உலக ராணுவ தடகளத்தில் 3 தங்கம் வென்ற ஆனந்தனுக்கு கும்பகோணத்தில் உற்சாக வரவேற்பு!

உலக ராணுவ தடகளத்தில் 3 தங்கம் வென்ற ஆனந்தனுக்கு கும்பகோணத்தில் உற்சாக வரவேற்பு!

ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்வதே இலக்கு என்று உலக ராணுவ தடகளப் போட்டியில் பாரா பிரிவில் 3 தங்கப் பதக்கங்களை வென்ற குணசேகரன் ஆனந்தன் தெரிவித்தார்.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தைச் சேர்ந்தவர் ஆனந்தன் (32). இவர், கடந்த 2005-ல் இந்திய ராணுவத்தில் பணியில் சேர்ந்தார். 2008-ம் ஆண்டு காஷ்மீர் மாநிலத்தில் எல்லைப் பிரிவில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போது, பூமிக்கடியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கண்ணி வெடி வெடித்ததில், இவரது இடது கால் துண்டானது.

பின்னர், வலுவான தகடைக் கொண்டு செயற்கையாக கால் பொருத்தப்பட்டது. அதன் உதவியுடன் நடைப் பயிற்சியையும், தொடர்ந்து வேகமாக ஓடும் பயிற்சியை மேற்கொண்ட ஆனந்தன், புனேவில் உள்ள ராணுவ விளையாட்டுப் பயிற்சியகத்தில் சிறப்பு பயிற்சிகளைப் பெற்றார். தொடர்ந்து பல்வேறு ஓட்டப் பந்தயங்களில் பங்கேற்று பரிசு பெற்று வந்தார்.

கடந்த மாதம் சீனாவில் நடைபெற்ற ராணுவ வீரர்களுக்கான உலக தடகளப் போட்டியில் பாரா பிரிவில் பங்கேற்ற ஆனந்தன் 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர் ஓட்டப் பந்தயங்களில் தங்கம் வென்று அசத்தினார்.

இந்நிலையில், தனது சொந்த ஊரான கும்பகோணத்துக்கு வந்த ஆனந்தனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கும்பகோணம் உச்சிப் பிள்ளையார் கோயிலில் இருந்து ஊர்வலமாக மேளதாளங்களுடன் அவர் படித்த பள்ளிக்கு அழைத்து வரப் பட்டார். தொடர்ந்து அங்கு அவருக்குப் பாராட்டு விழா நடைபெற்றது.

ஆனந்தன் கூறியதாவது ; “2020-ம் ஆண்டு டோக்கியோ நகரில் நடை பெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்வதுதான் என்னுடைய அடுத்த இலக்கு, நிச்சயம் ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்ப்பேன். உலக அளவிலான போட்டியில் வெற்றி பெற்ற போதிலும் மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளாதது வருத்தமளிக்கிறது. இலக்குகளை அடைய எனக்கு தேவையான உதவிகளை மத்திய, மாநில அரசுகள் செய்து கொடுக்க வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பு” என்றார்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: