தமிழ் பிராமி எழுத்துக்கு உயிர்கொடுத்த ஐராவதம் மகாதேவன் மறைவு!

தமிழ் பிராமி எழுத்துக்கு உயிர்கொடுத்த ஐராவதம் மகாதேவன் மறைவு!

தமிழ் பிராமி எழுத்துக்கு உயிர்கொடுத்த ஐராவதம் மகாதேவன் மறைவு!

சிந்து சமவெளி வரலாறு, தமிழ் மொழியின் தொன்மை குறித்து விஞ்ஞானபூர்வமாக ஆய்வுகளை நடத்தி, தமிழுக்கும், தமிழர்களுக்கும் பெருமை சேர்த்த கல்வெட்டியியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன். தனக்கு கிடைத்த வெளிநாட்டு வேலைவாய்ப்பை துறந்து, தமிழ்மொழி குறித்த ஆய்வுகளை நடத்துவதற்காக 1953-ல் இந்தியாவிலேயே தனது வேலையை அமைத்துக் கொண்டவர்.

இந்திய ஆட்சிப்பணி அதிகாரி, தினமணி பத்திரிகையின் ஆசிரியர், கல்வெட்டியியல் அறிஞர், வரலாறு ஆய்வாளர் என பன்முகத்தன்மை கொண்டவராக இருந்தவர் ஐராவதம் மகாதேவன்.

சுமார் 50 ஆண்டு காலம் நடத்திய ஆய்வுகளின் அடிப்படையில், சிந்துசமவெளிக் குறியீடுகளில் இருப்பவை தொல் திராவிட எழுத்துரு வடிவங்கள் என்று அறிவித்தார். அதேபோல, பல ஆண்டு கால கல்வெட்டியியல் ஆய்வுகளின் அடிப்படையில், கல்வெட்டுகளில் உள்ள தமிழ் எழுத்துருக்களை, பிராமி எழுத்துக்கள் என்று சொல்லாமல், தமிழ் பிராமி எழுத்துக்கள் என்றே சொல்லவேண்டும் என்ற கருத்தை நிறுவியவர்.

சிந்து சமவெளி ஆராய்ச்சி மற்றும் தொல் தமிழ் கல்வெட்டுகள் ஆகிய துறைகளில் ஐராவதம் மகாதேவனின் பங்களிப்பு அளப்பரியது.

”ஆராய்ச்சிகள் நடத்தும்போது, அதன் தீர்வுகளை நேர்மையாக எதிர்கொள்ளவேண்டும் என்ற கருத்துப்படி வாழ்ந்தவர் மகாதேவன். கிடைத்த தரவுகளுக்கு உண்மையாக இருந்தவர். கணினி பயன்பாடு குறித்து பலரும் அறிந்திராத காலத்தில், 1977ல், சிந்துசமவெளி குறியீடுகளின் எழுத்துக்கள் மற்றும் பொறிப்புகளை அட்டவணைப்படுத்தியவர்.

”உலகதமிழ் மாநாடுகளில் பல ஆய்வுக்கட்டுரைகளை சமர்ப்பித்ததோடு, சிந்துசமவெளி குறியீடுகளுக்கும், பண்டைத்தமிழ்ச் சொற்களுக்கும் இருக்கும் தொடர்பை நிறுவி திராவிட கருதுகோளுக்கு வலுசேர்த்தவர் மகாதேவன்.

பத்மஸ்ரீ விருது, தமிழக அரசின் தொல்காப்பியர் விருது உள்ளிட்ட விருதுகளை பெற்ற மகாதேவன் சிந்து சமவெளி ஆய்வு மையம் ஒன்றையும் நிறுவியுள்ளார்.

தமிழக வரலாற்றை படிக்கும் ஒவ்வொரு மாணவனுக்கும் ஐராவதம் மகாதேவனின் புத்தகங்கள் மிகவும் முக்கியமானவை என்றும் அவரது ஆய்வுகள் கல்வெட்டியியல் துறை, பாடங்களில் இடம்பெற்றுள்ளன.

”கல்வெட்டுகளில் காணப்படும் எழுத்துருக்களை ஆய்வு செய்த ஐராவதம் மகாதேவன், தமிழ் பிராமி எழுத்துக்களுக்கான காலம் மூன்றாம் நூற்றாண்டு என்று நிறுவியுள்ளார். இதுவரை கிடைத்த சான்றுகளைக் கொண்டு அவர் நிறுவிய கால அளவு பல ஆராய்ச்சியாளர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. புதிதாக பிராமி எழுத்துக்கள் அடங்கிய கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டால், அதன் காலத்தை துல்லியமாக அறிய மகாதேவனைத்தான் தொடர்பு கொள்ளவேண்டும், அவரது முடிவு இறுதியானதாக இருக்கும் என்ற நிலை இருந்தது. உலகம் முழுவதும் உள்ள வரலாறு ஆய்வாளர்கள் மகாதேவனின் தமிழ் பிராமி குறித்த ஆய்வு முடிவை ஏற்றுக்கொண்டுள்ளனர்.

அவர் தனது 88-வது வயதில் (26-11-2018) வயது மூப்பு காரணமாக சென்னையில் காலமானார். அவரது இழப்புக்கு உலகம் முழுவதும் உள்ள பல தமிழ் அமைப்புகள் வருத்தம் தெரிவித்துள்ளன.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: