வேலூர் சிறையிலிருந்து ஒரு மாத பரோலில் வெளியே வந்தார் பேரறிவாளன்!

வேலூர் சிறையிலிருந்து ஒரு மாத பரோலில் வெளியே வந்தார் பேரறிவாளன்!

ராஜீவ் கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையில் இருக்கும் ஏழு பேரில் ஒருவரான பேரறிவாளன் இன்று காலை வேலூர் சிறையிலிருந்து ஒரு மாத பரோலில் வெளியே வந்துள்ளார்/.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயாஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரன் ஆகிய 7 பேருக்கும் முதலில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் கருணை அடிப்படையில் அது ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. சிறையில் உள்ள 7 பேரும் தண்டனைக் காலம் முடிந்தும் 26 ஆண்டுகளாக சிறையிலேயே விடுவிக்கப்படாமல் உள்ளனர்.

பேரறிவாளன் கடந்த 28 ஆண்டுகளாக சிறையில் உள்ளார். சிறையில் உடல் நலம் பாதிக்கப்பட்டு பலமுறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் பேரறிவாளன். அவரை விடுதலை செய்யக்கோரி அவரது தாயார் அற்புதம்மாள் போராடினார். ஆனாலும் விடுதலை இதுவரை சாத்தியமாகவில்லை.

கடந்த 2017-ம் ஆண்டு ஆக்ஸ்ட் மாதம் பேரறிவாளன் தந்தை குயில்தாசனுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதை அடுத்து தனது மகனை பரோலில் விடுவிக்க வேண்டும் என்று அவரது தாயார் அற்புதம்மாள் கோரிக்கை வைத்தார். இதையடுத்து அவருக்கு ஒரு மாதம் பரோல் வழங்கப்பட்டது. பின்னர் தாயார் அற்புதம்மாள் கோரிக்கையை ஏற்று பரோல் காலம் மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில் பேரறிவாளன் தந்தை உடல் நலம் சரியில்லாததாலும், அவரது சகோதரி மகள் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காகவும் அவரது தாய் அற்புதம்மாள் பரோல் வழங்க தமிழக அரசுக்குக் கோரிக்கை வைத்தார். அதையேற்ற சிறைத்துறை ஒரு மாதம் பரோல் வழங்கியது.

நேற்று சென்னை புழல் சிறையில் மருத்துவப் பரிசோதனைகள் முடிந்த பின்னர் வேலூர் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பேரறிவாளன், இன்று காலை 7 மணி அளவில் பரோலில் விடுவிக்கப்பட்டார். பின்னர் தன் சொந்த ஊரான ஜோலார்பேட்டைக்கு பேரறிவாளன் சென்றார். அவருடன் பாதுகாப்புக்காக காவலர்கள் சென்றுள்ளனர்.

பரோலில் உள்ள பேரறிவாளன் பத்திரிகைகளுக்குப் பேட்டி அளிக்கக்கூடாது, கூட்டங்கள் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளக்கூடாது உள்ளிட்ட சிறை விதிகளுக்கு உட்பட்டு நடக்க வேண்டும் என்ற விதியின் கீழ் விடுவிக்கப்பட்டுள்ளார்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: