சென்னையில் நடிகர் வீட்டுக்குள் திருட்டுச் சிலைகள்! – ஜே.சி.பி, லாரிகளுடன் சென்ற பொன்.மாணிக்கவேல்!

சென்னையில் நடிகர் வீட்டுக்குள் திருட்டுச் சிலைகள்! - ஜே.சி.பி, லாரிகளுடன் சென்ற பொன்.மாணிக்கவேல்!

சென்னையில் நடிகர் வீட்டுக்குள் திருட்டுச் சிலைகள்! – ஜே.சி.பி, லாரிகளுடன் சென்ற பொன்.மாணிக்கவேல்!

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தொழிலதிபரும், நடிகருமான ரன்வீர் ஷா என்பவரின் வீட்டில் கோயில்களில் திருடப்பட்ட சிலைகள் மற்றும் கல் தூண்களை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்தவர் ரன்வீர்ஷா, இவரின் வீட்டில் சிலைகள் இருப்பதாகச் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்துள்ளது. இதனால் தொழிலதிபர் வீட்டில் சோதனை நடத்த நீதிமன்றம் மூலம் காவல் துறையினர் அனுமதி பெற்றனர். அதன்படி, சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் தலைமையிலான காவலர்கள் ரன்வீர் ஷா வீட்டுக்குள் இன்று காலை நுழைந்தனர். வீட்டில் இருந்தவர்களிடம் நீதிமன்ற உத்தரவைக் காண்பித்தனர். அதன் பிறகு காவலர்கள் சோதனையில் ஈடுபட்டனர். சுமார் மூன்று மணி நேரம் நடந்த சோதனையில் ஏராளமான சிலைகளை காவலர்கள் பறிமுதல் செய்துள்ளனர். மேலும், பழைமையான கல் தூண்களும், கற்சிலைகளும் இந்தச் சோதனையில் சிக்கியுள்ளன.

இதுகுறித்து பொன்.மாணிக்கவேல் கூறுகையில், “தொழிலதிபர் ரன்வீர் ஷா வீட்டில் நடத்திய சோதனையில் 12 உலோகச் சிலைகளும் கற்சிலைகளும் கல் தூண்களும் கைப்பற்றியுள்ளோம். இவை கோயில்களிலிருந்து திருடப்பட்டவை. அது தொடர்பாக விசாரித்து வருகிறோம். சிலை கடத்தல் வழக்கில் சிக்கிய தீனதயாளன் என்பவரிடமிருந்து ரன்வீர் ஷா, சிலைகளை வாங்கியுள்ளார். சோதனையின் போது கிடைத்த சிலைகளை கும்பகோணம் நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்துள்ளோம். 100 ஆண்டுகளுக்கு மேலான சிலைகளை விற்க முடியாது, சிலைகளை விற்க லைசென்ஸ் வேண்டும். தீனதயாளனிடம் லைசென்ஸ் கிடையாது. அது தொடர்பாகவும் விசாரித்து வருகிறோம்” என்றார்.

சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் துறையினர் கூறுகையில், “தொழிலதிபர் ரன்வீர் ஷா, ஜவுளிக் கடை நடத்திவருகிறார். அதோடு சினிமாவில் சில படங்களிலும் நடித்துள்ளார். சிலைகளை அவர் வாங்கியதற்கான ஆவணங்களை வைத்திருப்பதாகத் தகவல் சொல்லப்படுகிறது. எங்களிடம் சிக்கிய சிலை கடத்தல் கும்பல் கொடுத்த தகவலின் அடிப்படையில் ரன்வீர் ஷா வீட்டில் சில ஆண்டுகளுக்கு முன் சோதனை நடத்தினோம். அப்போது, குறிப்பிடும் வகையில் சிலைகள் கிடைக்கவில்லை. இதனால்தான் நீதிமன்ற அனுமதியைப் பெற்று இன்று சோதனை நடத்தினோம். சிலைகளை வீட்டின் அறைக்குள் மறைத்து வைத்திருக்கலாம் என்ற சந்தேகம் எங்களுக்கு இருந்தது. இதனால் அறையை ஜே.சி.பி மூலம் இடித்து சிலைகளை மீட்கவும் தயாராக இருந்தோம். ஆனால், அறைக்குள் சிலைகள் எதுவும் மறைத்து வைக்கப்படவில்லை. இதுவரை 89 சிலைகளைக் கைப்பற்றியுள்ளோம். இந்தச் சிலைகளை அரசு அருங்காட்சியகத்தில் வைக்க இடமில்லை என்று தகவல் கிடைத்துள்ளது. இதனால் மாற்று ஏற்பாடு செய்துள்ளோம்” என்றனர்.

வீட்டுக்குள் காவல் துறையினர் நுழைந்ததும், ஒவ்வோர் அறையாகத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, வீட்டின் ரகசிய அறைகளில் சிலைகள் இல்லை. வெளியில் இருந்த சிலைகளை ஒவ்வொன்றாக மீட்ட காவலர்கள் அதற்கு எண்கள் கொடுத்தனர். பிறகு, சிலைகளை வெளியில் கொண்டு வந்தனர். ஏற்கெனவே தீனதயாளன் கொடுத்த தகவல் அடிப்படையில்தான் இந்தச் சோதனை நடந்தது. இதனால், எளிதாகப் காவலர்கள் சிலைகளை மீட்டனர்.

சோதனையின்போது, வீட்டிலிருந்து யாரும் வெளியில் வரவில்லை. அதேபோல் சோதனை நடத்தவும் யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், காவலர்கள் எந்தவித இடையூறும் இல்லாமல் சோதனையை வெற்றிகரமாக முடித்தனர். பொன்.மாணிக்கவேல், இந்தச் சிலைகள் திருடப்பட்டவை என்று தெரிவித்தார். ஆனால், ரன்வீர் ஷா தரப்பினரோ இந்தச் சிலைகளை நாங்கள் விலைக்குதான் வாங்கினோம் என்று கூறியுள்ளனர். ரன்வீர் ஷா வீட்டிலிருந்து எடுத்து வரப்பட்ட சிலைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. அம்மன் சிலைகளும், நந்தி சிலைகளும், பழைமையான கல் தூண்களும் கிடைக்கப்பட்டுள்ளன. அவை எந்தக் கோயில்களிலிருந்து திருடப்பட்டவை என்பதை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவலர்கள் ஆய்வு செய்யத் தொடங்கியுள்ளனர்.

22 கல் தூண்கள், 12 உலோகச் சிலைகள், 55 கற்சிலைகள் என 89 பொருள்கள் கிடைத்துள்ளன. இவற்றின் மதிப்பு பல கோடி ரூபாயாகும். சிலைகளை வாங்கியதற்கான ஆவணங்கள் மட்டுமே ரன்வீர் ஷாவிடம் இருக்கிறது. ஆனால், இந்தச் சிலைகளில் பெரும்பாலானவை கோயில்களில் வழிபாடுகளில் இருந்தவை. சிலைகளை ரன்வீர் ஷா, புதுச்சேரி, கேரளாவிலிருந்து வாங்கியுள்ளார். இதனால், சிலைகளை வாங்கியவர்களிடமும் விரைவில் விசாரணை நடத்துவோம். பறிமுதல் செய்யப்பட்ட சிலைகள் பொக்லைன் உதவியோடு லாரிகளில் ஏற்றப்பட்டன. இந்தச் சிலைகள் கும்பகோணம் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படவுள்ளதாக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவலர்கள் தெரிவித்தனர்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: