‘வழிபாட்டு தலங்களில் பிரார்த்தனை தவிர்த்து, பஞ்சாயத்து நடவடிக்கைகளில் ஈடுபட்டால், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை, பெரியமேட்டைச் சேர்ந்த அப்துர் ரகுமான் தாக்கல் செய்த மனு: சென்னை, அண்ணாசாலையில், ‘மக்கா மஸ்ஜித் ஷரியத் கவுன்சில்’ என்ற அமைப்பு இயங்கி வருகிறது. மசூதி வளாகத்தை பயன்படுத்தி, நீதிமன்றம் போல இயங்குகிறது; ஆனால், கட்டப் பஞ்சாயத்து நடக்கிறது. குடும்ப பிரச்னைகள் தொடர்பாக, அளிக்கப்படும் புகார்களுக்கு ஆஜராகும்படி, ‘சம்மன்’ அனுப்புகின்றனர். அதன்பின், அவர்கள் விருப்பு வெறுப்புக்கு ஏற்ப, உத்தரவுகளை பிறப்பிக்கின்றனர். என் குடும்ப பிரச்னைக்காக, இந்த ஷரியத் கவுன்சிலை அணுகினேன். மனைவியுடன் சேர்த்து வைக்க கோரினேன். ஆனால், அவர்கள் கட்டப் பஞ்சாயத்து செய்து, மனைவியை விவாகரத்து செய்வதாக, கையெழுத்து போடும்படி என்னை வற்புறுத்தினர். பின், விவாகரத்து செய்ததாக அறிவித்தனர். ஒவ்வொரு ஆண்டும், நுாற்றுக்கணக்கான வழக்குகளை, இந்த ஷரியத் கவுன்சில் கையாளுகிறது. ஷரியத் சட்டத்தை, இவர்கள் பின்பற்றுவதில்லை. சட்ட விரோதமாக இந்த கவுன்சில் செயல்படுவதால், முஸ்லிம் குடும்பங்களின் அமைப்பு சீர்குலைந்துள்ளது. எனவே, சென்னை, அண்ணா சாலை, மக்கா மஸ்ஜித் ஷரியத் கவுன்சில் மற்றும் இதுபோல் தமிழகத்தில் செயல்படும் அமைப்புகளின் நடவடிக்கையை நிறுத்த, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. மனுவை, தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி எம்.சுந்தரம் அடங்கிய, ‘முதல் பெஞ்ச்’ விசாரித்தது. மனுதாரர் சார்பில், மூத்த வழக்கறிஞர் சிராஜுதீன் ஆஜரானார். போலீஸ் தரப்பில், பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.