“இயற்கையை நாம் வெல்ல நினைத்தால், இயற்கை நம்மை தோற்கடிக்கும்” – குரங்கணி மலையில் காட்டுத் தீ விபத்து!

"இயற்கையை நாம் வெல்ல நினைத்தால், இயற்கை நம்மை தோற்கடிக்கும்" - குரங்கணி மலையில் காட்டுத் தீ விபத்து!

“இயற்கையை நாம் வெல்ல நினைத்தால், இயற்கை நம்மை தோற்கடிக்கும்” – குரங்கணி மலையில் காட்டுத் தீ விபத்து!

மேற்கு தொடர்ச்சி மலை 1600 கிலோமீட்டர் நீளம் கொண்டது. 1,60,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது. குஜராத்தில் தொடங்கி கன்னியாகுமரியில் சாமித்தோப்பில் முடியும் தொடர் மலை. மிக அபூர்வமான இயற்கையின் படைப்பு. அடர்ந்த காடுகள், வன விலங்குகள், பறவைகள், பலவகையான அரிய பாம்புகள், தாவரங்கள், மரங்கள் உடையவை. இந்தியாவின் 40 விழுக்காடு நீர்ப்பாசனத்தை அளிக்கும் மிக முக்கிய நதிகளான கோதாவரி, கிருஷ்ணா, தாமிரபரணி, துங்கபத்திரா போன்ற நதிகள் இந்த மேற்கு தொடர்ச்சி மலையிலிருந்தே தோன்றுகிறது என்பது சிறப்பு. இந்த மலைகளினாலேயே அதிக மழை பொழிவு ஏற்படுகிறது என்பதும், நீர் ஆதாரங்களில் மிக முக்கியமான ஒன்று மேற்கு தொடர்ச்சி மலை என்பதும் குறிப்பிடத்தக்கது. இயற்கை நமக்கு கொடுத்திருக்கும் போற்றி பாதுகாக்கப்பட வேண்டிய பரிசுகளில் மிக முக்கியமானது.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்


உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா?


இந்த மலைகளை குடைந்தே ஆங்கிலேயர்கள் அதிக அளவில் காபி மற்றும் தேயிலை எஸ்டேட்டுகளை நிறுவி அங்கிருந்து அவர்களின் நாட்டிற்கு ஏற்றுமதி செய்து, கொண்டு சென்றார்கள் என்பதும், அதனாலேயே மலைகளை துன்புறுத்தி ரயில்பாதை மற்றும் சாலைகளை அமைத்தார்கள் என்பதையும் மறந்து நம்மில் பலர் இன்றளவும் ஆங்கிலேயர்களை இந்த கொடும் செயலுக்காக புகழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்த மலைகளில் மனிதர்கள் செல்வதே தவறு என்கிற நிலையில் அங்கேயே குடியமர்ந்து பல நகரங்களையும் அமைத்து புளகாங்கிதம் அடைந்து கொண்டிருக்கிறோம். வர்த்தகமயமாக்கி சர்வ நாசத்தை விளைவித்து கொண்டிருக்கிறோம். இதனால் சுற்றுப்புற சூழல் அதிகளவில் மாசுபடுவதோடு மனித இனத்துக்கே கேடு விளைவிக்கப்பட்டுள்ளது என்பதை உணர மறுக்கிறோம்.பருவ நிலை மாற்றத்திற்கு இந்த மாசுபடுத்தல்களும் காரணங்கள் என்பதை உணராது மேலும் மேலும் தவறிழைத்து கொண்டிருக்கிறோம்.

காட்டுத் தீ என்பது பாறைகள் ஒன்றோடு ஒன்று உரசுவதனாலோ, வெப்பம் அதிகமாக இருந்தாலோ, வேறு பல இயற்கையான காரணங்களாலோ கூட ஏற்படும். இந்த தீ என்பது காடுகளில் ஏற்படும் தொடர் நிகழ்வு. ‘இந்த தீயினால் ஏற்படும் மாற்றங்கள் மேலும் காடுகளை வளர்க்கும்’ என்பது குறிப்பிடத்தக்கது. ‘காட்டு தீ’ காற்றடிக்கும் வழியில் தான் செல்லும் என்பதும், ஆக்ரோஷமாக இருக்கும் என்பதும், காடுகளில் ஏற்படும் தீயை கட்டுப்படுத்த முயற்சியெடுக்கலாமே தவிர அதை மனிதர்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சி எடுப்பது ஆபத்து என்பதும் தெளிவானது. காற்று செல்லும் திசையில் தீ பரவி கொண்டே இருக்கும். ‘காட்டு தீ போல் பரவும்’ என்ற வார்த்தைகள் அதன் உக்கிரத்தை உணர்த்தும். மலைகளும் காடுகளும் நம்மை பாதுகாக்கின்றன என்பதை நாம் அறியாமல் இருப்பதும், சாகசம் என்ற பெயரில் அவைகளை நாம் அத்துமீறி அணுகுகிறோம் என்பதை உணராமல் இருப்பது துரதிர்ஷ்டவசமானது. மலை ஏற்ற பயிற்சி செய்வோர் பலர் தங்களின் உயிரை துச்சமென மதித்தே இந்த கடும் செயலில் இறங்குகின்றனர். இயற்கையை எதிர்த்து சமாளித்து விடலாம் என்று திட்டமிடுவது என்பதையெல்லாம் கனவில் கூட நினைக்க கூடாது.

குரங்கணி மலையில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து பலரும் பல்வேறு விதமான கருத்துக்களையும், விமர்சனங்களையும் முன் வைப்பதை பார்க்கையில், கேட்கையில் கருத்து சுதந்திரம் என்ற போர்வையில் நாம் நம்மை ஏமாற்றி கொண்டிருக்கிறோம் என்றே என்ன தோன்றுகிறது. மிருகங்கள் அதிகம் வசிக்க கூடிய மலையில் எந்த பாதுகாப்பும் இன்றி குழந்தைகளை அழைத்து செல்கிறோம் என்ற எண்ணமும் இல்லாமல் சென்றதும், புதியதாக திருமணம் செய்து கொண்ட தம்பதிகள் எந்த அச்சமும் இன்றி சென்றதும்,ஆள் அரவமில்லா இடங்களில் சமூக விரோத சக்திகள் இருந்தால் என்ன செய்வது என்ற சிறிய சிந்தனை கூட இல்லாமல் இளம்பெண்கள் சென்றதும் அனைவராலும் குறிப்பிட்டு கண்டிக்கப்பட வேண்டியது கட்டாயம். ஆனால் நேற்றைய விவாதங்களிலும், இது குறித்த செய்திகளிலும் இது குறித்து பேசப்படாமல், அலசப்படாமல் தொடர்ந்து அரசு ஊழியர்களின் கவனக்குறைவு மற்றும் அரசின் அலட்சியம் என்றெல்லாம் ஆய்வு செய்தது மனவருத்தத்தை அளிக்கிறது.மேலும் லஞ்சம் வாங்கி கொண்டு அனுமதி அளிக்கப்பட்டதா என்ற விவாதங்களும், அரசு இயந்திரம் இன்னும் வேகமாக செயல்பட்டிருக்க வேண்டும் என்ற பல்வேறு விமர்சனங்களும் கடுமையாக இருந்தன. அரசு இயந்திரம் என்பது அரசு அதிகாரிகள் தான் என்பதும், நம்மில் அவர்களும் அடக்கம் தான் என்பதையும் நாம் மறந்து விட்டு பேசுவது முறையல்ல. ஒரு சில அரசியல்வாதிகள் உணர்ச்சிகரமாக பேசி, அரசாங்கத்தை விமர்சித்து அரசியல் லாபம் தேட முயற்சிப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. லஞ்சம் வாங்குவது குற்றம் என்றால் லஞ்சம் கொடுப்பதும் குற்றம் தான். தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்பதை புரிந்து கொள்ள வேண்டும். சமீப காலங்களில் காட்டில் உள்ள விலங்குகள் நம் ஊர்களில் நுழைவது அதிகமாகியுள்ளதை நாம் பார்க்கிறோம். இதற்கு காரணமே அந்த விலங்குகள் வாழும் இடங்களை நோக்கி நாம் செல்வதும், காடுகளை அழித்து குடியிருப்புகள் கட்டுவதனாலும் தான்.

முடிந்த வரை இது போன்ற ஆபத்தான பயணங்களை தவிர்ப்பது, பெண்கள் மற்றும் குழந்தைகள் உரிய பாதுகாப்பில்லாமல், முறையான ஏற்பாடுகள் இல்லாமல் இது போன்ற காடுகளில் மலை ஏற்றத்தை மேற்கொள்வது தவறு என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மாநில அரசு இனி வரும் காலங்களில் இது போன்ற காடுகள் நிறைந்த மலைகளில் மலையேற்றம் செய்பவர்களின் உடற் தகுதி மற்றும் அனுபவத்தை கொண்டு அனுமதிப்பது, காடுகளில் உள்ள சூழ்நிலையை அறிந்து கொண்டு அனுமதிப்பது என்ற நிலைப்பாட்டை எடுக்க வேண்டியது கட்டாயம். ஆனால் அதே சமயம் பாதுகாப்பை அதிகரிக்கிறோம், மேலும் வசதிகளை பெருக்குகிறோம் என்றெல்லாம் தேவையில்லாத விவாதங்களை கேட்டு, விமர்சனங்களுக்கு அடிபணியாமல் மனிதர்கள் தங்களது எல்லையை மீறாது நடப்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அதை மீறுவோர்க்கு கடுமையான தண்டனைகளை வழங்கும் சட்டங்களை உருவாக்கி, அமல்படுத்த வேண்டும். ஊடகங்களும், சமூக ஆர்வலர்களும் இயல்பு நிலையை உணர்ந்து பொறுப்போடு, நடுநிலையோடு மக்களின் தவறுகளை சுட்டிக்காட்டுவது அவர்களின் தலையாய கடமை.

“இயற்கையை நாம் வெல்ல நினைத்தால், இயற்கை நம்மை தோற்கடிக்கும்”

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: