திருக்குறள் ஒப்புவித்தால் இலவச பெட்ரோல்

மாணவர்கள் 20 திருக்குறளை மனப்பாடம் செய்து ஒப்புவித்து விட்டு 1லிட்டர் பெட்ரோலை இலவசமாக வாங்கிச் செல்லலாம் என்ற ஒரு வித்தியாச அறிவிப்பை வெளியிட்டுள்ளது கரூரில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையம்.

கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கே.செங்குட்டுவன். கரூரில் இயங்கி வரும் வள்ளுவர் அறிவியல் மேலாண்மைக் கல்லூரியின் சேர்மனாகவும் உள்ளார். நாகம்பள்ளியில் இவருக்குச் சொந்தமாக ஒரு பெட்ரோல் நிலையம் உள்ளது. மாணவர்கள் மத்தியில் திருக்குறள் மீதான ஆர்வத்தை வளர்க்கும் விதமாக தனது பெட்ரோல் நிலையத்தில் ஒரு வித்தியாச முயற்சியை மேற்கொண்டுள்ளார்.

1ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் தங்கள் பெற்றோருடன் வந்து 20 திருக்குறளை ஒப்புவித்தால் அவர்களுக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

மேலும், தான் சொல்லப்போகும் திருக்குறளை மாணவர்கள் முதலிலேயே எழுதிக் கொடுத்துவிட வேண்டும். ஏற்கெனவே, பங்கெடுத்த மாணவர்களும் மீண்டும் பங்கேற்கலாம். ஆனால், ஏற்கெனவே ஒப்புவித்த குறளை மீண்டும் ஒப்புவிக்கக் கூடாது. குறைந்தபட்சம் 20 திருக்குறளை மாணவர்கள் ஒப்புவிக்க வேண்டும். 10 திருக்குறள் ஒப்புவித்தால் அரை லிட்டர் பெட்ரோல் வழங்கப்படும். இவையெல்லாம் அந்த பெட்ரோல் நிலையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் விதிமுறைகள்.

இதுகுறித்து பெட்ரோல் நிலைய உரிமையாளர் கே.செங்குட்டுவன் கூறியுள்ளதாவது:

”மாணவர்களிடையே வாசிக்கும் பழக்கும் குறைந்துவிட்டது. திருக்குறளைப் படிப்பது அவர்கள் மத்தியில் ஒரு கவனத்தை உருவாக்கும். மாணவர்கள் திருக்குறளோடு வளர வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஆனால், அதற்கு ஒரு ஊக்கம் தேவை. அப்போதுதான் எனக்கு இந்த யோசனை தோன்றியது.

1960களில் என் அப்பா கருப்பையா தனது எலெக்ட்ரிக்கல் கடைக்கு வள்ளுவரின் பெயரைச் சூட்டினார். பரமத்தி வேலுர் பகுதியில் இன்னும் அந்தக் கடையை என் சகோதரர் நடத்தி வருகிறார். திருவள்ளுவரின் கருத்துகளை எவ்வாறு பின்பற்ற வேண்டும் என்று எங்கள் அப்பா எங்களுக்குக் காட்டினார். அவற்றைக் கடைப்பிடித்த யாரும் தோற்றுப்போக மாட்டார்கள்.

பெட்ரோல் விலை ரூ.90-ஐத் தொட்டுவிட்டது. ஆனால், அது எனக்குப் பிரச்சினையில்லை. மாணவர்கள் திருக்குறளின் கருத்துகளை உள்வாங்கிக் கொள்ள வேண்டும்”.

இதுவரை 147 மாணவர்கள் திருக்குறளை ஒப்புவித்து இந்தச் சலுகையைப் பயன்படுத்திக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: