தனித் தன்மையுடன் விளங்கும் திருக்குறளை வேத நூல்களுக்குள் அடக்க நினைக்கும் இந்துத்துவா வாதிகள்!

தனித் தன்மையுடன் விளங்கும் திருக்குறளை வேத நூல்களுக்குள் அடக்க நினைக்கும் இந்துத்துவா வாதிகள்!

தனித் தன்மையுடன் விளங்கும் திருக்குறளை வேத நூல்களுக்குள் அடக்க நினைக்கும் இந்துத்துவா வாதிகள்!

தனித் தன்மையுடன் விளங்கும் திருக்குறளை வேத நூல்களுக்குள் அடக்க நினைக்கும் இந்துத்துவா வாதிகள்!

கண்ணிரண்டும் விற்று (திரு. நாகசாமி அவர்களின் ‘Thirukkural An Abridgement of Sastras’ என்னும் நூலுக்கான எனது எதிர் வினை)…- முனைவர் சொ. சாந்தலிங்கம். மதுரை


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்.


அண்மையில் இந்திய அரசு தமிழ்நாட்டில் உள்ள ஆறுபேருக்கு பத்ம விருதுளை வழங்கிச் சிறப்புச் செய்துள்ளது. குறிப்பாக இசைஞானி இளையராசாவுக்கு பத்ம விபூசண் விருது வழங்கி அரசு தன் கௌரவத்தை உயர்த்திக் கொண்டுள்ளது. அடுத்து முன்னாள் தொல்லியல் துறை இயக்குநர் திருவாளர் இரா. நாகசாமி அவர்களுக்குப் பத்ம பூசண் விருது வழங்கப்பட்டுள்ளது. எனது ஆசிரியர்களில் ஒருவர் என்ற முறையிலும், தொல்லியலைத் தமிழகத்தில் பட்டி தொட்டியெல்லாம் கொண்டு சென்றவர் என்ற வகையிலும் எனது மகிழ்ச்சியையும், வாழ்த்துக்களையும் முதலில் அவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆனால் இந்த விருதை வாங்குவதற்குத் திருவாளர் நாகசாமி அவர்கள் கொடுத்த விலை என்ன என்பது தான் தமிழ்நாட்டில் உள்ள பல நடுநிலை ஆய்வாளர்கள் மத்தியில் உலவி வரும் கேள்வியாகும். இவ்விருது இவருக்கு வழங்கப்பட்டது குறித்துச் சமுக வலைத்தளங்களிலும் விமர்சனங்கள் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகின்றன.

தனித் தன்மையுடன் விளங்கும் திருக்குறளை வேத நூல்களுக்குள் அடக்க நினைக்கும் இந்துத்துவா வாதிகள்!

தனித் தன்மையுடன் விளங்கும் திருக்குறளை வேத நூல்களுக்குள் அடக்க நினைக்கும் இந்துத்துவா வாதிகள்!

சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இவர் தமிழ் மொழியில் உள்ள தொல்காப்பியம், சிலப்பதிகாரம் போன்ற இலக்கண, இலக்கிய நூல்கள் எல்லாம் வடமொழியிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவை என்ற கருத்தில் ‘Mirror of Tamil and Sanskrit’ என்ற ஆங்கில நூல் ஒன்றை வெளியிட்டார். குறிப்பாக, பரதரின் நாட்டிய சாஸ்திரத்திலிருந்து பெறப்பட்டவை இவ்விரண்டு நூல்களும் என்பது அவரது முடிவாக இருந்தது. அதுபோல் தமிழ் மொழிக்கென்று எழுதப் படும் எழுத்துக்களும் வடபிராமியிலிருந்து பெறப்பட்டவை; அதுவும் கி.மு. முதல் நூற்றாண்டில் தான் அவை தமிழகத்தில் வழக்கத்திற்கு வந்தன என்றும் எழுதினார். இம்முடிபுகள் தமிழறிஞர்கள் மத்தியில் பல அதிர்வலைகளை எற்படுத்தின. முனைவர் தமிழண்ணல், முனைவர் நடன காசிநாதன்; முனைவர். க. நெடுஞ்செழியன், போன்றோர் இவருக்கு எதிரான கருத்துக்களை எழுதி நூலாக வெளியிட்டனர். பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையத்தின் சார்பில் தேவ. பேரின்பன் அவர்கள் எழுதிய ‘தமிழும் சமஸ்கிருதமும் (மெய்யும் பொய்யும்)’ எனும் தலைப்பில் தக்க மறுப்பு நூல் ஒன்றும் வெளியிடப்பட்டது. இவ்வாறான எதிர்வினைகளின் போது பேராசிரியர் க. நெடுஞ்செழியன், தாம் எழுதிய “நாகசாமியின் நாசவேலை” என்னும் நூலில், திரு. நாகசாமி அவர்கள் எதோ ஒரு பெரிய விருதை எதிர்நோக்கி இத்தகைய ஆய்வு முடிவுகளை வெளியிடுகிறார் என்று கருத்துத் தெரிவித்திருந்தார்; அவரது யூகம் இன்று உண்மையாகியுள்ளது. தமிழுக்குத் தனித்தன்மையில்லை என்றும் தமிழ் இலக்கியம் அனைத்தும் வடமொழி நூற்களின் தழுவல் என்றும் அவர் கூறியதற்கு இன்று உரிய விருது அவருக்குக் கிடைத்துள்ளது.

அது மட்டுமல்ல இவ்விருதுக்காக அண்மையில் மேலும் ஒரு நூலை ஆங்கிலத்தில் அவர் வெளியிட்டுள்ளார். ‘Thirukkural – An Abridgement of Sastras’ என்பது இந்நூலின் தலைப்பு. டிசம்பர் 2017 இல் இந்நூல் வெளிவந்துள்ளது. இந்நூலில் முதல் பக்கத்திலேயே மறைந்த காஞ்சி மடத்தின் பெரியவரின் படம் இடம் பெற்றுள்ளது.

தனித் தன்மையுடன் விளங்கும் திருக்குறளை வேத நூல்களுக்குள் அடக்க நினைக்கும் இந்துத்துவா வாதிகள்!

தனித் தன்மையுடன் விளங்கும் திருக்குறளை வேத நூல்களுக்குள் அடக்க நினைக்கும் இந்துத்துவா வாதிகள்!

உலகப் பொதுமறையைச் சிமிழுக்குள் அடக்கப்பார்க்கும் இந்நூலின் உள்ளடக்கத்தைப் பற்றி மட்டுமே நாம் கவலைப் பட வேண்டியுள்ளது. இந்நூலில் திரு நாகசாமி அவர்கள் முன்வைக்கும் கருத்துக்களுக்கு ஒவ்வொன்றாக நமது பதில் உரையைக் காண்போம்.
1) முன்னுரையில் அவர் கூறுவது – திருவள்ளுர் புதிய புரட்சிகரமான கோணத்தில் தர்மசாஸ்திரம், அர்த்த சாஸ்திரம், நாட்ய சாஸ்திரம், காம சாத்திரம் ஆகிய இந்து வேதமரபின் நூல்களை மேற்கோள் காட்டி ஆய்வு செய்யப்படுகிறார்.
2) வள்ளுவர் தனது நூலை நால் வருண முறையை அடிப்படையாக வைத்தே எழுதியுள்ளார்.
3) பிராமணர்களை வள்ளுவர் உயர்ந்த நிலையில் வைத்துப் போற்றுகிறார்.

நமது விடை:

திருவள்ளுவரை திரு நாகசாமி அவர்கள் புரட்சிகரமான கோணத்தில் அணுகுகிறாராம். இந்து வேதமரபின் நூல்களான தர்மசாஸ்திரம், அர்த்தசாஸ்திரம், நாட்டியசாஸ்திரம், காம சாத்திரம் ஆகிய நூல்களை மேற்கோள்காட்டி ஆராய்கிறாராம். வள்ளுவர் தனது நூலை நால் வருண முறையை அடிப்படையாக வைத்தே எழுதியுள்ளார் என்பது நாகசாமியின் முன்னுரையிலேயே சொல்லப்பட்டுள்ளது.

இந்தக்கருத்துக்கு நாம் அதிகமான சிரமம் எடுத்து விடையளிக்க வேண்டிய தேவையே இல்லை. திருவள்ளுவ மாலையில் உள்ள ஒரு பாடல் போதும்.

“வள்ளுவர் செய் திருக்குறளை மருவற நன்குணர்ந்தோர்கள்
உள்ளுவரோ மநு ஆதி ஒருகுலத்துக்கு ஒரு நீதி”

இதன் மூலம் இப்பாடலை எழுதிய ஆசிரியர் வள்ளுவரை மநுவின் நூல் வழி எழுதியவராகக் கருதவில்லை என்பது வெளிப்படை. மநுவின் நூல் மனிதகுலத்தித்குரிய பொதுவான நூல் அல்ல. ஒரு குலத்துக்கு ஒரு நீதியைக் கற்பிக்கும் பாரபட்சமான நூல் என்பது விளங்கும். இதன் மூலம் நாகசாமி குறளை மருவற உணரவில்லை என்பதும் விளங்கும்.

வள்ளுவர் நால்வருண முறையை எற்றுக் கொண்டவர். வேத நெறி முறைப்படி நூல் எழுதியவர்; என்றால் ரிக்வேதத்தின் ஒரு பகுதியான புருச சூக்தத்தில் தானே நால்வருணம் பேசப்படுகிறது. பிரம்மனின் முகம், மார்பு, தொடை, கால் வழியாக பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் பிறந்தனர் என்கிறது. இதனைத் திருவள்ளுவர் ஏற்றுக் கொண்டா நூல் எழுதினார். இந்த உங்கள் சொத்தை வாதத்திற்கு ஒற்றைக் குறளில் திருவள்ளுவர் சம்மட்டி அடி கொடுத்துள்ளார்.

தனித் தன்மையுடன் விளங்கும் திருக்குறளை வேத நூல்களுக்குள் அடக்க நினைக்கும் இந்துத்துவா வாதிகள்!

தனித் தன்மையுடன் விளங்கும் திருக்குறளை வேத நூல்களுக்குள் அடக்க நினைக்கும் இந்துத்துவா வாதிகள்!

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்’ (குறள் 290)

இந்த ஒரு குறள் போதும். உங்கள் நூலில் நீங்கள் முட்டி மோதித் திணிக்க நினைக்கும் கருத்துக்கு வள்ளுவர் கொடுத்த விடை. ஆனால் எத்தனையோ குறட்பாக்களை உங்கள் நூலில் எடுத்தாண்டுள்ள உங்களுக்கு இந்தக் குறள் மட்டும் கண்ணில் படவில்லையா? பட்டிருக்கும். அதைப்பயன்படுத்தினால் இந்த நூலுக்கு வேலை இல்லை என்பது உங்களுக்கும் தெரியும். எனவே அந்தக் குறளை எடுத்தாளவில்லை. அது உங்களுக்கே உள்ள தந்திரம். எப்போதுமே உங்கள் ஆய்வில் நேர்மை (Research honesty) இராது என்பது தமிழ்நாட்டார் அனைரும் அறிந்ததே. அதே நிலையைத்தான் இந்த நூலிலும் காண்கிறோம்.

வள்ளுவர் வேத மரபை மெய்யாக ஏற்றுக்கொண்டவர்:

மற்றொரு குறிப்பு வள்ளுவர் வேத மரபை அப்படியே மெய்யாக ஏற்றுக்கொண்டவர் என்பதாகும் (பக் 26). அவ்வாறெனில் வேத வழிப்பட்ட சடங்குகளை, உங்கள் கூற்றுப்படியே யாகங்களை ஏற்றுக் கொண்டவர் என்றால், நீங்களே உங்கள் நூலில் எடுத்தாண்டுள்ள இன்னொரு குறள், இதோ,

அவி சொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர் செகுத்து உண்ணாமை நன்று (குறள் 259)

இக்குறளின் பொருள் என்ன? வேள்விகளை வள்ளுவர் ஏற்றுக் கொண்டவரா நிராகரித்தவரா? இது இந்து மதக் கருத்தா சமண மதக் கருத்தா. திருக்குறள் சமணநூல் என்பதற்கு எவ்விதச் சான்றும் இல்லை (ப. 204) என்று கூறும் தங்கள் ஆய்வில் மேற் சுட்டிய குறள் படவில்லையா? அல்லது கொல்லாமை என்னும் ஓர் அதிகாரத்தையே மறந்துவிட்டீர்களா?

கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிரும் தொழும்’ (குறள் 260)
என்றாரே வள்ளுவர்; இது சமணக் கொள்கை இல்லையா. ஆயிரக்கணக்கான ஆடுகளையும் மாடுகளையும் வேத வேள்வியில் கொன்று குவித்த அந்த இந்து அறத்தை, நெறியை, யாகமரபை வள்ளுவர் ஏற்றுக் கொண்டவரா?

வள்ளுவரின் முதல் குறள்,

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு’

என்பது இது கூடத் தொல்காப்பியரிடமிருந்து வள்ளுவர் எடுத்தாண்டது எனக் கருதலாம். அவர்தான் ‘எழுத்தெனப்படுவ அகரமுதல’ என்றார். ஆனால் தொல்காப்பியமே உங்கள் கூற்றுப்படி வடமொழியின் வழிநூலாகி விட்டதே. ஆனால் ஒரு விளக்கம் கொடுத்துள்ளீர்களே! மகா அற்புதம்!

அகர முதல’ என்பது வடமொழியில் ‘அக்சராப்யாசமாம்’. எவ்வளவு பெரிய கண்டுபிடிப்பு!

தனித் தன்மையுடன் விளங்கும் திருக்குறளை வேத நூல்களுக்குள் அடக்க நினைக்கும் இந்துத்துவா வாதிகள்!

தனித் தன்மையுடன் விளங்கும் திருக்குறளை வேத நூல்களுக்குள் அடக்க நினைக்கும் இந்துத்துவா வாதிகள்!

தொல்காப்பியம், சிலப்பதிகாரம் ஆகிய தமிழ் நூல்கள் பரதரின் நாட்டிய சாஸ்திரத்திலிருந்து வந்தவை. திருக்குறளும் இவ்வகையில் வடமொழியின் வழிநூலே. திருவள்ளுவரின் காலத்தை கி.மு. முதல் நூற்றாண்டு அல்லது கி.பி. 2ம் நூற்றாண்டு காலத்துக்குள் அடக்கலாம் (ப. 25). ஆனால் வேத உபநிசத்துக்கள் 5000 ஆண்டுகளுக்கு முற்பட்டவை. மநுவின் நூல் காலத்தால் மிக முற்பட்டது. வேதகாலத்திற்குச் சமமானது (ப. 28)

நமதுவிடை:

தொல்லியல் அறிஞர் உரிய சான்றுகளோடு எழுதுவார் என்று நினைத்தோம். ஆனால் எல்லாம் யூகத்திலேயே எழுதுகிறார். 5000 ஆண்டுகளுக்கு முன்வேதங்கள் எந்த மொழியில் பாடப்பட்டன. அப்போது சமஸ்கிருதம் இருந்ததா? சமஸ்கிருதம் எப்போது உருவானது? எங்கிருந்து அதற்குரிய எழுத்துக்களைப் பெற்றது? ஐந்தாயிரம் ஆண்டுகளாக ஒலிக்குறிப்புகளையே பரம்பரையாக ஓதி வந்தவர்கள் தீடீரென்று சமஸ்கிருதச் சொற்களுக்கு எப்போது எப்படி மாற்றினர்? பிராகிருதம், பாலி, அர்த்தமாகதி, போன்ற பல மொழிகள் எங்கிருந்து எழுத்தைப் பெற்றன. அவற்றிற்கு பிந்தியதா, முந்தியதா சமஸ்கிருதம்? இவற்றுக்கெல்லாம் விடையிருக்கிறதா உங்களிடம்?

மநு ஆதியானவர் என்கிறீர்கள். ஆனால் தமிழக வரலாற்றறிஞர் கே.கே. பிள்ளை 14 மநுக்கள் வாழ்நததாகவும் அதில் கடைசியானவர் கி.பி. 2ம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் என்றும் கூறுகிறாரே? உங்கள் கருத்து என்ன? நீங்கள் சொல்லும் மநுதர்மசாஸ்திரத்தின் காலம் என்ன? அதை வள்ளுவர் எவ்வாறு வடமொழியில் படித்தார்?

இவ்வாறு கேட்டால் நீங்கள் வள்ளுவரின் தந்தை ஒரு பிராமணன் என்பீர்கள். அய்யா, அது வெறும் பழங்கதை (அலவா). வரலாறு எழுதுவதற்கு பழங்கதைகள் பயன்படாது என்பது உங்களுக்குத் தெரியும். அறிவியல் பூர்வமான ஆய்வியல் அணுகுமுறையை நீங்கள் கையாண்டால் நால் வருணப் பிறப்பையே கேலிக்குரியதாக நீங்கள் கொள்வீர்கள்.

அந்தணர் யார்? பிராமணர் யார்?

அறவாழி அந்தணன்’ என்னும் சொல் சக்கரம் ஏந்திய விஷ்ணுவைக் குறிக்கும். இவ்வந்தணன் என்பவன் பிராமணனே. அவன் காலில் அடைக்கலம் ஆவதே பிறவிக் கடலைக் கடக்கும் வழி என்று கூறுகிறீர்கள் (ப. 9). சக்கரம் ஏந்தியவன் எல்லாம் விஷ்ணு அல்ல. அசோகன், புத்தரின் தர்மச் சக்கரத்தையே வடித்து வைத்தான். இன்னொரு புதுமையான வாதம். அந்தணன் என்றால் பிராமணன் என்பது. எல்லா அந்தணர்களும் பிராமணர்கள் அல்ல என்பது திருவள்ளுவரின் கூற்று. அதனால் தான்,

அந்தணர் என்போர் அறவோர் மற்றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுகலான் – குறள், 30

என்றார் வள்ளுவர். பிராமணர் என்றாலும் அந்தணர் என்றாலும் ஒன்று தான். இவர்கள் இரு பிரிவினரும் இந்துக்கள் தான் என்பது நாகசாமியின் கருத்து. மேலும் சமஸ்கிருதம் பேசுபவர்கள் எல்லாம் இந்துக்கள். பிராமணர்கள் சமண, பௌத்த, ஆசிவக சமயத்தினர் வேதநெறிப்படியே வாழ்ந்தனர் (ப. 26). இப்படி எல்லோரையும் பொதுமைப்படுத்தி அனைவரும் பிராமணர்களே, இந்துக்களே என்பது அவரது கருத்து. அது எப்படி பொருந்தும். இன்றும் லட்சக் கணக்கான சமண சமூகத்தினர் சமஸ்கிருத மொழியில் தங்கள் மதச் சடங்குகளைச் செய்கின்றனர். அவர்களுடைய புரோகிதர்களை உபாத்யாயர் என்கின்றனர். அவர்கள் எல்லாம் இந்துக்களா? அவர்களுக் கென்று தனிவாழ்க்கை நெறியைக் கொண்டிருக்கிறார்களே? அதற்கு என்ன பொருள்?

எத்தனையோ பிராமணர்கள் இந்து மதத்தின் மொழி, இன மேலாதிக்கத்தை உடைத்து வெளியே வந்துள்ளார்களே. நீங்கள் அறியாததா? 12ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் வாழ்ந்த பசவண்ணா என்னும் பிராமணன் உங்கள் இந்து தர்மத்தின் அதர்மங்களைக் கண்டு வெகுண்டு மக்கள் மொழியில் பேசு, சாமான்யனைச் சகோதரனாகக் கருது, பெண்களுக்கு முக்கிய இடம் கொடு என்று போர்க்குரல் கொடுத்து ‘வீரசைவம்’ என்னும் புதிய மார்க்கம் கண்டானே, மறக்கமுடியுமா?

அதே காலத்தில் உங்கள் இராமாநுஜன் சாத்தாத வைணவர் என்று உழைக்கும் மக்களைக் கோயில் பணிக்கு ஈடுபடுத்தி புரட்சி செய்து உங்களின் விரோதத்தைச் சம்பாதித்துக் கொண்டவர் தானே? இவர்களுக்கெல்லாம் முன்பாகவே இந்து தர்மத்தை, சாஸ்திரத்தை வேதவேள்வியை எதிர்த்துக் கலகம் செய்தவர் திருவள்ளுவர்.

மநுவின் நூல் விருப்பு வெறுப்பற்ற நியாயமான நூல். ஆனால் கொள்கையற்ற அரசியல் வாதிகளால் அது திரித்துக் கூறப்படுகிறது (ப. 32) சாதிய அமைப்பு தற்காலத்தில் பலர் குற்றம் சாட்டுவது போல் பிராமணர்களால் உருவாக்கப்பட்டதல்ல. தொழில் அடிப்படையில் நெடுங்காலத்திற்கு முன்னரே ஏற்பட்டதே சாதிய முறை (ப. 33)

நமது விடை:

இதை ஏற்படுத்தியவர்கள் யார் என்பதைத் தான் நாங்கள் கேட்கிறோம் மநுவின் நூல் தானே பிராமணன் பிரம்மனின் முகத்தில் பிறந்தவன் என்றது. ஓதலும் ஓதுவித்தலும் அவனது தொழில் என்றது. சூத்திரனும் பெண்களும் வேத ஒலிகளைக் கேட்டால் காதுகளில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றச் சொன்னது? நாலாம் வர்ணத்தவனைச் சூத்திரன் என்றும், பஞ்சமன் என்றும் பாகுபடுத்தியது யார்?

ஆனால் மநுவகுத்த பிராமணர்குரிய நியதிகளைப் பிராமணர்கள் என்று கூறிக் கொண்ட வைதீக பிராமணர்களே பின்பற்றவில்லையே? வரலாறு நெடுகிலும் பிராமண வாழ்வியல் முறை முறியடிக்கப்பட்டுள்ளதே. தெரியாதா? சத்திரிய வேலை முறை என்று உங்களால் பாகுபடுத்தப்பட்ட போர்முறையில் பிராமணர்கள் நுழைந்தது எப்படி? கேட்டால் அது தனுர் வேதம் என்பீர்கள்.

துரோணர் கேவலமான வழியில் பாரத்வாசனுக்குப் பிறந்தவர் (சான்று பல்லவர் செப்பேடு) போர்க் கலை கற்று மநுவின் நீதியை முறியடித்தவர். பிரம்ச்சத்திரியர் என்று கலப்புப் பெயர் வேறு. அதேவழியில் பல்லவன் முதலாம் நரசிம்மன் காலத்தில் சிறுத்தொண்டன் என்ற பரஞ்சோதி. போர்ப்படைத்தளபதி ஒரு பிராமணன்தானே.

இராசராசனின் தளபதி கிருஷ்ணன் ராமனான மும்முடிச்சோழ பிரம்மாராயன் இவர்களெல்லாம் மநுநெறிப்படி வாழ்ந்து பிராமணியத்தைக் காப்பாற்றியவர்களா?

திருச்சுழியிலே பாண்டியர் காலத்தில் ஒரு பிராமணன் வணிகம் செய்துள்ளதாகச் சான்று உள்ளது (S.I.I. XIV). மநுவும், அவன் சாஸ்திரமும், நியதியும் என்றோ பிராமணர்களாலேயே அழித்தொழிக்கப்பட்டுவிட்டதே.

பிராமணர்களின் உயர்ந்த நிலை:

சமூகத்தில் தர்மத்தைக் காப்பதற்காகவே பிராமணர்கள் உருவாக்கப்பட்டார்கள் என்கிறது தர்மசாஸ்திரங்கள். எனவே அவர்கள் நீதிமன்ற அலுவலர்களாகத் தர்மத்தைக்காக்கும் பொருட்டு அமர்த்தப்பட்டார்கள் (ப. 33). விடுதலைக்குப் பிறகு ஆட்சியாளர்களால் பிராமணர்கள் வில்லன்களாகச் சித்தரிக்கப்பட்டார்கள். குறிப்பாகத் தமிழகத்தில் காது கொடுத்துக் கேட்க முடியாத வசை மொழிகளும் தாக்குதல்களும் பிராமணர்கள் மேல் நடத்தப்பட்டன. இவர்கள் திருக்குறளைப் போதிக்கின்றனர். ஆனால் செயலில் எதிர்மாறாக உள்ளனர்’ (ப. 12) என்பது நாகசாமி அவர்களின் கூற்று.

நமது விடை:

பிராமணர்கள் சமூகத்தில் தர்மத்தைக் காப்பவர்களாம். எப்படி இதுவரைக் காத்திருக்கிறார்கள் தெரியுமா?

1. ஒரு பிராமணன் சமணர் பெண்களைக் கற்பழிக்க ஆண்டவனிடம் ஆசி வேண்டினான்.
2. கோயில் சிலைகளை நல்லவிலைக்கு விற்றிருக்கிறார்கள்
3. கோயில் கருவறையிலேயே பக்தைகளைக் கற்பழித்திருக்கிறார்கள்
4. கோயிலுக் குள்ளேயே ஒரு பிராமணனையே கொன்றிருக்கிறார்கள்
5. கோயில் செல்வத்தைக் கொள்ளை அடித்துள்ளார்கள் (எடு) குடுமியான் மலைக்கல்வெட்டு
6. திருக்குறுங்குடியில் சிவன்கோயிலை இடித்துள்ளார்கள்.
7. நடன மங்கையருடன், திரை நட்சத்திரங்களுடன் கள்ள உறவு கொண்டிருக்கிறார்கள் (அனுராதா ரமணன் சாட்சி)

இப்படியாகத்தான சமூகத்தில் தர்மத்தைக் காப்பதற்காக பிராமணர்களை முதலில் பிரம்மன் படைத்தான் என்று தர்மசாஸ்திரங்கள் கூறுகின்றன. இதைத்தான் திருவள்ளுவர் வழிமொழிந்துள்ளாராம்.

இத்தகைய பிராமணர்களைத்தான் நீதிபதிகளாக அமர்த்தினார்களாம். அவர்கள் தர்மசாஸ்திரம் கற்றவர்களாக இருக்க வேண்டுமாம். இதற்குச் சான்றாக மானூர்க் கல்வெட்டைக் காட்டுகிறார். ஐயா, அது முற்றமுழுக்க பிராமணர் மஹாசபை. அங்கு வேறுயார் இடம் பெறுவர். அதுமட்டுமல்ல தர்ம சாஸ்திரக் கல்வி மட்டும் போதாது சொத்துடமையும் வலியுறுத்தப்பட்டது. நீதிபதிகளுக்கு மட்டுமல்ல. வழக்காடுவதற்கே வழக்கறிஞர்களுக்கே! இதுதான் நீங்கள் வகுத்த விதி (ஸ்ராவணைபுகுவார்). இதனைத் தமிழகத்திற்குப் பொதுவானதாகக் கருதக் கூடாது.

ஜீயர்கள் கூட வேதம், தர்மசாஸ்திரம் படித்தவர்கள்தான்; ஆனால் ஏன் திருக்குறுங்குடியிலே சிவன் கோயிலை இடித்து வெளியே எறிந்தார்கள். இதுவும் ஒருவகை தர்மத்தின் காவலா?

குறித்த காலத்தில் இல்லறத்தார்க்கு ஒரு மகன் பிறக்காவிடில் புத்ராகாமேட்டி யாகம் செய்து புத்திரனைப் பெற வேண்டும் என்கிறார் சங்கராச்சாரியார் (ப 186). ஆனால் சங்கரர் பெயராலும், இந்து மிசன் பெயராலும் ஏன் மருத்துவமனை நடத்துகின்றார்கள். யாகம் மட்டும் ஊர் தோறும் வளர்க்க வேண்டியது தானே. வள்ளுவர் கூறும் ‘பூசனை’ என்பதுவே இந்து முறையான வழிபாடே வேறு எதுவும் இல்லை என்பது நாகசாமியின் கருத்து (ப. 70). அது ஒரு சார்பான பிராமணிய அல்லது நீங்கள் சொல்வது போல் இந்து முறைப்பட்ட பூசையாக இருக்கலாம். ஆனால் வள்ளுவர் அதைத்தான் கூறினார் என்பதற்கு என்ன ஆதாரம்?

தமிழர்களின் வழிபாடு வீரவழிபாடு, தாய்த் தெய்வ வழிபாடு, முன்னோர் வழிபாடு.

கல்லே பரவின் அல்லது நெல்லுகுத்துப்
பரவும் கடவுளும் இலவே’

என்பது தமிழர் பூசனை மரபு

பீலி சூட்டிய பிறங்கு நிலை நடுகல்லில் ஆட்டுக் குட்டிகளைப் பலி கொடுத்துப் பூசனை செய்வது தமிழர்மரபு. இதுவேத மரபு என்று ஏற்பீரா?

வள்ளுவர் மநு, கௌதமர், யாக்ஞ்வல்கியர் ஆகியோரின் தர்மசாஸ்திரங்களையே பொருட்பாலில் எடுத்தாண்டுள்ளார் (ப. 18). அவர் வடமொழியை நன்கு அறிந்தவர். வள்ளுவரின் குறள் அவரால் சுயமாக எழுதப்பட்டதா அல்லது சமஸ்கிருத நூலிலிருந்து கடன் பெற்றதா என்பதை இனிவரும் ஆய்வுகள் தான் உறுதிப்படுத்த வேண்டும் (ப. 123). இவ்வாறு சந்தேகம் கொள்பவர் ஏன் தனது நூலுக்கு குறள் தர்மசாஸ்திரங்களின் சுருக்கம் என்று பெயர் வைக்கவேண்டும். இது யாரை ஏமாற்ற?

தமிழ்மொழி சமஸ்கிருதச் செல்வாக்கின் காரணமாக மிகுந்த அழகும், மணமும் பெற்றதாம். (ப. 40) சமஸ்கிருதம் காரணமாக வள்ளுவர் புகழில் இமயத்தின் சிகரத்தில் இருக்கிறாராம் (ப 24) வள்ளுவரைப் புகழ்வதும் பெருமைப்படுத்துவதும் இந்திய வேத நெறிகளைப் புகழ்வதாகவே அமையும் (ப. 27) என்று கூறும் நாகசாமி பாரதியாரின் கூற்றையும் சுட்டிக்காட்டத் தவறவில்லை.

வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து
வான்புகழ் கொண்ட தமிழ் நாடு’ என்று தான் பாரதியார்பாடினர். மநுவைத் தந்தோ, யாக்ஞவல்கியனைத் தந்தோ, காளிதாசனைத் தந்தோ வான்புகழ் பெற்றதாகப்பாடவில்லையே.

அய்யா, பாரதியும் உங்களைப்போல் சமஸ்கிருதம் படித்தவன். இதற்கும் மேலாக பிரஞ்ச் படித்தவன். காவியங்கள் பலவும் படித்தவன். அவனும் பிராமணன். ‘பார்ப்பானை அய்யன் என்ற காலமும் போச்சே’ என்று முழங்கியவன். அவன் தமிழ்ப் புலவர்களை எப்படிப் பாடியுள்ளான்.

யாமறிந்தபுலவரிலே கம்பனைப் போல வள்ளுவன்போல், இளங்கோவைப் போல் பூமிதனில் யாங்கணுமே கண்டதில்லை”
யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்’ என்றெல்லாம் பாடியுள்ளார்.

இந்த வரிகளை நீங்களும் தானே படித்திருப்பீர்கள். அத்தகைய பாரதி யாமறிந்த புலவரிலே மநுவைபோல், கௌதமனைப் போல், பரதனைப் போல் யாக்ஞவல்கியனைப் போல் உலகில் கண்டதில்லை என்றல்லவா பாடியிருக்க வேண்டும். பாடவில்லையே. ஏன் அவனிடம் நேர்மையிருந்தது. உங்களிடம் அது இல்லை. எனவே உண்மை ஒளியும் இல்லை.

நால் வர்ணத்தார்க்கும் பிரம்மனே உரிய தொழில்களை உருவாக்கினான். தர்மங்கள் எல்லாம் அந்தணர் பொறுப்பில் இருந்தன. எனவே பிராமணன் முதலில் படைக்கப்பட்டான் (ப. 79)

கிருஷ்ணன் தான் நான்கு வர்ணங்களைத் தகுதி தொழில் அடிப் படையில் உருவாக்கினேன் என்று கூறுகிறான் (ப. 80)

இப்படி இரண்டு பக்கங்களில் (79,80) எவ்வளவு குழப்பமான செய்திகள் உங்கள் நூலில். வாதத்திற்காகவே இதனை ஏற்போமானாலும் கிருஷ்ணனோடு உடன் பிறந்தவனாக சமணத்தின் 22ஆம் தீர்த்தங்கரர் நேமிநாதர் பிறந்தார் என்று கூறப்படுகிறதே? அவர் பிராமணரா? இந்துவா? சமணரா? உங்கள் பதில் என்ன? பிராமணர்களைப் படைப்பதற்கு முன்பே தர்மங்கள் அந்தணர் பொறுப்பில் எப்படியிருக்க முடியும்?

இப்படி எத்தனை காலத்திற்குத்தான் புளுகு மூட்டைகளை அவிழ்த்துவிட்டு, அபத்தக் களஞ்சியங்களை நூலாக்கி உலவவிட்டு அதன் மூலம் பலன் பெறுவீர்கள்.

தொல்லியல் ஆய்வு என்பது ஒரு அறிவியல் பூர்வ ஆய்வு என்பது தாங்கள் அறியாததல்ல. அரை நூற்றாண்டு காலத்திற்கும மேல் அத்துறையில் உழைத்துவிட்டு எப்படி இந்த அளவிற்கு அறிவியலுக்குப் பொருந்தாத குப்பைகளை உயர்த்திப் பிடிக்க உந்தப்பட்டிருக்கிறீர்கள்? பரிதாபமாக இருக்கிறது அய்யா!

ஜி.யு. போப் கால்டுவெல், எல்லிஸ்துரை போன்றோர் தமிழ்மீதுள்ள காதலால் தமிழ் கற்கவில்லை. மதமாற்றம் செய்யவே தமிழ்கற்றனர். தமிழ் வெறியைத் தூண்டியவர் ஜி.யு. போப் (ப. 211 – 212) வாதத்திற்காக ஏற்றுக் கொள்வோம்.

சமஸ்கிருதம் படித்த மேலை நாட்டவர்கள் எல்லாம் படிப்பதற்கு முன்பாகவே (வில்லியம் ஜோன்ஸ் போன்றவர்கள்) அம்மொழியின் மீது காதல் கொண்டு படித்தார்களா? அவர்களும் இந்தியாவை ஆளுவதற்காகத்தானே படித்தார்கள். போப் தன்னை ஒரு தமிழ்மாணவன் என்று சொல்லிக் கொண்டாரே! தமிழ்நாட்டில் வாழும் நீங்கள் அப்படிச் சொல்லிக் கொள்ளத் துணிவுண்டா?

அடுத்து தமிழண்ணல் ஒரு பொய்யான தமிழர். என்னிடம் தொல்லெழுத்துக்கள் படித்த மாணவர். என்னை விமர்சித்தார் (ப. 172).

அய்யா அவர் உங்களிடம் தொல்லெழுத்தியல் படிக்கவரும் போதே முனைவர் பட்டம் பெற்ற பல்கலைக்கழகப் பேராசிரியர். 70களிலேயே பொற்கிழி பரிசு பெற்ற தமிழ்க் கவிஞார். நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ்ப் பேராசிரியர்களை உருவாக்கியவர். அவருக்கு தொல்லெழுத்தியல் கற்பித்தமைக்காக நீங்கள் தான் பெருமைப்படவேண்டுமே தவிர அவருக்குச் சிறுமையில்லை.

நேமிசந்திரர் என்னும் சமண ஆசாரியார் பிராமணர். காஞ்சி புரத்திலிருந்து கர்நாடகம் சென்றவர். பத்து தலைமுறைகளைச் சொல்கிறார் (ப. 203). நாகசாமியே ஒத்துக் கொண்டார் பிராமணர் எல்லோரும் இந்துக்கள் அல்லர். சமணர்களும் பத்துத் தலைமுறைகளாகத் தமிழகத்தில் இருந்தனர். பௌத்த மதத்திலும் பிராமணத் துறவிகள் இருந்தனர். எனவே தான் அசோகன் அனைத்துப் பிராமணர்களையும் மதிக்க வேண்டும் என்றான்.

திரு. நாகசாமி அவர்கள் ஓரோர் இடங்களில் இந்நூலில் தன்னையும் அறியாமல் உண்மைகளையும் எழுதியுள்ளார்.

உத்திரமேரூர்க் கல்வெட்டும் ஜெகஜீவன்ராமும்:

இந்திராகாந்தி அம்மையார் ஆட்சிக்காலத்தில் ஜெகஜீவன் ராம் என்னும் தலித் தலைவர் மத்திய அமைச்சராகப் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர். அவர் ஒருமுறை வருமான வரிகட்ட மறந்துவிட்டேன் என்று அறிவித்தார். பின்பு தேர்தலிலும் நின்றார். அந்த சமயத்தில் திரு. நாகசாமி அவர்கள் இந்து ஆங்கில நாளிதழில் ஒரு முழுப் பக்கக் கட்டுரை எழுதினார். தமிழகத்தில் உள்ள உத்திரமேரூரில் உள்ள சோழர் காலக் குடவோலை முறைக் கல்வெட்டைச் சுட்டிக் காட்டி இதில் கூறப்பட்டுள்ள விதிகளின் படி கணக்குக் காட்டாதவர்கள், கையூட்டுப் பெற்றவர்கள் தேர்தலில் நிற்கத் தகுதியற்றவர்கள் என்றும் ஆனால் இன்று மத்திய அமைச்சர் ஒருவரே இத்தகைய தவறைச் செய்து பின்னும் தேர்தலில் நிற்பது முறையா என்பதாக அக்கட்டுரையை எழுதியிருந்தார் தவறில்லை. ஆனால் இதே அளவுகோலை அவர் எல்லா அரசியல்வாதிகளிடத்திலும் பயன்படுத்தினாரா? அடுத்த சில ஆண்டுகளில் இந்திரா அம்மையாரே நகர்வாலா ஊழலில் சிக்கினார். அப்போதும் ஏதாவது ஒரு ஆங்கில நாளிதழில் இத்தகைய ஒரு கட்டுரையை நாகசாமி எழுதினாரா என்றால் இல்லை. அடுத்து அவர் மகன் பதவிக்கு வந்த போதும் இந்த விதிகளைச் சுட்டி எழுதினாரா என்றால் இல்லை. ஏனென்றால் ஜகஜீவன்ராம் தலித். இந்திராகாந்தி பிராமணர். இது தான் நாகசாமி அவர்களின் துலாக்கோலின் யோக்யதை.

அயோத்தி அகழாய்வும் அவரது பொய்யுரையும்:

அயோத்தியில் ராமர் கோயில் பிரச்னை கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்த காலம். பாபர்மசூதி இடிக்கப்படா முன்னர். மசூதி கட்டப்பட்டுள்ள இடத்தில் ராமர் கோயில் இருந்ததா இல்லையா என்பதை உறுதிசெய்வதற்காக மத்திய அரசின் தொல்லியல் துறை அவ்விடத்தில் அகழாய்வு செய்து முடிவுகளை வெளியிடாமல் அரசாங்கத்திடம் ஒப்படைத்திருந்தது. அது நீதிமன்ற விசாரணைக்கு உட்பட்டிருந்தது. அந்தக் காலகட்டத்தில் திரு. நாகசாமி அவர்கள் அகழாய்வுச்சான்றுகளைத் தான் பார்த்ததாகவும் அதன் அடிப்படையில் அவ்விடத்தில் ஒரு கோயில் இருந்தது என்றும் அப்போதைய தினமலர் நாளிதழில் பல நிழற்படங்களுடன் கட்டுரை ஒன்றை வெளியிட்டார்.

அயோத்தி அகழாய்வும் அதிர்ச்சி தரும் உண்மைகளும்’ என்று தலைப்பிட்டு அக்கட்டுரை தினமலர் நாளிதழில் வெளிவந்தது. இதே செயலை வேறு யாரேனும் செய்திருந்தால் நிலமையே வேறு ஆகியிருக்கும். அரசாங்கம் கைகட்டி வாய்பொத்தி இருந்திருக்காது. மேலே கூறப்பட்ட இரண்டு எடுத்துக் காட்டுகளும் திரு. நாகசாமி அவர்களின் உண்மையான சார்புத்தன்மையை அடையாளத்ததை உறுதிப்படுத்தவே எழுதப்பட்டன.

மொழி என்பது மனித சக்தியால் அவரவர் வாழும் பகுதியில் உருவாக்கப்பட்டது. தேவைக்கு ஏற்ப சூழல், உற்பத்திக் கருவிகள், உற்பத்தி உறவுகளுக்குத் தக மொழியில் வளம் சேரும். உலகில் பல மொழிகள் பல்லாயிரம் ஆண்டுகளாக வழக்கத்தில் உள்ளன. அவரவர் மொழியை அவரவர் காதலிக்கலாம். ஆராதிக்கலாம். ஆனால் ஒருமொழி இன்னொரு மொழி மீது ஆதிக்கம் செலுத்தக் கூடாது. உங்கள் மொழியைத் தேவபாடை என்று நீங்கள் கூறிக் கொள்ளலாம். ஆனால் எங்கள் தாய் மொழியை நீச பாசை என்று கூற எவனையும் அனுமதியோம்.

கோயில் கருவறையில் எங்களுக்குப் புரியாத மொழியில் வழிபடத் தயாராயிருக்கும் நீங்கள் எங்கள் மொழியில் நாங்கள் வழிபடத் தமிழில் பாடல் பாடக் கூட அனுமதிப்பதில்லை. ஆனால் இது தமிழ் நாடு. சமணப் பெண்களைக் கற்பழிக்கத் திருவுள்ளம் வேண்டியவனின் சிலையைக் கோயில்களில் இடம் பெறச் செய்பவர்கள் நீங்கள்.

மனிதர் எவரும் பூசாரிகளாகலாம் என்பதை ஏற்க மறுப்பவர்கள் பிராமணர்கள். அதற்கும் சாவுமணி அடித்த கேரளத்துத் தோழர்களைக் கொண்டாடுபவர்கள் நாங்கள்.

பார்ப்பனர்களுக்கு எப்போதும் நாங்கள் எதிரிகள் இல்லை. நான் ஒரு சர்வதேசியம் பேசும் பொதுவுடமை இயக்கத்தில் பயின்றவன். மனிதகுலம் அனைத்தும் ஒரே குலம். அதுவும் உழைக்கும் குலம் என்னும் கொள்கை உறுதி கொண்டவன். எத்தனையோ பிராமணர்கள், பூணூலைக் கழற்றி வீசிவிட்டு உழைக்கும் மக்களுக்காக வாழ்ந்து மறைந்தார்கள். அவர்களை வணங்குகிறேன். வாழ்வின் இறுதிக்காலகட்டத்தில் கூட நியாயம் பேசி உயிர் நீத்தஞானி சங்கரனை நினைவு கூர்கிறேன்.

தமிழர் என்பது தனித் தேசிய இனம். அவர்களது மொழி அவர்களது உயிர் மூச்சு.

தமிழன் என்றோர் இனமுண்டு
தனியே அவர்க்கோர்குண முண்டு
அமிழ்தம் அவர்தம் மொழியாகும்
அதுவே எங்கள் வழியாகும்’.

என்ற பாடலுக்கேற்ப எதனையும், எவரையும் சாராத மொழி தமிழ்மொழி.

எதிரிலே இருப்பவன் அண்ணனோ தம்பியோ கவலைப்படாதே கணையை ஏறி கதையை முடி’ என்று கற்றுக் கொடுத்தது உங்கள் கீதை. ஆனால் போரில்லா ஓர் உலகம் வேண்டி அவ்வைக்கிழவியைத் தூதனுப்பிப் போரைத் தவிர்த்தது தமிழர் பாதை. இரண்டும் வெவ்வேறானவை. ஒன்று சேர முடியாது.

இனியும் அறிவியலுக்குச் சற்றும் பொருந்தாத வேத, உபநிசத இதிகாச, புராணக் குப்பைகளையே உயர்த்திப் பிடிக்கும் ஆய்வுகளைப் புறந்தள்ளுங்கள். கண்ணிரண்டும் விற்றுச் சித்திரம் வாங்கக் கூடாது.

உங்கள் நூலில் குறிப்பிட்டது போல வள்ளுவன் வாக்குப்படி

விசும்பின் துளிவீழின் அல்லால் மற்றாங்கே
பசும்புல் தலை காண்பதரிது’ (குறள் 16)

என்ற கூற்றுக்கு நீங்கள் என்ன பொருள் கொண்டாலும் சரி! எங்கிருந்து பெற்றதாகக் கருதினாலும் சரி. அத்தோடு மக்கள் உழைப்பும் இல்லாவிட்டால் இவ்வுலகில் இயக்கம் எதுவும் இல்லை. நீங்கள் நெல்லை மாவட்ட மானூர் மஹாசபைக் கல்வெட்டைச் சுட்டியது போல், நானும் விருதுநகர் மாவட்ட மானூர் கம்மாளர் செப்பேட்டு வரிகளை உங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன்.

ஆதித்தன் எங்கே அயன் மூவர் தாமெங்கே
வேதச் சொல் எங்கே விளைவெங்கே – நீதிக்குள்
மண்ணாளல் எங்கே வரம்புதானெங்கே
கண்ணாளர் கை விலகினால்’

இதன்படி கண்ணாளர் (கம்மாளர் ஐவர்) என்னும் உழைக்கும் மக்கள் வேலை நிறுத்தம் செய்து விட்டால் சூரியன் உதித்துப் பயனில்லை. பிரம்மா சிவன், விஷ்ணு என்ன ஆவார்கள். வேதம் என்னவாகும் விளைச்சல் இராது. நீதி நிலைக்காது. உங்கள் தர்மம் தங்காது என்றதன் பொருளை உணர்வோம். மொழிச் சண்டை, இனச் சண்டைகளைவோம்.

பாணன் பாறையன் கடம்பன் துடியன்
இது நான்கல்லது குடியும் இல்லை’

என்று புறநானூறு தமிழ்க்குடிகளில் முதல்குடிஎனப் பாணனைக் கூறுகிறது. ஆனால் நீங்கள் அவனை சேரிவாழ்நன் (Outcost) என்கிறீர்கள் உங்கள் நூலில். உங்களுக்கோ ‘பெரும்பாண நம்பி’ என்று பட்டம் சூட்டிக் கொள்கிறீர்கள் சிதம்பரத்தில் நீங்கள் ஆடினால் அது நாட்டியாஞ்சலி. மாரியம்மன் கோயில் கொடையில் ஆடினால் அது கூத்து. எவ்வளவு முரன்பாடுகள் ஐயா.

இயக்குநர் இமயம் பாரதிராசா அண்மையில் ஒரு உரையாடலில் கூறியது போல உண்பது தமிழர் உணவு. சுவாசிப்பது தமிழ்க்காற்று, குடிப்பது தமிழர் நீர். ஆனால் சிந்தனை செயல் எல்லாம் தமிழுக்கும் தமிழர்க்கும் எதிர்மறையாகத்தான். உங்கள் நிறுவனத்தின் பெயர் கூட Tamil Arts Acadamy என ஆங்கிலத்தில். ஆனால் செயல் எல்லாம் தமிழுக்கு விரோதம். பெயர் கூட தமிழ்க்கலைப் பள்ளி என்று இல்லையே? முண்டாசுக்கவிஞன் பாரதியாரின் பாஞ்சாலி சபதத்தில் ஒரு காட்சிதான் எனக்கு நினைவுக்கு வருகிறது. விதுரனைப்பார்த்துத் துரியோதன் சொல்வான்.

ஐவருக்கு நெஞ்சும் எங்கள்
அரமனைக்கு வயிறும்
தெய்வம் அன்று உனக்கே விதுரா
செய்துவிட்ட தேயோ’.

எவ்வளவு பொருத்தமான வரிகள். உங்கள் சிந்தனை, செயல், சொல் எல்லாம் வேதம், சமஸ்கிருதம், ஆரியர், பிராமணர் என்பது தானே. தமிழ், தமிழர், தமிழ்நாடு என்று அதற்கென தனித்துவம் ஏதாவது உண்டா? இல்லையா?

உங்களைப் போன்றவர்களை இன்றைய ஆளும் இந்துத்வ அரசு ஆட்டுவிக்கிறது. பல முனைகளில் பலரைக் கொண்டு பல வேலைகளைச் செய்கிறது. ஓவ்வொரு அறிவு ஜீவிக்கும் ஒருவிலை. அது உங்களுக்கு அளிக்கப்பட்ட விருது. இந்தியாவில் ஒற்றைப் பண்பாடு, ஒற்றை மொழி, ஒற்றைச் சிந்தனையை மையப்படுத்தும் வேலையை நாசிச, பாசிசக் கொள்கைகளை நியாயப்படுத்தும் பிரச்சாரத்தை உங்களைப் போன்றவர்களைக் கொண்டு முடுக்கிவிட்டுள்ளது. ஆய்வு என்ற பெயரில் மொழிவெறி, இனவெறுப்பு ஆகியவற்றைத் தூண்டப்பார்க்கிறது. நீங்களும் அதற்கு ஒரு கருவியாகிவிட்டீர்கள். ஆனால் என்ன முயன்றாலும் இந்திய வரலாற்றையோ, இந்திய தத்துவ மரபையோ ஒற்றைத்தன்மையுடையதாக இந்துத்துவ மயமாக எழுதமுடியாது ஏற்கவும் முடியது. சமணம், பௌத்தம், ஆஜிவகம், லோகாயதம் எனும் பல்வேறு சிந்தனைகளின் கலவையே இந்தியத் தத்துவ மரபு. பல்இன, பன்மொழி, பல்தேசிய இனங்களின் இணைப்பே இந்தியா என்பதை யாராலும் மாற்ற முடியாது.

ஆரியவர்த்தம், ஆரியநாடு, ஆரியர் என்று பேசி புளகாங்கிதம் அடையும் உங்களைப் போன்றோர்க்குத்தான் அன்றே பாரதி பாடினான். ஆரியர்கள் செய்த முன் குறிப்பிட்ட பஞ்சமாபாதகங்களையும் கண்டுதான்,

ஆரியர்கள் வாழ்ந்திருந்த அற்புத நாடென்பது போய்
பூரியர்கள் வாழ்ந்திருக்கும் புலைத்தேசம் ஆயினதே’

என்று பாடினான். இதனைப் புலைத்தேசம் ஆகியதே ஆரியர்கள் தான் அய்யா?

இதையெல்லாம் மனதில் கொண்டு தான் உங்களைப் போன்ற திரிபுவாதிகள் என்றேனும், எவரேனும் வருவார்கள், வள்ளுவனை, அவன் குறளை, அவன் நோக்கத்தைச் சிதைப்பார்கள் என்று கருதித்தான் அன்றே ஒருவன் எழுதி வைத்தான், மீண்டும் அதைச் சொல்கிறேன்.

“வள்ளுவர் செய் திருக்குறளை மருவற நன்குணர்ந்தோர்கள்
உள்ளுவரோ மநு ஆதி ஒரு குலத்துக்கு ஒரு நீதி’

எனவே குறளை மீண்டும் மீண்டும் மருவறப் படியுங்கள். உண்மை விளங்கும்.

இறுதியாக, திரு. நாகசாமி அவர்களின் ‘Thirukkural An Abridgement of Sastras’ என்னும் நூலுக்கான எனது எதிர் வினையே இக்கட்டுரை. அவர் மீதும் அவரது அறிவாற்றலின் மீதும், உழைப்பின் மீதும் மிகுந்த மதிப்பும் மரியாதையும் கொண்டுள்ள அவரின் மாணவன் நான். எனது இன்றைய வளர்ச்சிக்கு அவரது பங்கும் உண்டு என்பதை மறவேன்.

அவர் பிராமணர் என்பதற்காக இந்நெட்டுரையை நான் எழுதவில்லை. அவரது நூலின் உள்ளடக்கம் என்னை எதிர் வினையாற்றத் தூண்டியது. பண்பாட்டுக் கலப்பு என்பது ஒருவழிப் பாதையல்ல. தெற்கிலிருந்தும் அது பயணித்திருக்கலாம் என்பது என் கருத்து. உலகெங்கும் வாழும் எண்ணற்ற எனது பிராமண நண்பர்கள் என்னைப் புரிந்து கொள்வார்கள் என நம்புகிறேன் பிராமணர்கள் மீதும் சமஸ்கிருதத்தின் மீதும் எனக்கு வெறுப்பு இல்லை. இந்நெட்டுரையில் அதீதமாக எதுவும் நான் கூறியிருந்தால் எனது பிராமண நண்பர்களும் எனது முன்னாள் அலுவலக தோழர்களும் என்னை மன்னிப்பார்களாக.

— முத்தமிழ் வேந்தன்

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: