கேரள எல்லையில் அமைந்துள்ள தமிழ் கடவுளான கண்ணகி கோவிலில் சித்ரா பவுர்ணமி விழா!

கேரள மாநில எல்லையில் உள்ள கண்ணகி கோவிலில் நேற்று (10.05.2017) நடைபெற்ற சித்ரா பவுர்ணமி விழாவில் ஏராளமான தமிழர்கள் கலந்து கொண்டனர்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத்மிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்


தேனி மாவட்டம், கூடலுார் அருகே, தமிழக – கேரள எல்லை, வண்ணாத்திப்பாறை மலை உச்சியில், மங்கலதேவி கண்ணகி கோவில் உள்ளது. கண்ணகியை கோவலன், வானுலகிற்கு அழைத்துச் சென்றதாக நம்பப்படும், சித்ரா பவுர்ணமி அன்று, இங்கு விழா நடக்கும். நேற்று, இவ்விழா, கோலாகலமாக நடந்தது. இதில் ஏராளமான தமிழர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

கண்ணகி கோவில் என்பது சேரன், சோழன், பாண்டியன் ஆகிய 3 மன்னர்களையும் இணைக்கும் வரலாற்றுடன் தொடர்புடையது. இரு மாநில மக்களும் ஒற்றுமையுடன் இந்த திருவிழாவை கொண்டாடுவது வரவேற்கத்தக்கது. இந்த ஒற்றுமை நீடித்து, நிலைக்க வேண்டும்.

இந்த கோவில் அமைந்து உள்ள நிலம் தமிழகத்திற்கு உரியது. ஆனால், கேரள மாநில வழியாக செல்வதற்கு தான் சாலை வசதி உள்ளது. தமிழக பகுதியான பளியன்குடி வழியாக சாலை அமைக்கப்படவில்லை. சாலை அமைக்க தமிழக அரசு இத்தனை ஆண்டுகள் கடந்த நிலையிலும் நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்த கோவிலை பராமரித்து, பாதுகாப்பதோடு, பளியன்குடி வழியாக சாலை அமைக்க வேண்டும். அவ்வாறு செய்தால் பக்தர்கள் அதிக அளவில் வருவார்கள். தமிழகத்தின் பெருமை மிக்க அடையாளமான கண்ணகி கோவிலை பாதுகாக்கப்பட வேண்டும்.

இந்த கோவிலை கேரள தொல்லியல் துறையிடம் ஒப்படைப்பது என்பது கலாசார சீரழிவுக்கு வழிவகுக்கும். எனவே கோவிலை தமிழக இந்து சமய அறநிலையத்துறை வசம் ஒப்படைக்க  ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.

பாலிதீன் பை பறிமுதல் :

அதிகாலை, 5:00 மணிக்கு, குமுளியில் இருந்து கேரள வனப்பகுதி வழியில், பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். குமுளியில் இருந்து, 14 கி.மீ., தொலைவில் உள்ள கோவிலுக்கு ஜீப்பிலும், நடந்தும் சென்றனர். கொக்கரக்கண்டம் அருகே, கேரள வனத் துறையினர் சோதனை நடத்தி, பாலிதீன் பை, பிளாஸ்டிக் கேன்களை பறிமுதல் செய்தனர்.

சோதனை என்ற பெயரில், கேரள வனத்துறை பலத்த கெடுபிடி காட்டியதால், பக்தர்கள் சிரமத்திற்குள்ளானார்கள். கோவில் வளாகத்தில், இரண்டு மணி நேரம் வரை காத்திருந்து, பக்தர்கள் வழிபட்டனர். கண்ணகிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. தமிழக பூசாரிகள் அர்ச்சனை செய்தனர்.

காலையில், அம்மனுக்கு மலர் வழிபாடு, யாகபூஜை நடந்தது; பொங்கல் வைக்கப்பட்டது. பெண்களுக்கு மங்கல நாண், வளையல் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில், திருவிளக்கு வழிபாடு, பூமாரி விழா நடந்தது.

மதுரை, நாகப்பட்டினத்தில் இருந்து, பக்தர்கள் பாதயாத்திரையாக கோவிலுக்கு வந்தனர். தமிழக பக்தர்கள் பொங்கல் வைக்க, ‘கெடுபிடி’ காட்டிய கேரள வனத்துறை, கோவில் வளாகத்தில், கேரளத்தினர் பிரம்மாண்டமாக பொங்கல் வைத்ததை கண்டு கொள்ளவில்லை.

தொல்லியல் துறை துாக்கம் கலையுமா? :

மங்கலதேவி கண்ணகி கோவில், யாருக்குச் சொந்தம் என்பதில், தமிழக – கேரள அரசுகள் இடையே, பல ஆண்டுகளாக பிரச்னை உள்ளது. ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோவில் சேதமடைந்து, தற்போது, அழியும் நிலையில் உள்ளது; கண்ணகி சிலையும் உடைந்துள்ளது.கோவிலைச் சீரமைக்க, ‘மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளை’ சார்பில், கேரள உயர் நீதிமன்றத்தில், 2014ல், வழக்கு தொடரப்பட்டது. இதன்படி, கோவிலைச் சீரமைக்க, மத்திய தொல்லியல் துறை நிதி ஒதுக்கியது; மேலும், 39 லட்சம் ரூபாய் மதிப்பிலான பணிக்கு, ‘டெண்டர்’ விடப்பட்டுள்ளது. இரண்டு மாதத்திற்கு முன்பே, சீரமைப்பு பணி துவங்கும் என, அறிவிக்கப்பட்டது. ஆனால், பணிகள் நடக்கவில்லை. ‘சீரமைப்பு பணியை உடனடியாகத் துவக்க வேண்டும்’ என, கண்ணகி அறக்கட்டளையினர் வலியுறுத்தி உள்ளனர்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: