‘கீழடி அருகே தொல்லியல் தோட்டம்’- தொல்லியல் ஆர்வலரின் புதிய முயற்சி!

‘கீழடி அருகே தொல்லியல் தோட்டம்’- தொல்லியல் ஆர்வலரின் புதிய முயற்சி!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை அடுத்த கீழடியில், கடந்த 5 ஆண்டுகளாகத் தொல்லியல்துறை ஆய்வு நடத்தியதில் 2,600 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழர்களின் நாகரிக வாழ்க்கையை எடுத்துக்காட்டும் ஆயிரக்கணக்கான பொருள்கள் எடுக்கப்பட்டன.

இவற்றைப் பொதுமக்கள் எப்போதும் பார்க்கும் வகையில் அருங்காட்சியகம் அமைக்க வேண்டுமென்று பல்வேறு தலைவர்களும் கோரிக்கை வைத்து வந்த நிலையில், தற்போது கீழடி அகழாய்வுத் தொல்பொருள்கள் கண்காட்சி திறந்து வைக்கப்பட்டது. மதுரையில் அமைந்துள்ள உலகத் தமிழ்ச் சங்க வளாகத்தில் இக்க‌ண்காட்சி தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ளது.

இதில் சுடுமண் பானைகள், எலும்பு முனைகள், உலோக ஆயுதம், தங்கத்தில் செய்யப்பட்ட அணிகலன்கள், சுட்ட மண்பானை ஓடுகள், விளையாட்டுப் பொருள்கள், தாயக்கட்டைகள், தமிழ் எழுத்துகள் பொறிக்கப்பட்ட ஓடுகள் எனப் பல பொருள்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அப்பொருள்கள் பற்றிய விவரமும் வாசிப்பதற்காக வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலை அடுத்த இலந்தக்கரையில், தொல்லியல் ஆர்வலர் ஜெமினி ரமேஷ் தனது கிராமத்தில் கிடைத்த தொல்பொருள்களைக் கொண்டு ‘தொல்பொருள் தோட்டம்’ அமைத்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது : “இலந்தக்கரையில் கீழடியை ஒத்த பல பொருள்கள் கிடைத்து வருகின்றன. கடந்த 2 வருடங்களாக, காலை நேர நடைப்பயிற்சின்போது, எனது கிராமத்தில் ஏராளமான தொல்லியல் பொருள்களை எடுத்துள்ளேன். முக்கியமான பொருள்களை இராமநாதபுரம் மற்றும் காரைக்குடி அருங்காட்சியகத்திற்குக் கொடுத்துள்ளேன்.

மீதமுள்ள பொருள்களை நானே சேகரித்துப் பத்திரப்படுத்தி வருகிறேன். பழைமையான வடிகால் குழாய்கள், சுடுமண் பானைகள், கறுப்பு சிவப்பு ஓடுகள், அம்மிக்கல், ஆட்டுக்கல், பாசிகள் என மிகப் பழைமையான பொருள்கள் கிடைத்துள்ளன.

கீழடியின் தொடர்ச்சியாக இலந்தக்கரையும் அமையும். இங்கு, பொருள்கள் கிடைக்கும் இடங்கள் அனைத்தும் அரசு புறம்போக்கு நிலங்கள். எனவே, இங்கு அகழாய்வு செய்வது மிகவும் எளிமை. தொல்லியல்துறை இலந்தக்கரையிலும் அகழாய்வு நடத்தும் என நம்புகிறோம்.

அதனால், அதன் முக்கியத்துவத்தை உணர்த்தவும் விழிப்புணர்வு அடையச்செய்யவும், எனது 10 சென்ட் அளவுள்ள தோட்டத்தில் தொல்பொருள்களை அழகாக அடுக்கி வைத்துள்ளேன். இதைப் பொதுமக்களும் மாணவர்களும் பார்வையிட்டுச் செல்கின்றனர்” என்றார்.

  • விகடன்
Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: