ஆசியாவிலேயே தீயணைப்புத் துறையில் பணியாற்றும் முதல் சிறுபான்மை சமூகப் பெண்!

ஆசியாவிலேயே தீயணைப்புத் துறையில் பணியாற்றும் முதல் சிறுபான்மை சமூகப் பெண்!

ஆசியாவிலேயே தீயணைப்புத் துறையில் பணியாற்றும் முதல் சிறுபான்மை சமூகப் பெண்!

தீயணைப்புத் துறை வேலையென்றால் ஆபத்தானது, பெரிய அங்கீகாரம் இல்லாதது என்ற நினைப்பால் ஆண்களே வேலைக்குத் வர தயங்கும்போது சிறுபான்மைசமூகத்தைச் சேர்ந்த ஆரிஃபா, தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை அதிகாரியாகப் பணியாற்றிவருகிறார்.

சவால் நிறைந்த துறைகளில் பணியாற்றும் பெண்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. அவர்களில் சிறுபான்மைசமூகப் பெண்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். ஆனால், பாறையை உடைத்துவிடும் சிற்றுளிபோல் தடைகளைத் தாண்டி சாதிக்கும் பெண்களும் இருக்கவே செய்கிறார்கள். அவர்களில் ஒருவர் ஆரிஃபா.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்.


ஆசியாவின் முதல் பெண்

சென்னை விருகம்பாக்கம் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி நிலையத்தில் பணியாற்றிவரும் ஆரிஃபா, திருநெல்வேலி மாவட்டம், மணலிவிளை கிராமத்துக்காரர். சிறுவயதிலேயே துணிச்சலுடன் வளர்ந்த ஆரிஃபா, பத்து வயதிலேயே பைக் ஓட்டி கிராமத்து மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளாராம். தமிழ்நாடு அரசுப் பணித் தேர்வாணையம் நடத்திய தேர்வில் தேர்ச்சி பெற்று மாவட்டக் காவல் கண்காணிப்பு நேர்முக உதவியாளராகத் தன் முதல் பணியை ஆரிஃபா தொடங்கினார். சுமார் ஒன்றரை ஆண்டுகள் நேர்முக உதவியாளராக இருந்தவர், ஆசியாவிலேயே தீயணைப்புத் துறையில் பணியாற்றும் முதல் சிறுபான்மைசமூகப் பெண் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

ஐந்து குழந்தைகளின் தாய், தீயணைப்புத் துறையில் சவாலான பணி என இரண்டையும் எப்படிச் சமாளிக்க முடிகிறது என்று கேட்டால், “எதையும் சுமையாக நினைத்தால் சாதிக்க முடியாது” என்கிறார் புன்னகையோடு. பெண்களுக்குத் தைரியமும் தன்னம்பிக்கையும் அவசியம் என்கிறார் இவர்.

ஆரிஃபாவைச் சந்தித்தபோது, சென்னை ராமாபுரத்தில் எட்டு அடி ஆழமுள்ள உறைகிணற்றில் தவறி விழுந்த பசுவை உயிருடன் மீட்டுவிட்ட மகிழ்ச்சியில் இருந்தார். “மனித உயிர்களைக் காப்பாற்றுவது மட்டும் எங்கள் பணியல்ல. இயற்கைப் பேரிடர்களின்போது பாதிக்கப்படும் அனைத்து உயிர்களையும் பத்திரமாகக் காப்பாற்றுவதும் எங்களுடைய பணிதான். நாங்கள் மீட்ட இந்தப் பசு கர்ப்பமாக இருந்ததால், கூடுதல் கவனத்துடன் அதனை மீட்டோம். அது மட்டுமல்லாது தீத்தடுப்புச் சாதனங்கள் உரிய முறையில் வைக்கப்பட்டிருக்கின்றனாவா என்பதை ஆய்வுசெய்து தொழிற்சாலை, பள்ளிக்கூடம், மருத்துவமனை மற்றும் பல பொது இடங்களுக்கு உரிமம் வழங்குவது எங்களது கூடுதல் பணி. முதலுதவி குறித்தும் மக்களிடம் விழிப்புணர்வையும் ஏற்படுத்திவருகிறோம்” என்கிறார் ஆரிஃபா.

“கடந்த ஆண்டு ராமாபுரத்தில் நள்ளிரவு திடீரென ஒரு வீட்டில் தீப்பற்றிய செய்தி அறிந்து அங்கு விரைந்தோம். அந்த வீட்டில் இருப்பவர்கள் தீப்பற்றியதுகூடத் தெரியாமல் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தனர். அந்த வீட்டில் இருப்பவர்கள்,முதியவர்கள் என்று அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்கள் இத்தகவலைத் தெரிவித்ததும் அவர்களைப் பத்திரமாக மீட்க வேண்டும் என்ற பரபரப்பு தொற்றிக்கொண்டது. புகையில் மூச்சுத் திணறி உயிரிழப்பதற்கு முன்பு அவர்களை மீட்க வேண்டும் என்பதால் அதிரடியாக வீட்டுக் கதவை உடைத்து அவர்களைப் பத்திரமாக மீட்டது பெரும் சவாலாக இருந்தது.

அதே போல் தீ விபத்தின்போது தீயில் சிக்கியோ காயமடைந்தோ இறப்பவர்களைவிட, புகையில் மூச்சுத் திணறி உயிரிழப்பவர்களே அதிகம். அதனால், உரிய நேரத்தில் தாமதமின்றி முடிவெடிக்க வேண்டியது அவசியம்” என்று சொல்லும் ஆரிஃபா, தங்களது பணியைப் பற்றி முழுமையாக அறியாதவர்கள் தீ விபத்து, புயல், வெள்ளம் போன்ற பேரிடர் காலங்களில் தங்கள் பணியை வியந்து பாராட்டுவார்கள் என்பதையும் குறிப்பிடுகிறார். சென்னையை வார்தா புயல் தாக்கியபோது ஓராண்டில் பார்க்கும் வேலையைச் சில நாட்களில் கொஞ்சம்கூடத் தொய்வில்லாமல் பார்த்ததையும் குறிப்பிடுகிறார்.

“எல்லோருக்கும் வாழ்க்கை என்பது போராட்டம்தான்” என்று சொல்லும் ஆரிஃபா, சவால்கள் நிறைந்த துறையைத் தேர்ந்தெடுத்ததில் வியப்பேதும் இல்லை.

  • தி இந்து
Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: