையில் தன் மனைவியின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற முடியாத பலவீனமான கணவனாகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு காட்சி அளிக்கிறது. கைவிட்ட கணவன் சரி, தன் மனைவியின் தேவையை நிறைவு செய்ய முடியாத கணவன் சரி, பயனற்றவர்களாகத் தான் கொள்ளப்படுவர். ஆனால் உள்ள உறுதியோடு கொள்கையில் தொலை நோக்கு சிந்தனையுடன் வெற்றி பெறும் ஆற்றல் அவருக்கு (சம்பந்தருக்கு) உண்டோ என்பது ஐயத்துக்குரியது. அவர் சரி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சரி, ஆவது அறிதல் நிலையில் – தொலை நோக்கு சிந்தனையுடன் செயற்படுவதாக தெரியவில்லை. இந்தியாவின் நிகழ்ச்சி நிரலுக்கு கட்டுப்பட்டு தொடர்ச்சியாக இயங்குகின்றனர். மகிந்த ராஜபக்ச சரி, ஆளும் சிங்கள கட்சி சரி, அல்லது எந்த சிங்கள கட்சி சரி எமது வெளிப்படையான எதிரிகள் என்பதை காலம் உணர்த்தி நிற்கிறது.” (http://www.tamilwin.com/show-0nSVUgzS2VDMk.html)

காக்கைக்கும் கனவிலும் ஏதோ தின்கிற எண்ணந்தானாம். ஈழவேந்தன் மேலே கையாண்டுள்ள சொற்றொடரைக் கவனியுங்கள். A betraying husband is dangerous but a weak husband is equally bad. அவரைப் பொறுத்த வரையில் தன் மனைவியின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற முடியாத பலவீனமான கணவனாகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு காட்சியளிக்கிறதாம். தெரியாமல்தான் கேட்கிறேன். இது அவரது சொந்த அனுபவமா? அண்டை நாடான இந்தியாவின் நிகழ்ச்சி நிரலுக்கு இல்லாது வேறு எந்த நாட்டின் நிகழ்ச்சி நிரலுக்கு நாம் நிற்க வேண்டும்? இந்தியாவின் அனுசரணை இல்லாது இலங்கையின் தேசியச் சிக்கல் தீர்க்கப்படும் சாத்தியம் இருக்கிறதா? இன்றுள்ள பூகோள அரசியல் அதற்கு இடம் கொடுக்குமா?

திரு சம்பந்தனைப் பார்த்து உள்ளத்தில் உறுதியில்லை, தொலை நோக்கு சிந்தனை இல்லை, கொள்கை உறுதியோடு செயற்படும் திறன் இல்லை என்று சொல்லும் இவருக்கு இருக்கும் தகைமைகள் எவை? தொலை நோக்குச் சிந்தனை இல்லாத காரணத்தாலேயே கனடாவுக்கு வந்து மாட்டுப்பட்டுள்ளார்! கொள்கை உறுதி பற்றிப் பேச ஈழவேந்தனுக்கு என்ன தகுதி இருக்கிறது? திரு சம்பந்தர் தமிழரசுக் கட்சியில் சேர்ந்த காலம் தொட்டு ஒரே கட்சி ஒரே கொள்கையோடு இருக்கிறார். திரு மாவை சேனாதிராசாவும் அப்படித்தான். ஒரே கட்சி ஒரே கொடி. மாறாக ஈழவேந்தன் தமிழரசுக் கட்சி, சுயாட்சிக் கழகம், தமிழர் ஐக்கிய முன்னணி, தமிழீழ விடுதலை முன்னணி, தமிழீழ விடுதலை அமைப்பு, நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் என எத்தனை கொப்புக்கள் தாவியிருக்கிறார்? கட்சித் தாவலுக்குரிய எல்லாத் தகைமைகளையும் பெற்றிருக்கும் இவருக்கு அடுத்த முறை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஒரு விருது கொடுக்கலாமே!

வள்ளுவர் கூறிப்பிட்டதாவது : சொல்லுதல் யார்க்கும் எளிய, அரியவாம் சொல்லிய வண்ணம் செயல் என்பார். மேடைகளில் எல்லோரையும் திட்டித் தீர்ப்பது, வசைமாரி பொழிவதுதான் ஈழவேந்தனின் அரசியல்.

ஈழவேந்தனை தெரிவு செய்த குழுவுக்கு ஈழவேந்தனின் இருண்ட பக்கங்கள் தெரியவில்லை. அவரது கட்சித் தாவல்கள் தெரியவில்லை. இந்த விருதைப் பெறுபவர்

(1) சிறிலங்காவுக்கு உள்ளேயும் வெளியேயும் ஆய்வு செய்திருக்க வேண்டும்.
(2) அதனை அச்சிட்டு வெளியிட்டிருக்க வேண்டும்.
(3) மக்களதும் தேசிய இனங்களுக்கும் உரித்தான அடிப்படை மனித உரிமைகள் தன்னாட்சி மற்றும் சுயநிர்ணய உரிமைகளை ஆதரிக்கிற, மதிக்கிற தேசிய பன்னாட்டு பொதுமன்றங்களில் பன்னாட்டு அரசியல் அமைப்புக்கள், அரசுகள், அரச தந்திரிகள் மற்றும் வேண்டியவர் போன்றோரோடு வாதாடி இருக்க வேண்டும். ஆனால் இந்த வரைவிலக்கணம் கடைப்பிடிக்கப்படவில்லை.

இந்தியா, ஈழவேந்தனை மே 2000 இல் நாடு கடத்தியிருந்தது. மீண்டும் ஜீலை 2004 இல் நாட்டுக்குள் நுழைய விடாமல் விமான நிலையத்தில் வைத்து திருப்பி அனுப்பியது. அதனைக் கண்டித்து நான் குரல் கொடுத்திருந்தேன். கடந்த பத்து ஆண்டுகளாக அவரால் எந்த நாட்டுக்கும் போக முடியாமல் கனடாவில் இருக்கிறார். அண்டை நாடான அமெரிக்காவுக்குக் கூட அவரால் போக முடியாது. இலங்கைக்கு மட்டும் திரும்பிப் போகலாம்.

மொத்தத்தில் இப்படியான சாமுத்திரிகா இலட்சணங்களைக் கொண்ட ஒருவருக்கு, தந்தை செல்வநாயகம் தொடக்கிய தமிழரசுக் கட்சியோடு 35 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்பில்லாத ஒருவருக்கு, தொடர்பில்லாதது மட்டுமல்ல தமிழரசுக் கட்சியையும் அதன் தலைவர்களையும் திட்டித் தீர்த்து பகைமை பாராட்டி வருகின்ற ஒருவருக்கு, வரலாற்றின் பிழையான பக்கத்தில் நிற்கும் ஒருவருக்கு, தந்தை செல்வநாயக்தின் பெயரால் விருது கொடுத்தது மாபெரும் வரலாற்றுத் தவறாகும். தந்தை செல்வநாயகம் அவர்களின் நற்பெயருக்கு இழைக்கப்பட்ட அவமதிப்பாகும். ஈழவேந்தனுக்கு விருது வேண்டாம் என்று நாம் சொல்ல வரவில்லை. தந்தை செல்வநாயகத்தின் பெயரால் கொடுக்க வேண்டாம் என்பதே எமது வாதம். ஈழவேந்தனது தனித்தமிழ்ப் பணி, சைவ சமயப் பணி போன்றவற்றை மெச்சி அவருக்கு விருது யாராவது கொடுத்தால் தாராளமாகக் கொடுக்கலாம்.

தந்தை செல்வநாயகம் காட்டிய பாதையில், வாழ்விலும் தாழ்விலும் கொள்கைப் பிடிப்போடு, அர்ப்பணிப்போடு, நேர்மையோடு பயணம் செய்பவர்கள் நூற்றுக்கணக்கில் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவருக்கு இந்த விருதை வழங்கியிருக்கலாம்.

– நக்கீரன் (கனடாவில் வாழ்ந்துவருபவர் திரு. தங்கவேலு வேலுபிள்ளையின் எழுத்தாக்கம்)

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: