முன்கூட்டியே விடுதலை இல்லை- நளினியின் மனுவை தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றம்!

முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி உள்ளிட்ட ஏழு பேரையும் விடுதலை செய்யுமாறு தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி, கவர்னருக்கு பரிந்துரைத்தது. அந்தப் பரிந்துரை மீது கவர்னர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் இந்த தீர்மானத்தை எதிர்த்த மத்திய அரசு தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், முன்கூட்டியே தன்னை விடுதலை செய்ய உத்தரவிடகோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் நளினி மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் உச்ச நீதிமன்ற வழக்கின் அடிப்படையில் நளினியின் கோரிக்கையை பரிசீலித்து முடிவு எடுக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார். இதனை எதிர்த்து நளினி மேல்முறையீடு செய்தார்.

ராஜீவ் கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டவர்களை முன்கூட்டியே விடுதலை செய்ய எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், தமிழக அரசால் எந்த முடிவும் எடுக்க முடியாத நிலையில் இருப்பதாக அரசு தரப்பில் கூறப்பட்டது. ஆனால் இந்த வழக்கிற்கும் தனது வழக்கிற்கும் எந்த தொடர்பும் இல்லை என நளினி தரப்பில் வாதிடப்பட்டது. இந்த வழக்கின் வாதப்பிரதிவாதங்கள் முடிவடைந்த நிலையில் இன்று நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர். அப்போது, நளினின் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: